Ad

வெள்ளி, 14 ஜனவரி, 2022

"முன்னாடியெல்லாம் ஒரு ஹிட் நாலு ப்ளாப்பைத் தாங்கும்; ஆனா இப்போ..."- மனம் திறக்கும் ஜெய் 2.0

அறிமுக படத்திலேயே கவனம் ஈர்த்து, 'இவரின் அடுத்தப் படம் என்ன?' என்ற கேள்வியும் ஆர்வமும் வருவது வெகு சில ஹீரோக்களுக்கு மட்டுமே. அந்த லிஸ்ட்டில் நிச்சயம் ஜெய் இருப்பார். நல்ல ஹிட் படம் ஒன்று கொடுப்பார், பிறகு சைலன்ட் மோடுக்கு போய்விடுவார். மீண்டும் ஒரு ஹிட், சைலன்ட் மோட் என்பதுதான் ஜெய்யின் கரியர் கிராஃப். இப்போதும் 'ஜெய்யின் அடுத்தப் படம் என்ன?' என்ற கேள்வியும் ஆர்வமும் இருக்கிறது. கைவசம் ஏழெட்டு படங்கள் வைத்திருக்கும் ஜெய், இயக்குநர் சுசீந்திரனுடன் மூன்றாவது முறையாக இணைகிறார். அந்தப் படத்தின் போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தவரை சந்தித்தேன்.

இயக்குநர் சுசீந்திரன் கூட தொடர்ந்து மூன்று படங்கள் பண்ணியிருக்கீங்க. எப்படி இருக்கு இந்த பயணம்?

’சிவசிவா’ படத்துல இசையமைப்பாளராகவும் வேலை செஞ்சிருக்கீங்க. எப்படி நடந்தது?

’மாநாடு’ படத்துல கேமியோ ரோல்ல வருவீங்கன்னு எதிர்பார்த்தோம். வெங்கட் பிரபு கூப்பிட்டாரா?

இடையில மம்மூட்டியுடன் ’மதுர ராஜா’னு ஒரு மலையாள படத்துல நடிச்சிருந்தீங்க. அந்த அனுபவம் எப்படியிருந்தது?

சமீபமா எந்த கிசுகிசுவும் உங்களைப் பத்தி வர்றதில்லையே

எப்போ திருமணம்?

- உள்ளிட்ட கேள்விகளுக்கு ஜெய் சொன்ன பதில் இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றிருக்கிறது. கீழே அதற்கான லிங்க்...

Also Read: ‘மாநாடு’ படத்தை மிஸ் பண்ணிட்டேன்!

நீங்க எந்த மாதிரியான கதைகள் எதிர்பார்க்குறீங்க? உங்களுக்கு என்ன மாதிரியான கதைகள் வருது?

நடிகர் ஜெய்

"ஆக்‌ஷன் கதைகளும் காமெடி கதைகளும்தான் நிறைய வருது. இப்போ லாக்டெளனுக்கு பிறகு, நான் ஒப்பந்தமாகியிருக்கிற படங்கள் எல்லாம் இதுவரை நான் பண்ண பழைய பேட்டர்ன்ல இருக்காது. இன்னும் சொல்லணும்னா, 'ராஜா ராணி'க்குப் பிறகு, நான் பண்ணின படங்கள் மாதிரி இல்லாமல் நடிக்கிறதுக்கு முக்கியத்துவம் இருக்கிற கதைகளா இருக்கணும்னு நினைச்சு கதைகள் கேட்டுக்கிட்டு இருக்கேன். ஆறேழு வருஷத்துக்கு முன்னாடியான மக்களுடைய ரசனையும் இப்போ இருக்கற ரசனையும் நிறையவே மாறியிருக்கு. எல்லோரும் எல்லா ஊர் படங்களையும் பார்க்குறாங்க. அதனால, அவங்களை இனிமே ஏமாத்த முடியாது. எனக்கு 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அர்ஜுன் ரெட்டி' மாதிரி முழுக்க முழுக்க ஒரு லவ் படம் பண்ணணும்னு ரொம்ப ஆசை இருக்கு."

நீங்க எந்தப் படம் நடிச்சாலும் ’ஜெய் கம்பேக்’னு சொல்றாங்களே! இதெல்லாம் கவனிக்கிறதுண்டா?

‘’ ’சுப்ரமணியபுரம்’ படத்துக்குப் பிறகு, நாலு படங்கள் சரியா போகலை. அப்புறம், ‘எங்கேயும் எப்போதும்’ வந்தவுடன் கம்பேக்னு சொன்னாங்க. அப்புறம் ‘ராஜா ராணி’ வந்தவுடன் கம்பேக்னு சொன்னாங்க. ’சென்னை 28 பார்ட் 2’ வந்தவுடன் மறுபடியும் கம்பேக்னாங்க. அவங்களுக்கு என்னன்னா, எல்லா படங்களும் சூப்பர்ஹிட்டாகணும். அப்படி சூப்பர் ஹிட்டாகலைனாலும் நம்மளை பத்தி பேசிக்கிட்டே இருக்கணும். நானும் பெருசா மீடியா முன்னாடி பேட்டியெல்லாம் அடிக்கடி தரமாட்டேன். அதனால, எப்போ என் படம் வந்தாலும் கம்ப்பேக்னுதான் சொல்வாங்க. இவன் வந்தா என்னா வரலைனா என்னனு நினைக்காமல் நம்மளை எதிர்பார்க்கிறாங்க அப்படிங்கிறதே சந்தோஷமா இருக்கு. இப்போ இருக்கிற சூழல்ல ஒவ்வொரு படத்தையும் ப்ளாக் பஸ்டராக்க போராட வேண்டியதா இருக்கு. முன்னெல்லாம் ஒரு ஹிட் நாலு ப்ளாப்பை தாங்கும்னு சொல்லுவாங்க. இப்போ அப்படியில்லை. நாலு ஹிட் ஒரு ப்ளாப்பைத் தாங்கலாம்.’’

கொஞ்ச இடைவெளிக்குப் பிறகு, மறுபடியும் கார் ரேஸிங்ல இறங்கிட்டீங்க. எப்படி இருக்கு?

நரேன் கார்த்திகேயன் - ஜெய்

’’2017ல கடைசியா கலந்துக்கிட்டேன். 15ல ஆரம்பிச்சு 6வது இடத்துக்குள்ள வந்துடுவேன். அதுக்கு பிறகு, மூணு வருஷம் கேப் விழுந்திடுச்சு. இப்போ போனவுடன் ரொம்ப மோசமா இருந்தது என் பர்ஃபாமென்ஸ். அந்த டச்ல இருக்கணும். தவிர, ரேஸிங் ட்ராக்குடைய நிலைமை, வெதர், இன்ஜின் மாறியிருக்கும்னு நிறைய விஷயங்கள் இருக்கு. அதை புரிஞ்சுக்கவே நேரமாகிடும். இந்த கார் என்ன பண்ணும்னு முழுக்க தெரிஞ்சுக்கவே பத்து ரேஸ் தேவைப்படும். எனக்கு எப்போவுமே வருண் மணியன் அவர்தான் ஸ்பான்சர். அவருடைய நண்பர்தான் நரேன் கார்த்திகேயன். அவர் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். சின்ன சின்ன நுணுக்கங்கள் எல்லாம் சொல்லிக்கொடுத்தார். எந்த சந்தேகம்னாலும் கேளுங்கனு சொல்லிட்டு, ஒரு பயிற்சியாளரையும் எனக்கு அறிமுகப்படுத்திட்டு போனார். நரேன் கார்த்திகேயன் அறிமுகம் கிடைக்கிற வரைக்கும் 15ல ஆரம்பிச்சு 15லதான் முடிப்பேன். அவருடைய ட்ரெயினிங் கிடைச்ச பிறகு, 15ல ஆரம்பிச்சு 5, 6ல முடிக்க முடிஞ்சது. பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கார். இனிமே என்னை அடிக்கடி ரேஸிங்ல பார்ப்பீங்க.’’

ஆரம்பத்திலிருந்து இப்போவரை உடம்பை அப்படியே வெச்சிருக்கீங்களே!

‘’நீங்க வேற லாக்டெளன்ல 86 கிலோவுக்கு போயிட்டேன். எனக்கே பயமாகிடுச்சு. அப்புறம் ரேஸிங் பண்ணணும்னு அதை 69 கிலோவா குறைச்சேன். ’கலகலப்பு 2’, ’சென்னை 28 - 2’ இந்தப் படங்கள்ல எல்லாம் நான் கொஞ்சம் குண்டா இருப்பேன். வெயிட் எல்லையைத் தாண்டுனா எனக்கு அலார்ம் அடிச்சிடும். அப்புறம் உடனே குறைச்சிடுவேன். ’வலியவன்’ பண்ணும்போது என் ஜிம் ட்ரெயினர் என்கிட்ட, ‘நம்ம ஒரு வேளை சாப்பிட்டா, மூணு நாள் தாங்கும்’னு சொன்னார். அது என் மைண்ட்ல செட்டாகிடுச்சு. அதனால, எப்போ பசிக்குதோ அப்போ மட்டும்தான் சாப்பிடுவேன். மூணு வேளையும் சாப்பிடணும்னு எனக்கு கட்டாயமில்லை. அப்பப்போ சிவா, வைபவ் கூட கிரிக்கெட் விளையாடுவேன், அவ்ளோதான்.’’

நடிகர் ஜெய்

உங்க நண்பர் சிம்பு இப்போ பயங்கர சேஞ்ச் ஓவர் கொடுத்திருக்காரே!

’’2020 லாக்டெளன்ல ரெண்டு மாசம் அமைதியா இருந்தோம். அப்புறம் நான் வாக்கிங் போறேன்னு சொன்னதும் அவரும் வீட்டை சுத்தி வாக்கிங் ஜாக்கிங் பண்ண ஆரம்பிச்சார். எப்போ ஷூட்டிங்னு தெரியலை. அதுவரைக்கும் சும்மாதானே இருக்கப்போறோம்னு விளையாட்டா ஜிம்முக்குப் போக ஆரம்பிச்சோம். முதல் நாளே ஆறு மணி நேரம் வொர்க் அவுட், பேட்மிண்டன், ஸ்விம்மிங்னு பண்ணிட்டோம். வெளியே வந்தவுடன் ஒத்துக்காமல் வாந்தி வர ஆரம்பிச்சிடுச்சு. போதும்டா யப்பானு வீட்டுக்குப் போய் தூங்கிட்டோம். மறுநாள் சிம்புக்கிட்ட ரெடியானு கேட்டேன். அவரும் ரெடினு சொன்னார். அப்படியே வொர்க் அவுட் ஆரம்பிச்சிட்டோம். சிம்புவை எனக்கு 2002ல இருந்து தெரியும். யார் அவரை என்ன பேசினாலும் ‘நான் வருவேன்’ அப்படிங்கிற ஒரு நம்பிக்கையும் வேகமும் எப்போவுமே இருக்கும். சும்மா வாய் வார்த்தையா சொல்லாமல் நிறைய பிளான் பண்ணி வெப்பார். அதை ஆக்டிவேட் பண்ணதான் கொஞ்சம் லேட்டாகும். அவர் பிளான் பண்ணினது ஆக்‌ஷனா மாறினதை நான் இப்போதான் பார்த்தேன். ’இந்த ஆக்‌ஷன்ல இறங்கிட்டா, மறுபடியும் நீங்க பின்னாடி போகாதீங்க. அடிச்சுக்கிட்டே இருக்கணும்’னு சொன்னேன். இப்போ கலக்கிட்டு இருக்கார். எனக்கு அப்போ கையில ஒரு படம்தான் இருந்தது. இப்போ ஒன்பது படங்கள் இருக்கு.’’

நீங்க சினிமாவுக்கு வந்து 20 வருஷமாகப்போகுது. நிறைவேறாத ஆசைனு ஏதாவது இருக்கா?

நடிகர் ஜெய்

‘’இயக்குநர்கள் செல்வராகவன், கெளதம் மேனன், முருகதாஸ் இவங்க படத்துல நடிக்கணும்னு ஆசை. அவங்கக்கூட படம் பண்ணணும்னா நம்ம அவங்க லீகிற்குப் போகணும். நான் அந்த லீகுல இருந்தேன்னா, அது எனக்கு நிறைவேறாத ஆசைனு சொல்லலாம். நான் இன்னும் அந்த லீகிற்கே போகலை. அதனால, இது பெரிய ஆசைதானே தவிர, நிறைவேறாத ஆசையில்லை. ஒரு நாள் அந்த இடத்துக்குப் போவேன். முன்னாடி, செல்வராகவன் சார் இயக்கத்துல நடிக்கிறதுக்கான ஒரு வாய்ப்பு அமைஞ்சது. ஆனா, அந்த ப்ராஜெக்ட் நடக்கலை.’’

ரிலேஷன்ஷிப் பத்தி உங்களுடைய பார்வை என்ன?

’’அரேஞ்ட் மேரேஜை விட லவ் மேரேஜ்தான் பெட்டர். அப்புறம் ஏன் லவ் மேரேஜ் பண்ணி விவாகரத்து நடக்குதுனு கேட்பாங்க. அது அந்தந்த லவ்வை பொறுத்தது. லவ் அப்படிங்கிறது ஒண்ணுதான் உண்மை. உண்மையா இருந்துட்டாலே அது உடையாது. சின்ன சண்டைக்குப் பயந்து பொய் சொல்ல ஆரம்பிக்கிறாங்க. அங்கதான் எல்லாம் மாறுது. மூடி மறைக்கிறதனாலதான் காதல் கலங்குது. ரொம்ப உண்மையா இருந்தா அந்தக் காதல் நிலைச்சு நிற்கும். லிவிங் டுகெதர் இப்போ ரொம்ப பொதுவாகிடுச்சு. அதுல உண்மையா இருந்தா தப்பில்லை. கடைசி வரைக்கும் இவங்கக்கூட மட்டும்தான்னா தப்பில்லை. ஒரு மூணு வருஷத்துக்கு நம்ம லிவின் ரிலேசன்ஷிப்ல இருப்போம் வாங்கனு சொல்றது தப்பு. எந்த ரிலேஷன்ஷிப்னாலும் அடிப்படை ஒண்ணுதான், உண்மை.’’

இதுக்குப் பிறகு ஜெய்யை நாங்க எப்படிப் பார்க்கலாம்?

நடிகர் ஜெய்

‘’நிச்சயமா இதுக்குப் பிறகு என் நடிப்புல பக்குவத்தை பார்க்கலாம். இதுவரை பக்கத்து வீட்டுப் பையன் இமேஜ்ல ஜாலியா ஒண்ணு பண்ணிக்கிட்டிருந்தேன். அந்த ஜாலி எப்போவும் இருக்கும். பர்ஃபாமென்ஸ்ல என்னுடைய மெனக்கெடல் தெரியும். இப்போ நான் நடிச்ச படங்கள் பார்க்கும்போது, என்ன இவ்வளவு கொடுமையா இருக்குனு தோணுச்சு. ஒவ்வொரு சீனையும் பார்க்கும்போது இதை இன்னும் இப்படிப் பண்ணியிருக்கலாமேனு தோணுது. அந்த வயசுல ஜாலியா இருந்துட்டோம். சினிமாங்கிறது விளையாட்டு இல்லைனு புரியுது.’’

அடுத்தடுத்து என்னென்ன படங்கள்?

’’'பார்ட்டி’, சுசி சார்கூட ‘குற்றம் குற்றமே’, சிவசிவா’, இன்னொரு புது ப்ராஜெக்ட், ’எண்ணித்துணிக’, கோபி நயினார் சார் இயக்கத்துல ’கருப்பர் நகரம்’ இன்னும் 20% ஷூட் இருக்கு, ’பட்டாம்பூச்சி’, சுந்தர்.சி சார் இயக்கத்தில் ஜீவாவுடன் ஒரு படம், அட்லி தயாரிப்புல ஒரு படம், ரோஹின் வெங்கடேஷ் இயக்கத்துல ஒரு படம் இருக்கு.’’



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-jai-exclusive-interview-about-his-career-and-comeback

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக