Ad

சனி, 18 செப்டம்பர், 2021

வெஜ் பரோட்டா சிப்ஸ் | டபுள் டெக்கர் தோசை | ஸ்பைரல் பொட்டேட்டோ - வெரைட்டியான வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

இட்லி, தோசை, கேசரி, சர்க்கரைப் பொங்கல்னு ஒரே மாதிரி சாப்பிட்டு சாப்பிட்டு போரடிச்சிடுச்சு... வாழ்க்கையில ஒரு மாறுதல் வேணாமா... என அலுத்துக்கொள்கிறவர்களுக்குத்தான் இந்த வீக் எண்டு விருந்து ரெசிப்பீஸ்... காலை பிரேக் ஃபாஸ்ட் தொடங்கி, டின்னருக்கு டெசர்ட் வரை வெரைட்டியான இந்த ரெசிப்பீஸை முயற்சி செய்து பாருங்கள்... ஹேப்பி வீக் எண்ட்...

தேவையானவை:

பரோட்டா - ஒன்று (நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக்கவும்)
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
ஓமம் - அரை டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டேபிள்ஸ்பூன்
கசூரி மேத்தி (உலர் வெந்தயக்கீரை) - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வெஜ் பரோட்டா சிப்ஸ்

செய்முறை:

பரோட்டா செய்த உடனே தயாரிப்பதானால் அப்படியே துண்டுகளாக்கவும். பரோட்டா உலர்ந்து போயிருந்தால் ஆவியில் சில நிமிடங்கள் வேகவைத்து எடுத்த பிறகு துண்டுகளாக்கவும். கார்ன்ஃப்ளாருடன் சிறிதளவு உப்பு, தண்ணீர், ஓமம், மிளகுத்தூள் சேர்த்துக் கரைக்கவும். இதை பரோட்டா துண்டுகளின் மீது பரலவாக ஊற்றிப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பிசிறி வைத்துள்ள பரோட்டா துண்டுகளை உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும் (அப்படியே மொத்தமாக எடுத்துப்போட்டுப் பொரித்தால் மொறுமொறுப்பாக வராது). அதனுடன் சாட் மசாலாத்தூள், உலர் வெந்தயக்கீரை தூவிக் கலக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி சாப்பிடும் முன் எடுத்துப் பரிமாறவும். அப்போதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.

தேவையானவை:

தோசை மாவு - ஒரு கப்
மிளகாய் - பூண்டு பருப்புப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
வேகவைத்து, தோல் உரித்த உருளைக்கிழங்கு - 3
நறுக்கிய குடமிளகாய் - கால் கப்
வெங்காயம் – 3 (நீளவாக்கில் நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய், நெய் - தேவையான அளவு
வறுத்த வேர்க்கடலைப் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

டபுள் டெக்கர் தோசை

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் குடமிளகாய், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், வேர்க்கடலைப் பொடி, கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். உருளை மசால் ரெடி. தோசைக்கல்லைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றி, அதன் மீது ஒரு டீஸ்பூன் மிளகாய் பருப்புப் பொடியைப் பரவலாகத் தூவி, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். பொடி தோசை ரெடி.

அதே தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றி, அதன் மீது சிறிதளவு உருளை மசால் வைத்து, மூடி போட்டு வேகவிடவும். பிறகு அதன் மீது பொடி தோசையை வைத்து மூடி (உருளை மசாலாவின் மீது பொடி தூவிய பகுதி படுமாறு வைக்க வேண்டும்), அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும். இப்போது இரு தோசைகளையும் சேர்த்துத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். இப்போது இருவிதமான சுவையுடன் செட் தோசை ரெடி. தோசையின் மேற்புறம் சிறிதளவு வெண்ணெய் தடவி, தோசையை நான்கு துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப் ஆய்ந்த இருவகை கீரை (முளைக்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, முருங்கைக்கீரை போன்றவை) - தலா கால் கப் முளைகட்டிய நவதானியம் - கால் கப் (ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது)
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 3
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தயிர் - அரை கப்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
தக்காளி ஃப்யூரி - கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
தோலுரித்த சின்ன வெங்காயம் - கால் கப் (இரண்டாக நறுக்கவும்)
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 5 (நீளவாக்கில் கீறவும்)
கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - சிறிதளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சீஸ் துருவல் - கால் கப்
தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கிரீன்ஸ் கிரெய்ன்ஸ் புலாவ்

செய்முறை:

அரிசியைக் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடியவிட்டு வெறும் வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்தெடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி ஃப்யூரி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சின்ன வெங்காயம், கீரை வகைகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு முளைகட்டிய நவதானியம் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதனுடன் அரிசி, புதினா, தேங்காய் எண்ணெய், தயிர் சேர்த்துக் கலந்து மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும். மேலே சீஸ் துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

தேவையானவை:

பனீர் - 100 கிராம்
பேபிகார்ன் - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
வேகவைத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பனீர் பேபிகார்ன் வெஜ் கைமா

செய்முறை:

சிறிதளவு உப்பு கலந்த வெந்நீரில் பனீர், பேபிகார்ன் சேர்த்து சில நிமிடங்கள் கழித்து எடுத்துத் துருவவும். அல்லது பனீரையும் பேபிகார்னையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுவிட்டு எடுக்கலாம். உதிர் உதிராக வர வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு உதிர்த்த பனீர், பேபிகார்ன், உப்பு, வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இந்த வெஜ் கைமாவை பிரெட், தோசை, சப்பாத்தியின் நடுவே வைத்துச் சாப்பிடலாம். பொரியலாகவும் சாப்பிடலாம்.

தேவையானவை:

ஓவல் வடிவ பெரிய உருளைக்கிழங்கு - 2
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
ஓமம் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மூங்கில் குச்சிகள் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஸ்பைரல் பொட்டேட்டோ

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் மைதா மாவுடன் கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஓமம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துச் சற்று தளர்வாகக் கரைக்கவும். உருளைக்கிழங்கின் தோலைச் சீவி மெல்லிய மூங்கில் குச்சியில் குத்தவும் (குச்சியை எடுக்கக் கூடாது). கூர்மையான கத்தியால் நுனியிலிருந்து ஆரம்பித்து, கிழங்கின் கடைசி வரை சுழற்றிச் சுழற்றி வெட்டவும். (அதாவது ஒரு கையால் கத்தியைப் பிடித்துக்கொண்டு மறு கையால் குச்சியைச் சுழற்றினால் தானாக அதுவே வெட்டிக்கொள்ளும்). பிறகு மெதுவாகப் பிரித்து இழுத்துவிடவும். இப்போது பார்ப்பதற்கு ஸ்பிரிங் மாதிரி இருக்கும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி உருளைக்கிழங்கு ஸ்பிரிங்கை மைதா கலவையில் லேசாக முக்கி எடுத்துப்போட்டு பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

தேவையானவை:

குளிர்ந்த விப்பிங் கிரீம் - அரை கப்
கண்டென்ஸ்டு மில்க் - ஒரு கப்
ஃப்ரெஷ் கிரீம் - அரை கப் (தண்ணீரை வடிக்கவும்)
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்
செர்ரி - அலங்கரிக்கத் தேவையான அளவு

பாஸ்கெட் கப் செய்ய:

மைதா மாவு - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
விருப்பமான லிக்யுட் ஃபுட் கலர் - சில துளிகள்
வெண்ணெய் - 50 கிராம்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

காபி ஐஸ்க்ரீம் வித் பாஸ்கெட்

செய்முறை:

சிறிய பவுலில் இன்ஸ்டன்ட் காபி பவுடருடன் கோகோ பவுடர், சிறிதளவு வெந்நீர் சேர்த்துக் குழைக்கவும். பெரிய பவுலில் விப்பிங் கிரீம் சேர்த்து இரண்டு மடங்காகும் வரை நன்கு அடிக்கவும். அதனுடன் ஃப்ரெஷ் கிரீம், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து அடிக்கவும். பிறகு காபி பவுடர் கரைசல் சேர்த்துக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து மூடி ஃப்ரீசரில் 8 முதல் 10 மணி நேரம் வரை வைத்து எடுக்கவும். சுவையான காபி ஐஸ்க்ரீம் ரெடி (இதை அப்படியே சாப்பிடலாம்).

மைதா மாவுடன் வெண்ணெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடி போட்டுக் கொதிக்கவிடவும் (கிளற வேண்டாம்). சர்க்கரை கொதித்துக் கரைய ஆரம்பித்ததும் சில நிமிடங்கள் கழித்துத் திறத்து பார்த்தால் ஓரங்களில் கேரமல் கலர் (பிரவுன்) வரும். அப்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். அதனுடன் ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கவும்.

மைதா மாவைச் சப்பாத்திகளாகத் திரட்டி கோன் மாதிரியோ அல்லது கப் மாதிரியோ செய்து முனைகள் பிரியாமல் இருக்க மைதா பசையால் ஒட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி மைதா கப் அல்லது கோன்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். அதன் வெளிப்புறம் பிரஷ்ஷால் சர்க்கரைப் பாகை தடவி, சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பாஸ்கெட்டில் சர்க்கரை பாகு ஒட்டிக்கொள்ளும். இனிப்பான கூடை தயார். இதன் உள்ளே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் நிரப்பி, மேலே செர்ரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/veg-parotta-chips-double-decker-dosa-spiral-potato-variety-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக