Ad

வியாழன், 9 செப்டம்பர், 2021

Tamil News Today: `தமிழ்நாடு வரவேற்கிறது' ; `தமிழ்நாடு வாழ்த்தி வழியனுப்புகிறது’ - ஆளுநர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

புதிய ஆளுநர்...தமிழக தலைவர்கள் வாழ்த்து!

நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். கேரள கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி, இந்திய உளவுத்துறையான ஐ.பி சிறப்பு இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கி்றார்.

ஆளுநர் ஆர்.என் ரவி

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ``தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!” என ட்வீட் செய்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

மேலும், ``பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!” என தமிழக ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித்-க்கு வாழ்த்து செய்தியும் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமி, பன்வாரிலால்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``கேரளாவில் சிறந்த காவல்துறை தலைமை அதிகாரியாகவும், நாகலாந்து மாநில ஆளுநராகவும் சிறப்பாக பணியாற்றி தற்பொழுது தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள பீகாரை சேர்ந்த ஓய்வு பெற்ற IPS அதிகாரியான மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றவர், ``தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி, தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்க உள்ள மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு என் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-10-09-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக