Ad

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றிய வீரபாண்டிய கட்டபொம்மனின் கதை! | ஒன்று, இன்று, நன்று - 3

262 வருஷங்களுக்கு முன்னாடி, இதே நாள்ல நிகழ்ந்த ஒரு பிறப்பு, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியதுன்னா அது மிகையில்ல. தூத்துக்குடி மாவட்டத்தில இருக்க பாஞ்சாலங்குறிச்சியில 1760 ஜனவரி 3-ம் தேதி ஜெகவீரன் - ஆறுமுகத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தது அந்தக் குழந்தை. குழந்தைக்கு வீரபாண்டியன்னு பேர் வச்சாங்க. குடும்பப் பெயரான கட்டபொம்மன்னும் சேர்ந்து, பின்னாளில் வீரத்துக்கு அடையாளமாக வீரபாண்டியக் கட்டபொம்மன் என்றழைக்கப்பட்டது அந்தக் குழந்தை.

கட்டபொம்மன்

சுதந்திரப் போராட்டம்னா நினைவுக்கு வர்ற முதல்பெயர் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். சென்னையில் கால்பதித்த ஆங்கிலேயர் தென்னிந்திய மண் பரப்புமுழுவதையும் ஆட்கொள்ளத் துடிச்சபோது இந்த மண்ணுக்கு அரணாக நின்னு துணிச்சலா எதிர்த்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் கொடுத்த துணிவால் தென்னிந்தியாவை நிர்வகித்த பல பாளையக்காரர்களும் ஆங்கிலேயர்களை எதிர்த்தாங்க. அதனால் வெள்ளையர்களின் இலக்கானார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

Also Read: பத்ம விருதுகளின் கதை உங்களுக்குத் தெரியுமா?! | ஒன்று, இன்று, நன்று - டெய்லி சீரிஸ் - 2

கட்டபொம்மன் மரபுக்கு மிக நீண்ட வரலாறு இருக்கு. இப்போது ஒட்டப்பிடாரம்னு அழைக்கப்படுற அழகிய வீரபாண்டியபுரத்தை ஆண்ட ஜெகவீரபாண்டிய நாயக்கரின் அரசவைல கெட்டிப்பொம்முங்கிறவர் இடம்பெற்றிருந்தார். ஜெகவீர பாண்டியனின் நம்பிக்கையைப் பெற்ற கெட்டிபொம்மு ஜெகவீரபாண்டியனுக்குப் பிறகு மன்னராக நியமிக்கப்பட்டார். அவர் மரபில் வந்தவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இவரை மக்கள் பொம்மு நாயக்கர்ன்னு அழைச்சாங்க.

கட்டபொம்மன்
கட்டபொம்மனுக்கு ஊமைத்துரை, துரைச்சிங்கம்னு இரண்டு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணுன்னு இரண்டு சகோதரிகளும் இருந்தாங்க. வீரசக்கம்மாள்ங்கிறவங்களை கட்டபொம்மன் திருமணம் செய்துகிட்டார்.

கட்டபொம்மனுக்கு முப்பது வயசு வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன், பாளையக்காரராக இருந்துவந்ததால, தந்தைக்கு உதவியாக இருந்தார். பிறகு, பிப்ரவரி 2-ம் தேதி, 1790-ம் வருஷத்துல, 47-வது பாளையக்காரராக அரியணை ஏறினார் கட்டபொம்மன். 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாள்கள் அரசுப் பொறுப்பிலிருந்த கட்டபொம்மனுக்கு வாரிசுகள் இல்லை.

கட்டபொம்மன் கோட்டை

திருநெல்வேலியை சுத்தி இருக்க பாளையக்காரர்கள் எல்லார்கிட்டயும் வரி வசூலிக்கணும்னு எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாக கலெக்டர்களை நியமிச்சாங்க. இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்துவராம, எதிர்த்து நின்னாங்க. அவங்களை ஒழிக்க நினைச்ச ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களை ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரிகளாக்கும் வகையில பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டாங்க. ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தத் தொடங்க, அவர்களுக்குப் பல சலுகைகள் தரப்பட்டன. எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்தத்தோடு கடுமையான, தண்டனையும் வழங்கப்பட்டது.

Also Read: ஆங்கிலப் புத்தாண்டும், அதன் மாதங்களும் உருவான கதை! ஒன்று, இன்று, நன்று - டெய்லி சீரிஸ் - 1

கி.பி. 1797-ல் முதன்முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று தெறிச்சு ஓடினார். ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைச்சார். கட்டபொம்மனை அவமானப்படுத்தனும்னு கங்கணம் கட்டிகொண்டு திரிந்தார் ஜாக்சன் துரை. ஆனால் கட்டபொம்மன் அனைத்தையும் பந்தாடினார். வரியை கேட்டு வந்த துரையிடம் 'மாமனா? மச்சானா?' என வீர முழக்கமிட்டார் கட்டபொம்மன்.

கட்டபொம்மன் கோட்டை

அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கோழைத்தனமாக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டான். மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளின்னு பழி சுமத்திச்சு ஆங்கிலேயே நிர்வாகம். கட்டபொம்மன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுக்கவும் இல்ல, உயிர்ப்பிச்சை கேட்கவும் இல்லை. கம்பீரத்தோடு, “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, வெள்ளைத் தோல்களுக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்”ன்னு வீர முழக்கமிட்டு தூக்குமேடையேறினார்.

தூக்குமேடைலயும், அவரது பேச்சில வீரமும், தைரியமும் நிறைஞ்சிருந்துச்சு. இது சுத்தி நின்ன அனைவரின் உள்ளத்திலும் பெருமையை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு நான் செத்திருக்கலாம்"ன்னு கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார். தூக்குக் கயிற்றுக்கு புன்னகையுடன் முத்தமிட்டார். அக்டோபர் 19-ம் தேதி, 1799-ம் ஆண்டு கயத்தாறு கோட்டையிலே ஒரு புளிய மரத்தில, 39-வது வயதில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறுல அவருக்கு நினைவிடம் எழுப்பப்பட்டிருக்கு. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடிய கட்டபொம்மன், நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.

வீரபாண்டிய கட்டபொம்மன்
இவரது வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ்ப் புராணங்கள், காவியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கிராமியக் கதைகள் எல்லாத்துலயும் இடம்பெற்றிருக்கு. 1959-ல பி.ஆர்.பந்துலு தயாரிப்பில கட்டபொம்மனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், தமிழக மக்களின் நெஞ்சங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நீங்கா இடத்தைப் பெற்றுத் தந்துச்சு!


source https://www.vikatan.com/literature/nostalgia/the-story-of-veerapandiya-kattabomman-and-his-fight-against-the-british

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக