Ad

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மதுரை உலா: குளுகுளு காற்று, சிலுசிலு பூங்கா, குட்டீஸ்கள் மகிழ குட்டி ரயிலு - வைகை அணைக்கு ஒரு டூர்!

வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. கொரோனா மூன்றாம் அலையோ மீண்டும் பயமுறுத்துகிறது.

ரிலாக்ஸ் செய்ய வசதியானவர்களுக்கு ஊட்டி, கொடைக்கானல் உள்ளன. நினைத்தால் போய்விடுவார்கள். ஆனால், சாமானியர்களுக்கு?

வைகை அணைப் பூங்கா

தொடர்ச்சியான பணிச்சுமையால் சோர்ந்துபோயிருக்கும் சாதாரண மக்களும் சென்று வரக்கூடிய வகையில் குளிர்ச்சியான சுற்றுலாத் தலங்கள் மதுரைக்கருகில் சில உள்ளன.

இயற்கையை அனுபவிக்கவும் மனதைக் குளிர்ச்சியாக்கவும் தூரமாக உள்ள இடங்களை யோசிக்கும் நாம், அருகில் இருப்பதை மறந்துவிடுகிறோம்.

அப்படியொரு அருமையான இடம்தான் தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணை.

ஆண்டிப்பட்டிக்கு அருகில் அமைந்திருக்கும் வைகை அணை, எப்போதும் இதமான தட்பவெப்பத்துடன் உள்ளது. குழந்தைகள், குடும்பத்தினருடன் சென்று மகிழ்ச்சியுடன் திரும்பி வர ஏற்ற இடம்.

வைகை அணைப் பூங்கா

தேனி மாவட்டத்தில் வருஷநாட்டு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்துக்குப் பயன்பட்டு வருகிறது. இதன் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், முறையாக நீரை விநியோகம் செய்யும் நோக்கிலும் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது 111 அடி உயரமுள்ள வைகை அணை.

மதுரையிலிருந்து உசிலம்பட்டி வழியாக ஆண்டிப்பட்டிக்கு 1 மணி நேரத்தில் பேருந்தில் சென்றுவிடலாம். அங்கிருந்து 8 கி.மீட்டர் தூரத்திலுள்ள வைகை அணையை 10 நிமிடத்தில் அடையலாம்.
வைகை அணை

ஒரு அணைக்கட்டு அமைந்திருக்கும் இடத்தில் அப்படி என்ன இருக்கும் என்று நினைப்பவர்கள் இங்கு வந்து பார்த்தால் ஆச்சர்யப்பட்டுப்போவார்கள்.

வைகை அணை பூங்கா நுழைவு வாயில்

ஆண்டிப்பட்டியிலிருந்து வைகை அணைக்குச் செல்லும்போதே இதமான காற்று முகத்தை வருட ஆரம்பித்துவிடும். தூரத்தில் தெரியும் மலையும், சாலையோரம் கடந்துசெல்லும் மரங்களும் நம்மைக் குதூகலப்படுத்தும்.

பிரமாண்டமாக எழுந்து நின்று தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் வைகை அணை நம்மை வரவேற்கும்.

அங்கிருந்து பார்க்கும்போது அணையின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கும். நீரின் ஈரப்பதம் காற்றில் கலந்து நம் உடலைக் குளிர்விக்கும்.

அணையின் மேற்பகுதிக்குச் சென்று தண்ணீர் தேங்கியிருக்கும் விஸ்தாரத்தைப் பார்ப்பதே மனதுக்கு உற்சாகத்தைத் தரும்.

வைகை அணை

அணையின் பிரமாண்டத்தை அழகான சூழலில் அமர்ந்து ரசிப்பதற்காக அணையின் இரண்டு பக்கமும் அப்போதே பூங்காக்கள் அமைக்கப்பட்டன. ஆரம்பத்தில் மதுரை, தேனி மாவட்ட மக்கள் மட்டும் வந்து பார்த்துவிட்டுச் சென்ற வைகை அணை, தற்போது வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் அளவுக்குப் பிரபலமாகிவிட்டது.

அணையின் இரண்டு கரைப்பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவை இணைக்க நடுவில் பாலம் உள்ளது.

பச்சைப்பசேல் என்றிருக்கும் பூங்காவில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பொம்மைகள், சறுக்குகள், ஊஞ்சல் என அமைத்திருக்கிறார்கள். பூங்காவைச் சுற்றிவர குட்டி ரயிலும் உண்டு. விளையாடுவதற்கு பரந்த இடமும் உண்டு. பூங்கா அழகாகவும் அருமையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

வைகை அணைப் பூங்கா

வைகை அணை நீர் எந்தெந்த மாவட்டங்களுக்கு எப்படியெல்லாம் செல்கிறது என்பதை பூங்காவில் ஒரு மாடலாகச் செய்து வைத்திருப்பது அனைவரையும் ஈர்க்கும். மிருகங்கள், மனிதர்கள் எனப் பல சிலைகளை வடித்து வைத்திருக்கிறார்கள்.

பூங்காவை ரசித்தபடி நடந்து சென்று அப்படியே மேட்டில் ஏறினால் வைகை அணையின் மேற்பகுதிக்குச் சென்று விடலாம்.

நொறுக்குத்தீனி, சிற்றுண்டிகள் விற்கும் கடைகள் உள்ளன. ஆனாலும், சாப்பாடு கொண்டு செல்வது சிறப்பு. ஆண்டிப்பட்டியில் நல்ல ஹோட்டல்கள் உள்ளன. குழந்தைகள் மிகவும் கொண்டாட்டமாக இருப்பார்கள்.

வைகை அணை

பொழுது சாயும் வரை அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு ஊர் திரும்பலாம்.

எப்படிச் செல்வது?

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டிப்பட்டிக்கு அதிகமான பேருந்துகள் உள்ளன. ஆண்டிப்பட்டியிலிருந்து வைகை அணைக்குப் பேருந்துகளும், ஆட்டோக்களும் உள்ளன. சொந்த வாகனம் வைத்திருப்பவர்களுக்கு இன்னும் நேரம் குறையும்.

மதுரையிலிருந்து வைகை அணை 68 கி.மீட்டர், 1 மணிநேரம் 30 நிமிடத்தில் சென்றுவிடலாம். போக்குவரத்து வசதி எப்போதும் உள்ளது. பொதுப் போக்குவரத்தில் ஒரு நபர் சென்று வர உணவுடன் சேர்த்து ரூ.400 செலவாகும்.

(குறிப்பு: கொரோனா காலம் என்பதால் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கவும்.)


source https://www.vikatan.com/lifestyle/travel/madurai-hangout-spots-a-tour-to-vaigai-dam-park

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக