Ad

வெள்ளி, 14 ஜனவரி, 2022

கொரோனா கட்டுப்பாடுகள்... மும்பையில் தமிழர்கள் பொங்கல் விழாவை, திறந்தவெளியில் கொண்டாடத் தடை!

மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் தமிழர்கள் தாராவி, சயான், செம்பூர், பாண்டூப், கோரேகாவ் போன்ற இடங்களில் பிரமாண்டமாக பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனாவைக் காரணம் காட்டி, திறந்தவெளியில் பொங்கல் விழா கொண்டாட போலீஸார் தடைவிதித்துள்ளனர். இதனால் பொங்கல் விழா மும்பையில் களையிழந்து காணப்படுகிறது.

மும்பையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தாராவி 90 அடி சாலையில் ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானைகளில் ஒரே நேரத்தில் பெண்கள் கூடி பொங்கலிடுவது வழக்கம். இந்தப் பொங்கல் விழாவை இந்து யுவசேனா மற்றும் இதர தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து கொண்டாடுவது வழக்கம். பொங்கல் கொண்டாடவரும் பெண்கள் அனைவருக்கும் பானை, பொங்கல் வைப்பதற்கான பொருள்கள் அனைத்தும் இலவசமாக கொடுக்கப்படும்.

`தாராவியில் வந்து குவிந்துள்ள கரும்பு

இதே போன்று தாராவி 60 அடி சாலையில் `மும்பை விழித்தெழு' இயக்கம் சார்பாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம். இது குறித்து விழித்தெழு இயக்க நிர்வாகி ஸ்ரீதரிடம் கேட்டதற்கு, ``நாங்கள் 2009-ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் சமத்துவப் பொங்கல் கொண்டாடிவருகிறோம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பொங்கல் விழா கொண்டாட போலீஸார் தடைவிதித்துள்ளனர். இதனால் சம்பிரதாயமாக ஒரு பானையில் மட்டும் பொங்கலிட்டு விழாவைக் கொண்டாட முடிவுசெய்துள்ளோம். அதுவும் கொரோனாவுக்குப் பிறகு பத்திரிகை படிப்பது வெகுவாக குறைந்துள்ளது. எனவே பத்திரிகை படிப்பதை வலியுறுத்தும்விதமாக இப்பொங்கலைக் கொண்டாடவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதே போன்று செம்பூர் காமராஜர் சாலையில் ஒவ்வோர் ஆண்டும் தமிழர் பாசறை சார்பாக பொங்கல் விழாவோடு, தமிழர்களின் கலாசாரத்தைப் பறைசாற்றும்விதமாக தமிழர்களின் விளையாட்டுப் போட்டிகளையும் சேர்த்து நடத்துவது வழக்கம். இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி ஏ.பி.சுரேஷிடம் கேட்டதற்கு, ``கொரோனா விதிகளுக்கு கட்டுப்பட்டு இந்த ஆண்டு பொங்கல் விழாவைக் கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

பொங்கல் திருநாள்

சயான் கோலிவாடாவில் எம்.எல்.ஏ தமிழ்செல்வம் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அவரும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொங்கல் விழா கொண்டாடவில்லை. பாண்டூப்பில் தமிழ்ச் சங்கம் சார்பாக ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொங்கல் ஏற்பாடுகள் குறித்து அதன் தலைவர் தாசனிடம் கேட்டதற்கு, ``பொங்கல் முடிந்த பிறகு 23-ம் தேதி மிகவும் எளிய முறையில் கொண்டாடவிருக்கிறோம். போலீஸார் அனுமதி கொடுக்காததால் எளிமையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார். அதேசமயம் தனிப்பட்ட முறையில், வழக்கமான உற்சாகத்துடன், தமிழர்கள் பொங்கல் கொண்டாடுவது தாராவியில் அவர்கள் பொங்கல் பொருள்களை வாங்குவதிலிருந்தே தெரிகிறது.



source https://www.vikatan.com/news/india/corona-restrictions-ban-for-celebrating-pongal-in-the-open-place-in-mumbai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக