Ad

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

கோலி அரை சதம் அடித்தும், படிக்கல் பட்டையைக் கிளப்பியும்... சூப்பர் கிங்ஸிடம் ஏன் தோற்றது பெங்களூரூ?

90'ஸ் கிரிக்கெட் ரசிகர்களின் நாஸ்டால்ஜிக் நினைவுகளை கிளறிவிடும் வகையில் 'Desert Storm' எனும் பாலைவனப் புயல்லோடு தொடங்கியிருந்த சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி ஏறக்குறைய ஒரு ஒன் சைடு ஆட்டமாகவே நடந்து முடிந்தது.

ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்றிருந்த சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். சாம் கரண் அணியில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமுமில்லை. பெங்களூர் அணியை பொறுத்தவரைக்கும் பேட்டிங்கை வலுப்படுத்தும் எண்ணத்தோடு ஜேமிசனை பென்ச்சில் வைத்துவிட்டு டிம் டேவிடை சேர்த்திருந்தனர். ஜேமிசனின் வேகப்பந்து வீச்சை நிரப்பும் வகையில் சச்சின் பேபிக்கு பதில் நவ்தீப் சைனிக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது.

கோலி
ஷார்ஜா....Desert Storm என்றவுடன் சச்சினின் நியாபகமே வரும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் அடித்த அந்த சதத்தை எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது. மீண்டும் அதே ஷார்ஜாவில் அதே மாதிரி ஒரு Desert Storm... களத்தில் சச்சினின் சாதனைகளை வேகமாக விரட்டி கொண்டிருக்கும் கோலி இருக்கிறார்.

ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்? 90 களின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சச்சின் அருளியதை போன்ற என்றைக்கும் மறக்க முடியாத க்ளாஸான இன்னிங்ஸையே கோலியிடமிருந்தும் எதிர்பார்த்திருந்தனர்.

போட்டி தொடங்கியது. கோலியும் படிக்கலும் ஓப்பனிங் இறங்கினார்கள். தீபக் சஹார் வீசிய முதல் பந்தையே ஃபைன் லெக்கில் பவுண்டரியாக்கினார் கோலி. அடுத்த பந்தை மிட் விக்கெட்டில் பவுண்டரியாக்கினார். தொடர்ந்து 2 பவுண்டரிகள். சமீபமாக கோலி இவ்வளவு பாசிடிவ்வாக ஒரு இன்னிங்ஸை தொடங்கி பார்க்கவே இல்லை. Desert Storm ராசி வேலை செய்ய தொடங்கியதற்கான அறிகுறி தெரிந்தது. கோலியும் விடவில்லை. அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை கொடுத்தார்.

கோலி மற்றும் படிக்கல்
தீபக் சஹாரின் பந்து அவர் கையிலிருக்கும்போதே ரீட் செய்து இறங்கி வந்து அடித்து ஒரு பவுண்டரியை சேர்த்திருந்தார். ஷர்துல் தாகூரின் ஓவரில் ஒரு பந்தை ஆடாமல் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்று 'நோ லுக்' சிக்சராக மாற்றினார்.

இந்த போட்டிக்காக கோலி வழக்கத்தை விட அதிக நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார் என பெங்களூர் அணியின் மைக் ஹசன் கொடுத்திருந்த பேட்டி, Desert Storm ராசி, கோலியின் பாசிட்டிவ்வான தொடக்கம் என எல்லாமே சேர்ந்து கோலி ஒரு மாஸான சதம் அடிக்க போகிறார் என்ற எண்ணத்தை உண்டாக்கியிருந்தது. ஆனால், இதன்பிறகுதான் பெங்களூரு ரசிகர்களை சோகம் சூழ்ந்தது.

கோலி ஒரு முனையில் வெளுத்தெடுக்க இன்னொரு முனையில் படிக்கலும் தன் பங்குக்கு அதிரடி காட்டி கொண்டிருந்தார். ஆனால், இதெல்லாம் பவர்ப்ளே வரை மட்டும்தான். 6 ஓவர் முடிவில் 55 ரன்களை இந்த கூட்டணி எடுத்திருந்தது. பவர்ப்ளேக்கு பிறகு மெது மெதுவாக ரன்ரேட் குறைய ஆரம்பித்தது 10 ஓவர் முடியும் வரை கூட பரவாயில்லை. 10 ஓவர்கள் முடிவில் 90-0 என்ற நிலையிலிருந்தது பெங்களூர். இதன்பிறகே நேராக வீழ்ச்சி பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.

டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டிம் டேவிட் என பின்னால் அதிரடி சூரர்கள் இருந்தும் கோலி-படிக்கல் கூட்டணி ரிஸ்க் எடுக்காமல் அதீத விக்கெட் பாதுகாப்புடன் ஆடியது. ஒரு ஓவருக்கு ஒரு பவுண்டரி வந்தால் போதும் மற்ற 5 பந்துகளை தட்டிவிட்டு ரன் சேர்த்தால் மட்டும் போதும் என ரொம்பவே கால்குலேட்டிவ்வாக ஆடினார்கள்.

இந்த கேம் ப்ளான் மற்ற மைதானங்களில் சரிப்பட்டு வரலாம். ஷார்ஜாவில் வாய்ப்பே இல்லை. இங்கே எத்தனை சிங்கிள் தட்டலாம் என்கிற கணக்கே கிடையாது. எத்தனை சிக்சர் அடிக்கிறோம் என்பதுதான் கணக்கு. இதில்தான் கோலி-படிக்கல் இணை சுணங்கியது. ஜடேஜாவின் பந்தில் கூட பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் பார்த்தே ஆடியிருந்தனர். பெங்களூர் அணி பதுங்கிய இந்த மிடில் ஓவர் இடத்தைதான் சென்னை அணி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது. பிராவோவும் அட்டகாசமாக ஸ்லோயர் பந்துகளையும், யார்க்கர்களையும் வீசினார்.

கோலி
அரைசதம் கடந்திருந்த கோலி பிராவோவின் பந்திலேயே ஜடேஜாவிடம் கேட்ச் ஆகினார். 41 பந்துகளில் 53 ரன்களை மட்டுமே கோலி எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 129. ஷார்ஜாவில் இந்த ஸ்ட்ரைக் ரேட் போதவே போதாது.
ஷர்துல் தாகூர்

டெத் ஓவரில் டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் இருவரும் பந்தை சிதறவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விக்கெட்டுகள்தான் சிதறியது. ஷர்துல் தாகூர் ஓவரில் அடுத்தடுத்த பந்தில் டிவில்லியர்ஸ் 12 ரன்னிலும் படிக்கல் 70 ரன்னிலும் அவுட் ஆகினர். மேக்ஸ்வெல், டிம் டேவிட் ஆகியோரும் ஒன்றும் செய்து கொடுக்கவில்லை.

சிக்சர் மழையாக பொழியும், 200+ ரன்கள் அடிக்கப்படும் என நினைத்ததெல்லாம் கனவாகியிருந்தது. பெங்களூர் அணி 156 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. முதல் 10 ஓவர்களில் 90 ரன்களை எடுத்திருந்த பெங்களூர் அணி அடுத்த 10 ஓவர்களில் 66 ரன்களை மட்டுமே எடுத்தது.

சென்னை அணிக்கு 157 ரன்கள் டார்கெட். சென்னை அணியும் சேஸிங்கை சிறப்பாகவே தொடங்கியிருந்தது. கடந்த போட்டியில் நாட் அவுட்டாக ருத்துராஜ் கெய்க்வாட் அந்த போட்டியிலிருந்து அப்படியே தொடர்வது போல சிறப்பாக பேட்டிங் ஆடினார். கடந்த போட்டியில் டக் அவுட் ஆகியிருந்த டுப்ளெஸ்சியும் நல்ல டச்சுக்கு வந்திருந்தார்.

ருத்துராஜ் மற்றும் டூ ப்ளெஸ்சிஸ்
பவர்ப்ளேயில் மட்டும் இந்த கூட்டணி 59 ரன்களை சேர்த்திருந்தது.

பெங்களூருவை போலவே சென்னை அணியும் பவர்ப்ளேக்கு பிறகு கொஞ்சம் சரிவை சந்தித்தது. தொடர்ச்சியாக, ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்திருந்தார் கோலி. இதில் சஹால் வீசிய 9-வது ஓவரில் ருத்துராஜ் கெய்க்வாட் கொடுத்த ஒரு கடினமான கேட்ச்சை அட்டகாசமாக டைவ் அடித்து பிடித்து அசத்தினார் கோலி. ருத்துராஜ் கெய்க்வாட் 38 ரன்களில் அவுட் ஆக நம்பர் 3-ல் இடக்கை பேட்ஸ்மேனான மொயின் அலி வந்தார்.

இவரின் விக்கெட்டுக்காக பார்ட் டைம் ஆஃப் ஸ்பின்னரான மேக்ஸ்வெல்லை கோலி அழைத்து வந்திருந்தார். ஆனால் மொயின் அலிக்கு விரித்த வலையில் டுப்ளெஸ்சி விழுந்து விக்கெட்டை பறிகொடுத்து 31 ரன்னில் வெளியேறினார். தொடர்ச்சியாக இரண்டு செட்டிலான ஓப்பனர்களை இழந்தவுடன் சென்னை பக்கம் அழுத்தம் கூடியது. இந்த சமயத்தில் தற்காப்பாக ஆடாமல் சென்னை அணி கொடுத்த கவுன்ட்டர் அட்டாக்தான் பெரிய பலனை கொடுத்தது. டுப்ளெஸ்சி அவுட் ஆனதற்கு அடுத்த 3 ஓவர்களில் மட்டும் 34 ரன்கள் வந்திருந்தது. மொயின் அலி 23, அம்பத்தி ராயுடு 32 இருவருமே விக்கெட் பற்றி யோசிக்காமல் அடித்து ஆடி அவுட் ஆகியிருந்தனர்.

தோனி மற்றும் ரெய்னா

18.1 ஓவரில் தோனி-ரெய்னா கூட்டணி வெற்றிகரமாக இலக்கை எட்டியது. பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே தனிப்பட்ட வீரர்களை நம்பியிராமல் சென்னை ஒரு அணியாகவே சிறப்பாக செயல்பட்டிருந்தது. 'Too many holes in the ship' என கடந்த சீசனில் இதே UAE-யில் சென்னை வரிசையாக தோற்ற போது தோனி வேதனையோடு சொன்னார். ஆனால், இந்த சீசனில் பெரும் புயலுக்கிடையிலும் இந்த கப்பல் அசராமல் பயணித்து கொண்டிருக்கிறது. 7 வெற்றிகளை பெற்று ஏறக்குறைய ப்ளே ஆஃபுக்கு சென்னை அணி தகுதிப்பெற்றிருக்கிறது.

வீழ்ந்த இடத்திலிருந்தே எழுவதுதானே பெருமை!


source https://sports.vikatan.com/ipl/csks-dominant-victory-over-rcb-in-ipl-2021-at-sharjah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக