தாலிபன்கள் தங்களின் இடைக்கால ஆப்கன் அரசின் முக்கியப் பொறுப்பாளர்களை தற்போது அறிவித்திருக்கின்றனர். பிரதமர், துணை பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் என மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கும் தலைவர்களின் பட்டியலை தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் (Zabihullah Mujahid) வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தாலிபன்கள் அமைச்சரவையில் மொத்தம் உள்ள 35 பொறுப்பாளர்களில் 33 பேர் பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு பேர் தஜீக் மற்றும் உஸ்பெக் இனத்தைச் சேர்ந்தவர்கள். `இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்' என்று பெயரிடப்பட்டிருக்கும் தாலிபன் அரசின் முக்கிய துறைகளின் பொறுப்பாளர்களையும் அவர்களின் பின்னணியையும் காண்போம்.
`பிரதமர்' - முல்லா முகமது ஹசன் அகுந்த் (Mullah Mohammad Hasan Akhund):
ஆப்கன் பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கும் முல்லா ஹசன், தாலிபன் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவர் முல்லா ஒமரின் வலதுகரமாகச் செயல்பட்டவர். ஆப்கன் கந்தஹார் மாகாணத்தில் வாழும் நூர்சாய் பழங்குடி இனத்தில் பிறந்தவர். 1996-ம் ஆண்டு ஆப்கனில் முதல்முறையாக தாலிபன் ஆட்சி ஏற்பட்டபோது, வெளியுறவுத்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்தார். சுமார், 20 ஆண்டுகாலம் தாலிபன்களை வழிநடத்தும் சக்திவாய்ந்த ``ரெஹ்பரி ஷூரா" குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். 2001-ம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற, பழைமையான பாமியன் புத்தர் சிலையைத் தாலிபன்கள் குண்டுவீசித் தாக்கினர். இந்தச் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவர் முல்லா ஹசன்.
இன்றளவும் ஐ.நா.சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் முல்லா ஹசன், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் (FBI) தேடப்படும் குற்றவாளியாகவும் நீடித்து வருகிறார்.
`துணைப் பிரதமர்' - முல்லா அப்துல் கானி பராதர் (Mullah Abdul Ghani Baradar):
முல்லா அப்துல் கானியும் தாலிபன் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். ஆப்கனில் உள்ள உருஸ்கான் மாகாணத்தில் வாழும் துர்ரானி இனத்தில் பிறந்தவர். முந்தைய தாலிபன்கள் ஆட்சியில், துணை பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். 2001-ம் ஆண்டு தாலிபன்கள் மீதான அமெரிக்கப் படையெடுப்புக்கு எதிராக மிகத்தீவிரமாக செயல்பட்டார். இதன் விளைவாக, 2010-ம் ஆண்டு பாகிஸ்தான், அமெரிக்கப் பாதுகாப்புப் படை நடத்திய தேடுதல் வேட்டையில், கராச்சியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். பின்னர், 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 2018 முதல் தாலிபன்களின் அரசியல் பிரிவுத் தலைவராகச் செயல்பட்டு வந்த கானி பராதர், தற்போது ஆப்கன் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரும் ஐ.நா. சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கிறார்.
இவருடன் சேர்ந்து, அப்துல் சலாம் ஹனாஃபி (Mawlawi Abdul Salam Hanafi) என்பவரும் ஆப்கனின் இரண்டாம் நிலை துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
`உள்துறை அமைச்சர்' - சிராஜுதீன் ஹக்கானி (Sirajuddin Haqqani):
ஹக்கானி நெட்வொர்க் (Haqqani network) அமைப்பைத் தோற்றுவித்த ஜலாலுதீன் ஹக்கானியின் மகன்தான், சிராஜுதீன் ஹக்கானி. 1980-களில் ஆப்கானிஸ்தான் மீதான ரஷ்யப் படையெடுப்பை எதிர்த்து உருவான பல்வேறு இஸ்லாமிய ஆயுதக்குழுக்களில் ஒன்று ஹக்கானி நெட்வொர்க். 1994-ம் ஆண்டு தாலிபன் அமைப்பு உருவானது முதல் தற்போது ஆட்சியமைக்கும் வரையிலும், தாலிபன் அமைப்பின் அத்தனை தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் பக்கபலமாக இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு காபூலின் ஒரு ஹோட்டல்மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் ஒரு அமெரிக்கர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், ஆப்கனில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல், அதிபர் கர்சாய் மீதான தாக்குதல் போன்ற பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னின்று நடத்தினார். இதனால், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பால் (FBI) தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் விலையும் வைக்கப்பட்டிருந்தது.
2018-ல் தந்தை ஜலாலுதீன் ஹக்கானி மரணத்துக்குப்பிறகு, மகன் சிராஜுதீன் ஹக்கானியை தாலிபன்கள் தங்களின் துணைத்தலைவராக ஏற்றுக்கொண்டனர். ``பயங்கரவாதிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் தாலிபன்கள் துண்டித்துக்கொள்ள வேண்டும்" என்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கோரிக்கையும் மீறி தற்போது, தாலிபன் அரசின் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர்- முல்லா முகமது யாகூப் (Mullah Mohammad Yaqoob):
தாலிபன் இயக்கத்தைத் தொடங்கிய முல்லா ஒமரின் மகன்தான், முல்லா முகமது யாகூப். தாலிபன் ராணுவப் படைத்தளபதியாக இருந்த இவர், தாலிபன் தலைவர்களிலேயே மிக இளம் வயது தலைவராக அறியப்படுகிறார். மிக இளம்வயது, போர்க்கள அனுபவம் குறைவு போன்ற காரணங்களாலே, 2013-ல் தாலிபன் தலைவர் முல்லா ஒமர் மரணத்துக்குப் பிறகும், 2016-ல் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்ட அக்தர் மன்சூர் மரணத்துக்குப் பிறகும் முல்லா யாகூப் தலைவராக முடியவில்லை. எனவேதான், ஹிபத்துல்லா அகுந்த்ஸடா அடுத்தகட்டத் தலைவரானதாகக் கூறப்படுகிறது. முப்பது வயதுக்கும் குறைவானவராக இருக்கலாம் எனக் கருதப்படும் முல்லா யாகூப், தற்போது தாலிபன் அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர, தாலிபன் அரசின் நிதி அமைச்சராக முல்லா ஹிதயத்துல்லா பத்ரி (Mullah Hidayatullah Badri), கல்வித்துறை அமைச்சராக ஷேக் மொலவி நூருல்லா முனீர் (sheikh mawlawi noorullah munir), வெளியுறவுத்துறை அமைச்சராக மௌலவி அமீர் கான் முதாகி (Maulvi Amir Khan Mutaqi), உளவுத்துறை அமைச்சராக முல்லா அப்துல் ஹக் வாசிக் (Mullah Abdul Haq Wasiq), நீதித்துறை அமைச்சராக மௌலவி அப்துல் ஹக்கீம் ஷாரி (Head of Ministry of Justice), ராணுவத்துறை தலைவராக காரி ஃபசிஹுதீன் (Qari Fasihuddin) என பல்வேறு துறைகளின் கீழ், பல முன்னணி தாலிபன் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் எல்லோரைவிடவும் தாலிபன் அரசின் மதம், கொள்கை, சட்டதிட்டம், அரசியல், பாதுகாப்பு விவகாரங்கள் என அனைத்துத் துறைகளிலும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவராக மெளலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா (Mawlawi Hibatullah Akhunzada) நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Also Read: தாலிபன்: முக்கியப் பங்காளி சீனா; இந்தியாவுக்கு எந்த வகையில் பின்னடைவு?
தாலிபன்களின் எதிர்கால ஆட்சி முறை எப்படி இருக்கும் என அறிக்கை வெளியிட்டிருக்கும் ஹிபத்துல்லா,
மேலும், ``தாலிபன் ஆதிக்கத்தின் கீழ் வேறு எந்த நாட்டின் பாதுகாப்புக்கும் எதிராக, ஆப்கானிஸ்தான் மண் இனி எப்போதும் பயன்படுத்தப்படாது" எனவும் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா விளக்கமளித்துள்ளார்.
பஞ்ச்ஷீர் படைகளுடனான யுத்தம், ஹக்கானி குழுவினருடனான கருத்து முரண்பாடு போன்ற காரணங்களால் ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு நீண்ட நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. அந்த சமயத்தில், அகமது மசூத்தின் படைகளை வீழ்த்தி பஞ்ச்ஷீர் மாகாணத்தை முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் தாலிபன்கள். அதேசமயம், பாகிஸ்தான் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ) தலைவர் ஹமீது ஃபயஸின் தலையீட்டால், தாலிபன்-ஹக்கானி தலைவர்களுக்குள் நிலவிவந்த கருத்து வேறுபாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
ஆட்சியமைக்கத் தடையாக இருந்த இரண்டு பிரச்னைகளும் முடிவுக்கு வந்த நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல் தங்களின் இடைக்கால அரசின் முதன்மைப் பொறுப்பாளர்களை அறிவித்திருக்கின்றனர் தாலிபன்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/international/taliban-new-governments-cabinet-members-background
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக