Ad

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

ENGvIND|வெளுத்துக்கட்டிய ஷர்துல்... சவால்விடும் இங்கிலாந்து... பரபரப்பான இறுதிநாளில் ஓவல் டெஸ்ட்!

ஓவல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. ஷர்துல் தாகூரின் மிரட்டலடியால் இந்தியா 368 ரன்களை இங்கிலாந்துக்கு டார்கெட்டாக நிர்ணியித்திருக்கிறது. சேஸிங்கை தொடங்கிய இங்கிலாந்து 77 ரன்களுக்கு விக்கெட் எதையும் இழக்காமல் சிறப்பாக ஆடி வருகிறது. உறுதியாக ரிசல்ட் கிடைத்துவிடும் என்கிற பரபரப்போடு இறுதி நாளுக்கு ஆட்டம் சென்றிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய நாளில் கவனம் ஈர்த்த சில தருணங்கள் இங்கே!

கோலியின் டிரைவ்கள்!

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு பேட்டை விட்டு தொடர்ந்து அவுட் ஆகிறார் கோலி. 2014-ல் இருந்த அனுபவமற்ற கோலியாகவே இன்னமும் இருக்கிறார் என கோலி மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. கவர் டிரைவே ஆடாமல் இரட்டை சதமடிக்கும் சச்சின் பொறுமையும் பக்குவமும் கோலிக்கு எப்போதுதான் வாய்க்கும்? என சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதனால், இந்த நான்காவது டெஸ்ட்டில் கோலி டிரைவ் ஆடுவதை முடிந்தளவுக்கு தவிர்ப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

கோலி ENGvIND
ஆனால், 'டிரைவ் ஆடுறதுதான் பிரச்சனைனா... நான் டிரைவ் ஆடுவேன்டா ஸ்டைலா... கெத்தா!' என கபாலி மாதிரி கர்ஜனையோடு தொடர்ந்து டிரைவ்களை ஆடியிருந்தார். நேற்றும் ஆண்டர்சனை கூட விட்டு வைக்கவில்லை.

எக்ஸ்ட்ரா கவரில் செம க்ளாஸாக டிரைவ் ஆடி அசத்தினார். பந்தும் அவ்வளவாக மூவ் ஆகாததால் கோலிக்கு டிரைவ் ஆடுவது ரொம்பவே எளிமையாக இருந்தது. ஆண்டர்சன் மற்றும் ராபின்சனை கோலி டிரைவ் ஆடிய விதத்தை பார்க்கும் போது, 71-வது சதம் வந்துவிடும் போலவே தோன்றியது. ஆனால், இந்த முறை வேகங்களை விடுத்து ஸ்பின்னரிடம் விக்கெட்டை கொடுத்தார் கோலி. மொயின் அலியின் பந்தில் ஃப்ரன்ட் ஃபுட் டிஃபன்ஸ் ஆட முயன்று ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். கோலி 44 ரன்களில் அவுட் ஆன போது இந்தியா 213 ரன்களே லீட் எடுத்திருந்தது. டெய்ல் எண்டர்கள் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டால் அவ்வளவுதான் இங்கிலாந்து எளிதாக வென்றுவிடும் என்ற நிலை இருந்தது. அப்போதுதான் ஷர்துல் தாகூர் எண்ட்ரி கொடுத்தார்.

மாஸ் காட்டிய ஷர்துல் தாகூர்!

முதல் இன்னிங்ஸில் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது அரைசதம் அடித்து காப்பாற்றிவிட்ட ஷர்துல் தாகூர், இரண்டாவது இன்னிங்ஸிலும் அப்படியே ஒரு அரைசதத்தை அடித்தார்.

நிஜமாகவே இந்திய அணியில் அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் ஷர்துல் தாகூருடன் இணைந்து பேட்டிங் பயிற்சி செய்யலாம். அந்தளவுக்கு ஒரு முழுமையான பேட்டிங் திறனை நேற்று ஷர்துல் வெளிப்படுத்தியிருந்தார். 72 பந்துகளில் 60 ரன்கள்.
ஷர்துல் தாகூர் ENGvIND

ராபின்சனின் ஸ்லோயர் ஒன்களை சரியாக பிக் செய்து அவர் தலைக்கு மேலேயே பறக்கவிட்டு சிக்சராக்கியது, டெக்னிக்கலாக 100% சரியான ட்ரிகர் மூவ்மென்ட்டோடு ஆண்டர்சன் பந்தில் அடித்த ஸ்ட்ரெயிட் டிரைவ், மொயின் அலியின் ஸ்பின்னை பேக் ஃபுட்டில் சென்று லேட்டாக ஆடிய விதம், ஷார்ட் பால்களை உடம்புக்குள் விட்டு எட்ஜ் ஆகும் வாய்ப்பை குறைத்து மடக்கி ஆடிய அணுகுமுறை என ஒவ்வொரு ஷாட்டிலும் ஷர்துல் தாகூர் பிரம்மிக்க வைத்துக் கொண்டே இருந்தார். ஷர்துலுடன் இன்னொரு எண்ட்டில் ரிஷப் பன்ட் ஆடிக்கொண்டிருந்தார். அவரும் தனது அடிதடி ஸ்டைலில் சில பவுண்டரிக்களை அடித்தார். ஆனாலும், ரசிகர்களின் கண்கள் மொத்தமும் ஷர்துல் மீது மட்டுமே இருந்தது. அவர் அடித்துக் கொடுத்த அந்த 60 ரன்களும் பன்ட்டுடன் போட்ட பார்ட்னர்ஷிப்புமே இந்தியாவை 300 ரன்களுக்கு மேல் லீட் எடுக்க வைத்தது. இந்த போட்டியை இந்தியா வெல்லும்பட்சத்தில் யோசனையே இல்லாமல் ஷர்துல் தாகூருக்கே மேன் ஆஃப் தி மேட்ச்சை கொடுத்துவிடலாம். ஷர்துல் தாகூர் அவுட் ஆன பிறகு உமேஷ் யாதவ் கடைசியில் கொஞ்சம் அதிரடியாக ஆட இங்கிலாந்துக்கு 368 ரன்கள் டார்கெட்டாக செட் செய்யப்பட்டது.

ரஹானேவின் தொடர் சொதப்பல்!

இந்த போட்டியிலேயே ரஹானேவை கோலி பென்ச்சில் உட்கார வைப்பார் என கணிப்புகள் வெளியாகியிருந்தது. ஆனால், கோலி ரஹானேவை ப்ளேயிங் லெவனில் அப்படியே வைத்திருந்தார். பேட்டிங் ஆர்டரை மட்டும் கொஞ்சம் மாற்றியிருந்தார். கிட்டத்தட்ட இது ரஹானேவுக்கான கடைசி வாய்ப்பாகவே பார்க்கப்பட்டது. ரஹானே மாதிரியான ஒரு உயர்தர பேட்ஸ்மேன் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்றே ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், ரஹானே இந்த போட்டியிலும் முழுமையாக சொதப்பியிருக்கிறார். இக்கட்டான சூழலில் முதல் இன்னிங்ஸில் 14 ரன்களில் அவுட் ஆனவர், நேற்று இரண்டாவது இன்னிங்ஸிலும் முக்கியமான கட்டத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றியிருந்தார்.
ENGvIND

க்ரீஸுக்குள் வந்து மூன்றாவது பந்திலேயே க்றிஸ் வோக்ஸ் வீசிய ஒரு டெலிவரியை பேடில் வாங்கினார் ரஹானே. அம்பயர் அவுட் கொடுத்துவிட, ரிவியூவில் உயரம் காரணமாக பிழைத்திருந்தார். ஆனால், க்றிஸ் வோக்ஸின் அடுத்த ஓவரிலேயே ஒரு ஃபுல் லென்த் டெலிவரியில் என்ன நடந்ததென்றே புரியாமல் lbw ஆகி வெளியேறினார். இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் மட்டுமே மீதமிருக்கிறது. அதிலுமே கூட கோலி ரஹானேவுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கலாம். ஆனால், அது நிஜமாகவே கடைசி வாய்ப்பாக இருக்கக்கூடும். சுதாரித்துக் கொள்ளாவிட்டால் ரஹானே மீண்டும் இந்திய ஜெர்சியை அணிவதே கனவாகக்கூடும்.

இங்கிலாந்தின் சிறப்பான ஓப்பனிங்!

முதல் நாளுக்கு பிறகாகவே பிட்ச் பெரிதாக பௌலர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. ரொம்பவே ஃப்ளாட்டாக இருக்கிறது. பேட்டிங் செய்வதற்கு சிறந்த பிட்ச்சாக மாறி வருகிறது என கமென்ட்ரியில் தொடர்ச்சியாக குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதன் அர்த்தத்தை இங்கிலாந்தின் பேட்டிங்கை பார்க்கும்போது புரிந்துக்கொள்ள முடிந்தது. இங்கிலாந்து நேற்று மட்டும் 32 ஓவர்கள் பேட்டிங் ஆடியிருக்கிறது. ஆனால், இந்திய பௌலர்களால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. விக்கெட் இல்லை என்பதை விட பர்ன்ஸுக்கும் ஹமீத்துக்கு இந்திய பௌலர்களால் பெரிதாக எந்த சிரமத்தையும் கூட கொடுக்க முடியவில்லை. ரொம்பவே ஜாலியாக இருவரும் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கின்றனர். வேகப்பந்து வீச்சாளர்களால் பந்தில் எந்த மூவ்மென்ட்டும் கொண்டு வர முடியவில்லை என்பதால் ஜடேஜாவுக்கு அதிக ஓவர்களை கொடுத்தார் கோலி. ஆனால் அவராலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.

ENGvIND
அஷ்வின் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று கோலியே நினைத்திருக்கக்கூடும்.

368 டார்கெட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து கடைசி நாளில் 291 ரன்களை எடுக்க வேண்டும். 10 விக்கெட்டுகளும் கையில் இருக்கிறது. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை முடித்த பிறகு, போட்டி டிரா ஆகும் அல்லாது இந்தியா வெல்லும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இங்கிலாந்தின் சிறப்பான தொடக்கம் அதை மாற்றியிருக்கிறது. மழை இல்லாதபட்சத்தில் போட்டி டிரா ஆக வாய்ப்பே இல்லை. நிச்சயம் முடிவு கிடைக்கப்போகிறது. அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா?



source https://www.vikatan.com/lifestyle/cricket/india-england-oval-test-heading-towards-thrilling-finish

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக