விறகு அடுப்பிலிருந்து கேஸ் ஸ்டவ்வுக்கு மாறியது போல மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் சுவாரசியங்கள் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன. சனிக்கிழமை நடந்த ‘ரீ என்ட்ரி போட்டி’யில் ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட் தந்து நிகழ்ச்சியை இன்னமும் பெஸ்ட் ஆக்க முடியுமா என்று மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
‘மாஸ் ஹீரோ’ படத்தின் இன்ட்ரோ காட்சி போல நீதிபதிகள் புடைசூழ ஸ்டைலான என்ட்ரி தந்தார் விஜய் சேதுபதி. அடர்த்தியான நிறங்களைத் தவிர்த்து லைட் புளூ கலர் கோட்டுக்கு அவர் மாறியிருந்தாலும் ஆடை இன்னமும் கூட சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம். ‘நல்லா படிக்கற பையன்’ லுக் வருவதற்காக சிலர் கண்ணாடி போட்டுக் கொள்வார்கள் அல்லவா, அப்படியொரு ‘இன்டலெக்சுவல் லுக்’ கண்ணாடியையும் அவர் அணிந்திருந்தார். இதற்கு மாறாக நீதிபதிகளின் ஆடைகள் அட்டகாசமான நிற கலவைகளில் இருந்தன.
இவர்களுக்குப் பின்னால் வந்த போட்டியாளர்கள் அரங்கில் நுழைந்தார்கள். “உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா? மாஸ்டர் செஃப் தமிழ் ஆரம்பிச்சு ஒரு மாதம் முடியப்போகுது... 1 Month Anniversary. இதன் வெற்றிக்கு நீங்கதான் காரணம்” என்று விஜய் சேதுபதி புளகாங்கிதமாக சொல்ல, போட்டியாளர்கள் வலுக்கட்டாயமாக புன்னகைத்தார்கள்.
“சமையலுக்கு passion மட்டும் முக்கியமில்லை. அன்பும் முக்கியம். எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண்மணி, அவரோட கணவரோட நாற்பதாவது பிறந்த நாளுக்கு நாற்பது வகையான டிஷ் செஞ்சாங்க. காலைல ஆரம்பிச்சு... நைட்டு வரைக்கும் அந்த வேலை போச்சு. அதுக்கு அவங்க கணவர் மீது வைத்திருக்கும் பேரன்புதான் காரணம்” என்று போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி ஓர் உதாரணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். (நான் சைடில் அமர்ந்திருந்த எங்கள் வீட்டம்மணியை அர்த்தபூர்வமாக பார்க்க ‘உங்க லட்சணத்துக்கு ரவா உப்புமா போதும்’ என்று பார்வையிலேயே பதில் வந்தது).
“ஓகே.. இன்னிக்கு நிறைய ட்விஸ்ட் இருக்கு. முதல் ட்விஸ்ட்டுக்கு வருவோம். வழக்கமா எலிமினேஷன் ஒண்ணுதான் இருக்கும் இல்லையா. ஆனா இன்னைக்கு இரண்டு எலிமினேஷன் இருக்கு” என்று செஃப் ஆர்த்தி குறும்பான புன்னகையுடன் சொல்ல, போட்டியாளர்களுக்கு அப்போதே மூச்சு திணறியது.
“நம்ம நிகழ்ச்சியில் எப்போதுமே சில ஆச்சரியங்கள் இருக்கும். இந்த பெரிய பெட்டியை பாருங்க. இதில்தான் உங்களுக்கான இன்றைய ஆச்சரியம் காத்திருக்கு” என்று விசே சொன்னதும், ‘‘அதிலிருக்கும் உணவு வகையைத்தான் இன்று சமைக்க வேண்டியிருக்கும் போல’’ என்பது துவங்கி போட்டியாளர்கள் பல்வேறு யூகங்களில் இறங்கினார்கள்.
பெட்டி திறக்கப்பட்டது. அது இரண்டாவது ட்விஸ்ட். உள்ளே உணவுப்பொருள் இல்லை. மாறாக ஏற்கெனவே எலிமினேட் ஆகி நிகழ்ச்சியில் இருந்து வெளியே போன சசி ஆனந்த், தாரா, சசியம்மாள் ஆகிய மூவரும் புன்னகையோடு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் போட்டியாளர்களைப் போலவே நமக்குள்ளும் மகிழ்ச்சி எழுந்தது. அதே சமயத்தில், ‘ஓகே... இவர்களுடன் நாம் இன்று போட்டியிட வேண்டியிருக்கும் போல’ என்று போட்டியாளர்கள் நினைத்திருக்கக்கூடும்.
ஆனால், அடுத்த ட்விஸ்ட்டை செஃப் கெளஷிக் அறிவித்தார். இன்றைய போட்டி என்பது எலிமினேட் ஆன மூன்று நபர்களுக்குள் மட்டுமே. மற்றவர்களுக்கு இல்லை. இதைக் கேட்டதும் இதர போட்டியாளர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் பால்கனிக்கு ஏறிச் சென்றார்கள்.
அந்த மூவரும் போட்டி பற்றிய அறிவிப்புக்காக காத்திருந்த போது “நீங்க அணிந்திருக்கும் ஏப்ரனில் எந்தவொரு பெயரும் இல்லை என்பதை கவனித்தீர்களா? இழந்த பெயரை நீங்கள் சம்பாதிக்கப் போவதுதான் இன்றைய போட்டியின் முக்கியத்துவம்” என்றார் செஃப் ஹரீஷ்.
“இது உங்களுக்கு கிடைத்திருக்கும் இரண்டாவது சான்ஸ். சரியாப் பயன்படுத்திக்கங்க. நான் ஒரு முறை ஓர் அமெரிக்க செஃப்பிடம் மிக மோசமாக தோற்றேன். பிறகு கிடைத்த இரண்டாவது சான்ஸில் அதே செஃப்பை ஓர் இந்திய பிரதிநிதியாக நின்று வென்று காட்டினேன்” என்று செஃப் ஆர்த்தி சொன்ன போது பரவசமாக இருந்தது.
விஜய்சேதுபதி எப்போதுமே நிதர்சனமாகவும் எளிமையான தத்துவங்களோடும் அருமையாக பேசக்கூடியவர். இரண்டாவது சான்ஸ் பற்றி அவர் சொல்லும் போது “எனக்கு ஹீரோவுக்கான மூஞ்சி கிடையாது. முன்னாடி நிறைய கிண்டல் பண்ணுவாங்க. நிதானமா யோசிச்சேன். வெற்றியடைவதற்கான தகுதியை முதல்ல நாம வளர்த்துக்கணும்னு நான் தீர்மானிச்சேன். ஆக, நாம் வேலை செய்யறது ‘வெளில’ இல்லை. ‘உள்ள’தான் சிறப்பா வேலை செய்யணும்’’ என்று விசே சொல்ல போட்டியாளர்களுக்கு அது மிக ஊக்கமாக இருந்தது. குறிப்பாக சசியம்மாள் நெகிழ்ச்சியில் கண்கலங்கி விட்டார்.
விஜய் சேதுபதி குறிப்பிட்ட இன்னொரு உதாரணமும் சிறப்பு. “மத்தவங்கள்லாம் போட்டில இன்னமும் இருக்காங்க. நீங்க தோல்வியுற்று, எலிமினேட் ஆகி, இனி மாஸ்டர் செஃப் நமக்கு கிடைக்காதுன்ற யோசனையையெல்லாம் கடந்துட்டீங்க... எனவே இன்னிக்கு உங்களால் சிறப்பா செயல்பட முடியும்” என்று சொன்னது மிக யதார்த்தமான, சிறப்பான ஊக்க வார்த்தைகள். மோட்டிவேஷன் ஸ்பீக்கராக விஜய்சேதுபதி செல்லக்கூடிய தகுதி அவருக்கு இருப்பதாகப்படுகிறது.
செஃப் கெளஷிக்கும் தன் பங்குக்கு இறங்கி ஊக்க மருந்தை அடித்தார். ‘எண்ணித் துணிக கருமம்... துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு’ என்று வள்ளுவரை துணைக்கு இழுத்தவர் “யாருக்கும் பயப்படாதீங்க... மொத அடியே சிறப்பா இருக்கணும். அடிங்க... முடிங்க’ என்று பன்ச் டயலாக்கையெல்லாம் எடுத்து விட, போட்டியாளர்களின் முழங்கைகளில் நரம்புகள் தெறித்திருக்கும்.
போட்டி ஆரம்பித்தது. இதற்கான நேரம் 60 நிமிடங்கள். Pantry-ல் இருந்து சமையல் பொருட்களை எடுத்து வருவதற்கான நேரம் 2 நிமிடங்கள். இன்றைய போட்டியில், போட்டியாளர்கள் ‘தங்களின் மனதுக்கு நெருக்கமான, உணவை சமைக்கலாம்’ என்று அறிவிக்கப்பட்டதால் ‘இன்னிக்கு ஒரு கை பார்த்துடுவோம்’ என்கிற மூடில் போட்டியாளர்கள் இருந்தார்கள். எனவே சமையல் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் நுழைந்து பொருட்களை ஆவேசமாக அள்ளி எடுத்து வந்து சமையல் மேஜையின் முன்பு தயாராக நின்று கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவர்களின் ஆர்வத்தில் வெந்நீரை ஊற்றினார் விஜய் சேதுபதி. அதாவது மூன்றாவது ட்விஸ்ட் இப்போதுதான் வந்தது. “இன்னிக்கு நிறைய ட்விஸ்ட்கள் இருக்கும்னு சொல்லியிருக்கோம் இல்லையா.. அதுல அடுத்தது இப்போது வருது” என்று அவர் சொல்ல, நீதிபதிகள் அதை அறிவித்தார்கள்.
அதாவது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த உணவுக்கான பொருட்களை எடுத்து வந்து தயாராக நின்றிருக்கிறார்கள், இல்லையா? அதை வைத்து அவர்கள் சமைக்கப் போவதில்லை. மாறாக குலுக்கல் முறையில் ‘யாருடைய பொருட்கள் வருகிறதோ’ அதை வைத்துத்தான் சமைக்க முடியும்.
இதன்படி சசி ஆனந்த் எடுத்து வைத்திருந்த பொருட்கள் தாராவிற்குச் சென்றன. தாரா எடுத்து வைத்திருந்தது சசியம்மாளுக்கு. சசி ஆனந்துக்கு சசியம்மாள் எடுத்து வைத்திருந்த பொருட்கள் வந்தன. இந்த ட்விஸ்டை அவர்கள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. தாங்கள் திட்டமிட்டபடி ஆசையாக சமைத்து வெற்றி பெறலாம் என்ற கனவில் இருந்தவர்களுக்கு இது சற்று அதிர்ச்சிதான்.
ஆனால், இதில் நமக்கான பாடமும் உள்ளது. ‘இன்று இதைச் சமைக்கலாம்’ என்று முன்பே ஒன்றை முடிவு செய்திருப்போம்.. ஆனால் அதற்கான பொருள் இல்லையென்பதை தாமதமாக உணரும் போது சட்டென்று பிளான் B-க்கு மாறும் சமயோசித உணர்வு இதனால் வளர வேண்டும்.
பரபரப்பாக போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம், அம்மாவின் முந்தானையை இழுக்கும் கடைக்குட்டி மாதிரி தொந்தரவு செய்து கொண்டிருந்தார் விசே. ‘நான் உங்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்றேன்’ என்று சொன்னவரிடம் “வேண்டாம் சார்..’’ என்று புன்னகையுடன் போட்டியாளர்கள் சொன்னாலும் ‘எங்களை சமைக்கவிடுணே’ என்பதுதான் அவர்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கக்கூடும். பாவம், அவர்களின் டென்ஷன் அப்படி.
‘ஹெல்ப் பண்றேன்’ என்கிற பெயரில் வந்தாலும் விசேவின் வாய் எதையோ மென்று கொண்டிருந்தது. அங்கிருந்த எதையோ ‘லபக்கி’ விட்டார் போல.
‘பரோட்டா’ செய்கிறேன் என்று சமையலை ஆரம்பித்த சசி ஆனந்த், குழம்பிப் போய் திகைத்து அவரே கொத்து பரோட்டாவாக மாறிக் கொண்டிருந்தார். அவர் சிம்பிளாக திட்டமிட்டது ‘பரோட்டாவும் கொத்துக்கறி’யும். ஆனால் அருகில் வந்த செஃப் ஆர்த்தி “என்னதிது.. உங்க கூடைல இத்தனை பொருட்கள் இன்னமும் அப்படியே இருக்கு. இதை வெச்சு நீங்க இன்னொரு டிஷ் செஞ்சித்தான் ஆகணும்” என்று அன்புக்கட்டளையிட, சங்கடத்தின் உச்சிக்கே சென்றார் சசி ஆனந்த்.
சசி ஆனந்த் எடுத்து வைத்திருந்த மீனை வைத்துக் கொண்டு ‘என்ன செய்வதென்று தெரியாமல்’ நீரில் இருந்து வெளியே தூக்கிப் போட்ட மீனாக துடித்துக் கொண்டிருந்தார் தாரா. இத்தனைக்கும் இவர் சர்வதேச சமையலில் பரிச்சயம் உள்ளவர். ‘சசி ஆனந்த் கொண்டு வந்தது மீன், வெங்காயம், தக்காளி மட்டும்தான். மீன் வேற முள்ளு முள்ளா இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தார்.
பாரம்பரிய உணவு வகை செய்வதில் எக்ஸ்பர்ட் ஆன சசியம்மாளின் முகத்தில் ஆரம்பத்திலிருந்தே சுரத்து இல்லை. அவர் கொண்டு வந்திருந்த பொருட்களாக இருந்தால் பட்டையைக் கிளப்பியிருப்பார். ஆனால் அவருக்குச் சம்பந்தமில்லாத பொருட்கள் வந்து மாட்டியதால், தீபாவளி நேரத்த்தில் ரங்கநாதன் தெருவில் மாட்டிக் கொண்ட ரஷ்யக்காரர் மாதிரி முழி பிதுங்கிக் கொண்டிருந்தார்.
“சசி ஆனந்த்... முன்ன பின்ன பரோட்டா செஞ்சிருக்கீங்களா... மாவை இப்படியா உருட்டுறது? என்றபடி வந்த செஃப் ஹரீஷ், தான் ஒரு உருண்டையை செய்து இரண்டையும் ஒப்பிட்டு காட்ட, ஹரீஷ் செய்திருந்தது நல்ல ஷேப்பில் இருந்தது. “இல்ல செஃப்... நல்லா செஞ்சிடுவேன்” என்று சங்கடமாக புன்னகைத்தாலும் சசி ஆனந்தின் பதற்றம் உள்ளுக்குள் அதிகரித்தது வெளியே அப்பட்டமாகத் தெரிந்தது.
சமையல் நடக்கும்போதே போட்டியாளர்களை எச்சரித்தால், அவர்கள் கவனமாக இருந்து விழித்துக் கொள்வார்கள் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் இன்னொருபக்கம் இந்த விஷயம் போட்டியாளர்களின் டென்ஷனை ஏற்றி அவர்கள் அதிக தவறுகளை இழைத்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.
“எனக்கு கிடைத்த பொருட்களை வைத்து சமாளித்திருக்கிறேன். ஆனால் அவநம்பிக்கையாகத்தான் இருக்கிறது” என்று சோகமான முகத்துடன் சொன்னார் தாரா.
இந்த மூவரும் தயார் செய்திருந்த உணவு வகைகள் பலி பீடத்தில் வைக்கப்பட்டன. ஒருவர்தான் வெல்ல முடியும். மற்ற இருவரும் மறுபடியும் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருக்கும். வலி மிகுந்த விஷயம் அது.
‘பரோட்டா – கொத்துக்கறி’ – இதுதான் சசி ஆனந்த் செய்திருந்த உணவு. ஆனால் இதைச் செய்து முடிப்பதற்குள் அவரே கொத்துக்கறி ஆகியிருந்தார். பரோட்டா இவரின் காலை வாரி விட, சிறிய வட்டத்தில் இரண்டே இரண்டு பரோட்டாக்களை மட்டும் வைத்து அதன் மீது கொத்துக்கறியை அலங்காரமாக நிரப்பியிருந்தார். மெயின் உணவு குறைவாக இருப்பது குறித்த குற்றவுணர்வு அவருக்கே இருந்தது.
“கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கொண்டு வந்திருந்தா நான் அடிச்சுக்காம சாப்பிடுவோம்... இல்லையா?” என்று சர்காஸ்டிக்காக கிண்டலடித்தார் விஜய் சேதுபதி. சுற்றி என்ன ரணகளம் நடந்தாலும் விசே சாப்பிடுவதில் குறியாக இருப்பது நல்ல விஷயம். சசி ஆனந்த் பரோட்டாவை சொதப்பியதில் உள்ள காரணத்தை பின்னர் விளக்கிச் சொன்னார் கெளஷிக்.
‘பெப்பர் மட்டன் பிரட்டல்’ - இதுதான் சசியம்மாள் செய்து கொண்டு வந்த டிஷ். ஆனால் அவர் முகத்திலும் நம்பிக்கையில்லை. ‘‘என்னமோ செஞ்சிருக்கேன்... சாப்பிடுங்க. உங்க தலையெழுத்து’’ என்பது மாதிரியே நின்றிருந்தார். அந்தப் பிரட்டல், உண்மையிலேயே செஃப் ஆர்த்தியின் வயிற்றை உடனே பிரட்டியதோ என்னவோ... அவரின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
தான் தயார் செய்யும் உணவுகளுக்கு வித்தியாசமாக பெயர் வைப்பதில் ‘தாரா’ மேடம் எப்போதுமே கில்லாடி. இந்த முறையும் அதை நிரூபித்தார். அவர் செய்திருந்த மெனுவின் பெயர் ‘பறக்கும் மீன்’. “சாப்பிட்டப்புறம் பறக்கிற மாதிரி ஒரு ஃபீல் உங்களுக்கு வரும்” என்று நீதிபதிகளிடம் அதற்கு விளக்கம் தர சபையே வெடித்து சிரித்தது.
பரிசோதனை சடங்கு முடிந்ததும், போட்டியாளர்கள் மூன்று பேரையும் ‘முன்னால வாங்க’ என்று அழைத்தார் கெளஷிக். வழக்கமாக இவர்தான் போட்டியாளர்களிடம் கறாராகவும் சற்று கடுமையாகவும் பேசுவார்.
ஆனால், இப்போதெல்லாம் இந்தப் பொறுப்பை ஹரீஷ் எடுத்துக் கொள்கிறார். ‘நீங்க எங்களை இம்ப்ரஸ் பண்ணனும்னு நினைக்கறீங்க. அது தப்பு... நீங்க செய்யறது உங்களுக்கே முதல்ல பிடிச்சிருக்கணும்” என்று பிரின்ஸிபால் மாதிரி அவர் கடுமையாக சொல்ல போட்டியாளர்களின் முகத்தில் சங்கடம் வழிந்தது. “இந்த இரண்டாவது சான்ஸை நீங்க ரொம்ப கவனக்குறைவாக கையாண்டிருக்கீங்க” என்று ஏறத்தாழ எகிறித்தள்ளினார் ஹரீஷ்.
ஹரீஷின் கண்டிப்பு நமக்கு நெருடலாகத் தோன்றினாலும் அது ஓர் ஆசிரியரின் கண்டிப்பு என்கிற நோக்கில் அவசியம்தான். போட்டியாளர்கள் செய்திருந்த தவறுகளை நீதிபதிகள் சுட்டிக் காட்டிய போதுதான் அவர்களும் அதை உணர்ந்தார்கள்.
இறுதி முடிவு அறிவிக்கப்படும் நேரம். பரபரப்பான நிமிடங்கள். ஆனால் பெரிய சஸ்பென்ஸ் ஏதும் வைக்காமல், தாராவின் அருகில் சென்று அவரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த ஏப்ரனை அணிவித்தார் விசே. ஆக ‘பறக்கும் மீன்’ உண்மையிலேயே பறந்து வெற்றியை பறித்து விட்டது.
எலிமினேட் ஆன தாரா, மீண்டும் போட்டிக்குள் நுழைந்ததை எண்ணி மகிழ்ச்சியில் கண்கலங்கினார். அவரை அரவணைத்து சசியம்மாள் தேற்றினாலும், தான் தோற்றதை நினைத்து பின்னர் அழுதே விட்டார். சசி ஆனந்தின் புன்னகை இப்போதும் மாறவில்லையென்றாலும் அவரின் சோகமும் நன்கு தெரிந்தது.
ஆக போட்டியாளர்களின் எண்ணிக்கை மறுபடியும் பன்னிரெண்டாக மாறியிருக்கிறது. இப்போது ஒரு சிறப்பு விருந்தினரின் வருகை. இது நான்காவது ட்விஸ்ட். நடிகை நிக்கி கல்ராணி புன்னகையுடன் அரங்கத்துக்குள் வந்த போது அந்த இடமே ஸ்விட்ச் போட்டது போல் உற்சாகமாக மாறியது.
அடுத்த போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டார் நிக்கி கல்ராணி. அதில் வெல்பவர், மாஸ்டர் செஃப்பின் ‘Immunity pin’ –ஐ வெல்ல முடியும். இது ஒரு முக்கியமான தகுதி. செமி ஃபைனல் வரை இந்த பின் செல்லுபடியாகும். ஏதாவது ஒரு சுற்றில் பின்னடைவு ஏற்பட்டால் இதை வைத்து ஒரு போட்டியாளர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
இந்த ‘Immunity pin’க்கிற்கான போட்டி என்னவென்பதை நிக்கி கல்ராணி அறிவிக்கத் தொடங்கினார். அது என்ன என்பதை அடுத்த நிகழ்ச்சியில் தான் அறிய முடியும்!
source https://cinema.vikatan.com/television/vijay-sethupathi-hosting-master-chef-tamil-episode-9-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக