விவசாயிகளின் நிலங்கள் விவசாயிகள் கையில் இல்லை. பல ஏக்கர் விவசாய நிலங்கள் ஏற்கெனவே விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டன. அவர்களுக்கு அதன்மீது இருந்த உரிமை எல்லாம் பறிபோய்விட்டது. இன்றைக்கு ஒரு பெரு நிறுவனம் நினைத்தால் எங்கே வேண்டுமானாலும் நிலங்களை வாங்க முடியும். விவசாய நிலங்களை கபளீகரம் செய்ய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தரகர்கள், கறுப்புப் பணம் வைத்திருப்போர், அரசியல்வாதிகள் எனப் பெரும்படையே இறங்கி வேலை செய்துகொண்டிருக்கிறது. தமிழகம் முழுக்க விவசாய நிலங்கள் கூறுபோட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஓர் உதாரணமாக நம் முன் நிற்கிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரம் ஓசூர்.
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஓசூர் 13-வது இடத்தில் இருக்கிறது என்று சொல்கிறது ஓர் ஆய்வு.
ஓசூரை அடுத்த சூளகிரியில் 2,762 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கும் பணி,
கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் புதிய தொழிற்சாலைகள்,
ஓசூர் - ராயக்கோட்டை சாலை விரிவாக்கம்,
ஓசூர் - தளி சாலையில் பெங்களூருக்குச் செல்ல ரிங் ரோடு,
ஓசூர் - பாகலூர் சாலை விரிவாக்கம் மற்றும் தொழிற்சாலைகள்
- என ஓசூரை மையப்படுத்தி அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு போன்ற காலங்களில் பல கம்பெனிகள் மூடப்பட்டுவிட்டன என்று சொல்லப்பட்டாலும் ஓசூரைச் சுற்றி நிலங்கள் வாங்கி போடுவதில் கம்பெனிகளும், ரியல் எஸ்டேட்டில் ஆர்வமுள்ளவர்களும் பெருத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை, பெங்களூரு, கேரளா என்று பல பகுதிகளுக்குத் தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ரோஜா, சாமந்தி, புதினா, கொத்தமல்லி, கீரை உள்ளிட்டவற்றை அனுப்பிக் கொண்டிருந்த ஓசூரைச் சுற்றியுள்ள நிலங்கள் இன்று கம்பெனிகளுக்காகவும் குடியிருப்புகளுக்காகவும் கட்டப்படுவதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றன.
மிதமான குளிர், மிதமான வெப்பம், காய்கறிகள் வளர்வதற்கான ஏதுவான சூழல் என அறிவிக்கப்படாத வேளாண் மண்டலமாக இருந்து வந்த ஓசூரைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காவு வாங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஓசூர் தொழில் நகரமாக வளர்ந்த விதத்தைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.
ராணிப்பேட்டைக்கு அடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது சிப்காட் ஓசூரில்தான் தொடங்கப்பட்டது. சாதாரண நகரமாக இருந்த ஓசூரில், 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிப்காட்டின் மூலமாக அசோக் லேலாண்டு, டி.வி.எஸ், டைட்டன் கம்பெனிகள் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இங்கு கால்பதிக்கத் தொடங்கின.
இதனால் தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்த ஓசூர், 1992-ல் நகராட்சியாக மாறியது. 70, 80-களில் கால்பதித்த இந்த நிறுவனங்கள் 90-களில் நன்றாக வளர்ந்து வந்தன. ஓசூருக்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வேலை நிமித்தமாக இங்கு குடியேறினர். இதனால் பெரிய அளவில் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.
2000-க்குப் பிறகு, பெங்களூரில் ஐ.டி நிறுவனங்கள் வளர ஓசூரின் வளர்ச்சி இன்னும் வேகமெடுத்தது. காரணம் பெங்களூருவிலிருந்து 35 கி.மீ தொலைவில் இருப்பதால், தினமும் வேலைக்குச் சென்று வர எளிதாக இருந்ததுதான். ஆரம்பத்தில் 1,236 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ஓசூர் சிப்காட், அடுத்தடுத்து விரிந்து இன்று மொத்தம் 2,400 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.
வேலைக்கு ஆட்கள் எளிதாகக் கிடைப்பதாலும், போக்குவரத்து, விமான வசதி அருகிலேயே இருப்பதாலும் பல நிறுவனங்கள் இங்கு நிலத்தை வாங்கிப்போட ஆர்வம் காட்டின. மோட்டார், அதன் உதிரி பாகங்கள், வாட்ச்சுகள், மருந்துப் பொருள்கள் எனச் சுமார் 8,533 தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டு ஓசூரில் இயங்கி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது ஓசூர். மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் இன்னும் வளர்ச்சி வேகமெடுத்து அத்திப்பள்ளி தொடங்கி கிருஷ்ணகிரி வரை நீண்டு கொண்டிருக்கிறது.
எவ்வளவுதான் ஓசூர் வளர்ந்துகொண்டிருந்தாலும் அதற்கிணையாக விவசாயமும் இங்கே உயிர்ப்போடுதான் இருந்தது. 30 ஆண்டுகளாக இதுதான் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அப்படியில்லை. எந்த நேரத்திலும் நம் விவசாய நிலம் நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளப்படும் என்று அஞ்சுகின்றனர் ஓசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள்.
இதுசம்பந்தமாக சூளகிரி தொகுதியைச் சேர்ந்த விவசாயி சுகுமாரிடம் பேசியபோது, ``நாங்க வறட்சியான பகுதியில வாழ்ந்து வந்தோம். அங்கே விவசாயம் பொய்த்துப் போனதால தண்ணீர் வசதியுள்ள இந்தப் பகுதிக்கு 80-கள்ல குடியேறினோம். நெல், முட்டைக்கோஸ், தக்காளி, சாமந்தி என்று தொடர்ந்து விவசாயம் செய்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு இருப்பது 2 ஏக்கர். இப்போ ஆங்காங்கே சிப்காட்டுக்கு நிலம் எடுக்கிறாங்க என்பதால், பயந்துபோய் கிடக்கிறோம். ஏற்கெனவே அருகில் ஒரு கல்குவாரி இருக்குது. இந்தப் பகுதியில தண்ணீர் வசதியும் நன்றாக இருப்பதால், எங்கே வேண்டுமனாலும் நிலங்கள் கையகப்படுத்தப்படலாம்னு சொல்றாங்க.
வி.ஏ.ஓ நோட்டீஸ் கொடுத்துவிட்டால் நிலத்துக்கான பணத்தை வாங்கிக்கொண்டு நாங்க கிளம்பிவிட வேண்டியதுதான். இப்படி பீதியைக் கிளப்பியே நிறைய விவசாயிகள் நெலத்தை வித்துட்டு இருக்காங்க. கெலமங்கலம் பக்கத்துல தெரிஞ்சவங்க நிலத்துல எல்லாம் இன்னைக்கு கம்பெனிக முளைச்சு நிக்குது. வளர்ச்சிக்காக இந்தத் தியாகத்தைக் செய்யலாம்தான். ஆனால், உணவுக்காக யாரிடம் கையேந்துவது?” என்று வருந்துகிறார்.
சூளகிரி சிப்காட் 3-க்கு நிலம் கொடுக்கப்போகும் நல்லகாணகொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் பேசியபோது, ``எங்களுக்கு 5 ஏக்கர் நிலமிருக்கு. 2014-லியே இந்தப் பகுதில சிப்காட்டுக்கு நிலம் எடுக்கப்போறதா அறிவிச்சுட்டாங்க. 6 கிராமங்கள்ல இருந்து 2,762 ஏக்கர் நிலம் எடுக்கப்போறாங்களாம். இதுல 500 ஏக்கர் மட்டும்தான் அரசு நிலம். மீதியெல்லாம் விவசாய நிலங்கள்தான். எங்க நிலம் எப்படியும் எடுக்க மாட்டாங்க என்று நினைச்சிருந்தோம். சமீபத்துல கிராம நிர்வாக அலுவலர் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்திட்டாரு. எங்களுடைய நிலம் மட்டும் போகல. கழனிகிட்டே வீடு கட்டியிருந்ததால வீட்டோட நிலத்தையும் எடுக்கிறதா நோட்டீஸ் கொடுத்திருக்காங்க. கிராமத்துக்குள்ள வீடு இருந்திருந்தா, வீட்டையாவது காப்பாத்திருப்போம். பரம்பரையா வாழ்ந்த வந்த வீடு, விவசாயம் செஞ்ச நிலமெல்லாம் பறிபோகுது. இதுக்காக வருத்தப்படுறதா, இல்ல வாழ்நாளிலேயே நாங்க பாக்காத தொகையைக் கொடுக்கிறதா சொல்ற அரசுக்கு நன்றி சொல்றதா தெரியல. மத்தவங்களுக்கு ஆனது நமக்கு வருதுன்னு விதி பழிய போட்டுட்டுப் போக வேண்டியதுதான்.” என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராம கவுண்டரிடம் பேசியபோது, ``விவசாய நிலங்களை விவசாயிககிட்ட இருந்து பிடுங்கிறாங்களே இதுசம்பந்தமாக விவசாயிகளை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று சூளகிரி பகுதிக்குச் சென்றோம். ஆனால், ஒருசில விவசாயிகள்தான் முன்வந்தாங்க. பல விவசாயிகள் `நாங்க போராட்டதுத்துக்கெல்லாம் வரல. நிலத்த கொடுக்கிறது எங்களுக்கு பிரச்னை ஒண்ணுமில்ல.
உங்களால முடிஞ்சா அரசுகிட்ட இருந்து எவ்வளவு சீக்கிரத்துல பணம் வாங்கிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல வாங்கி கொடுங்க’னு சொல்றாங்க. இதையும் தாண்டி போராட்டம் நடத்தினாலும் யாரும் பெருசா கண்டுக்கல. அதனால விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதையோ, தனியாருக்கு விற்பதையோ எதிர்த்துப் போராட்டம் கூட பண்ண முடியல” என்றார் வருத்தத்தோடு.
இதுகுறித்து ஓசூரில் வசித்து வரும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் பேசியபோது, ``35 ஆண்டுகளுக்கும் மேலாக ஓசூரில் வாழ்ந்து வருகிறேன். கடுமையான சூழல் சீர்கேடுகளுக்குப் பிறகும், இந்தப் பகுதியில் நிலவும் இதமான காலநிலைக்காகவே பணி ஓய்வடைந்த பிறகும் நான் இங்கே இருக்கிறேன். இங்கிருந்த காலநிலை இங்கிலாந்தில் இருக்கும் காலநிலையை ஒத்தது என்பதால் ஆங்கிலேயேர்கள் நம்மை ஆண்டபோது இதை `லிட்டில் இங்கிலாந்து’ என்றே அழைத்து வந்தனர். அதனால்தான் சேலம் மாவட்ட தலைநகரமாக ஓசூரை அறிவித்து ஆண்டுவந்தனர். ஓசூர் தொழிற்பேட்டை (சிப்காட்) ஆரம்பிக்கப்பட்ட பிறகு, ஓசூர் பகுதியில் நிலவும் காலநிலைக்காகவும் பெங்களூருவுக்கு அருகில் இருக்கும் இட அமைப்பால் ரியல் எஸ்டேட் மதிப்புயர்வுக்காகவும் நாட்டின் பலபகுதியினரும், என்.ஆர்.ஐ.களும்கூட இங்கே குடியேறுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதனால் இன்று மிகவேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாக ஓசூர் மாநகராட்சி விரிவடைந்து வருகிறது.
தொழிற்பேட்டை வருவதற்கு முன்பாக இப்பகுதி காய்கறிகள், மலர்கள், புஞ்சைத்தானியங்கள் மற்றும் மல்பெரி வளரும் பகுதி. அதற்கான நிலங்களில் ஒருபகுதி ஒசூர் தொழிற்பேட்டையின் நேரடி மற்றும் மறைமுகத் தேவைகளுக்காக ஏற்கெனவே விவசாயிகளிடமிருந்து பறிபோய்விட்டது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி, பாகலூர், பேரிகை, சூளகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை சில நிறுவனங்கள் வளைத்து போட்டு வைத்துள்ளன. அவற்றில் எந்த தொழிலும் நடைபெறுவதில்லை.
மிச்சம் மீதி நிலங்களை புதிய குடியிருப்பு வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பண்ணை வீடுகள் என்பவற்றுக்காக பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வளைத்துப்போட்டு வருகின்றன. இன்றைக்கு ஒரு பெருநிறுவனம் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு நிலத்தையும் வாங்கமுடியும். நிலத்தில் செய்யப்படும் முதலீடு வளரும் என்பதால் கறுப்புப்பணம் வைத்திருப்போர் தொடங்கி கடன் தவணையில் செலுத்தும் நடுத்தர வர்க்கத்தார் வரை இந்த நிலவேட்டையில் பங்குதாரர்களாக ஆகியுள்ளனர். வேட்டையாடப்பட்ட நிலப்பரப்பில் பெரும்பகுதி வெறுமனே வேலியிடப்பட்ட வீட்டுமனைகளாக புதர்மண்டிக் கிடக்கின்றன.
Also Read: காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க சிறுதானிய விவசாயம்; ஒடிசா பழங்குடிகளின் வியக்க வைக்கும் சாதனை!
விவசாயத்தில் போதிய வருமானம் இல்லை, நிலத்தை வைத்துக்கொண்டு இன்னும் எவ்வளவு நாள்களுக்குத்தான் தாக்கு பிடிப்பது என்று விவசாயிகள் மீது உளவியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இன்னொன்று நல்ல விலை கிடைக்கும் என்கிற ஆசை வார்த்தைகள், வாழ்க்கையின் தேவைகள் என்று ஒரு நிலத்தைத் துறப்பதற்கான மனநிலை விவசாயியிடம் கட்டமைக்கப்படுகிறது. போதாக்குறைக்கு ஓசூரைச் சுற்றி ரிங் ரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி சாலைகள் விரிவாக்கம், புதிய தொழிற்போட்டைகள் போன்றவற்றுக்காக அரசிடம் குறைந்த விலைக்கு விற்பதைவிட இப்போதே கூடுதல் விலைக்கு விற்று தப்பிக்கலாம் என்கிற கருத்தும் விவசாயிகளுக்குள்ளது.
ஓசூரைச் சுற்றி வன நிலங்களிலும் அரசு அனுமதியோடு கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மலிந்திருக்கும் கிரானைட் தொழிற்சாலைகளிடம் அவற்றின் சுற்றுவட்டாரங்களில் உள்ள நிலங்கள் பறிபோயுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சூளகிரி பகுதியில் புதிய தொழிற்பேட்டையை (சிப்காட்) அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி சாலையில் உள்ள போலுப்பள்ளி தொழிற்பேட்டை தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னமும் முழுமையாகச் செயல்படவில்லை. ஓசூர் ஐ.டி பார்க் பத்தாண்டுகளுக்கும் மேலாகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் புதிய தொழிற்பேட்டை வரும்போது விவசாயிகளிடம் எஞ்சியுள்ள துண்டுத்துக்காணி நிலமும் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
Also Read: தமிழகம் முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற அரசு செய்யவேண்டியவை என்னென்ன? விரிவான அலசல்!
பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக பொறுப்பு வாய்ந்த ஓர் அரசாங்கம் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்குவது வரவேற்கக்கூடியதே. ஆனால், அவை ஏன் குறிப்பிட்ட சில பகுதிகளிலேயே குவிய வேண்டும்? ஏற்கெனவே மாநிலம் முழுவதுமுள்ள தொழிற்பேட்டைகளின் இடத்தை முழுமையாகப் பயன்படுத்துவது, மூடிக் கிடக்கும் தொழிற்சாலைகளை நவீனப்படுத்தி இயக்குவது, செயல்படாத ஆலைகளின் இடத்தை மறு ஒதுக்கீடு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலே புதிதாக தொழிற்பேட்டைக்கென நிலம் எடுக்கும் தேவை இருக்காது. சிறப்பு பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வருவதாகக் கூறி முன்பு கையகப்படுத்திய நிலங்களிலும், அரசுக்குச் சொந்தமான இடங்களிலும் முதலில் சூழலுக்கிசைவான தொழிற்பேட்டைகளை அமைப்பதன் மூலம் விவசாய நிலங்களின் மீதான விவாசயிகளின் உரிமை பாதுகாக்கப்படும்” என்றார்.
இதுதொடர்பாக வேளாண் பத்திரிகையாளர் எம்.ஜே.பிரபுவிடம் பேசியபோது, ``விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு அரசுகளிடம் உருப்படியான எந்தத் திட்டமும் இல்லை. அதனால்தான் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர். விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு தண்ணீர் வசதி, சாகுபடி செய்வதில் உள்ள பிரச்னைகளை சரி செய்யாதது, விளைந்த விளைபொருளை நியாயமான விலைக்கு விற்பதற்கான சந்தைகள் இல்லாதது என்று விவசாயத்தில் பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கின்றன. வருமானம் உத்தரவாதம் கொடுக்க இருந்த எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை உள்பட பல கமிட்டிகளின் அறிக்கைகளை அரசுகள் நடைமுறைப்படுத்தவில்லை.
ஒரு நகரத்தில் பெட்டிக்கடை நடத்துபவர்கூட நவீன வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வசதிகளோடு வாழும்போது, விவசாயிகளுக்கும் அந்த எண்ணம் எழுவது இயல்புதான். இவ்வளவுக்கும் ஓசூரைச் சுற்றி பட்டு வளர்ப்பு, மலர் சாகுபடி, பிரிட்டிஷ்காரன் கொண்டுவந்த காய்கறிகள் சாகுபடி சக்கைப் போடு போடுகின்றன. அப்படியிருந்தும் நிலங்களை விற்கும் நிலைக்குப் போகிறார்கள் என்றால் விவசாயத்தில் எதிர்பார்க்கும் வருமானம் இல்லாததே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய விவசாயிகளின் மாத வருமானம் ரூ.8,000 என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு ஒரு விவசாயி எப்படி வாழ்க்கை நடத்த முடியும். விவசாயிகளுக்கு ஒரு சமூக பாதுகாப்பை உருவாக்கினால்தான் விவசாய நிலங்களின் விற்பனை குறையும். இல்லையென்றால் ஓசூர் மட்டுமல்ல; இந்தியா முழுக்க விவசாய நிலங்களின் விற்பனை தொடரும்” என்றார்.
ஓசூர் ஓர் உதாரணம்தான். இதுபோன்று சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் என்று பட்டியல் நீள்கிறது.
தமிழ்நாட்டில்
சிப்காட்,
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,
ஆறுவழிச்சாலை,
மாநகர, நகர விரிவாக்கம்,
தொழிற்சாலை விரிவாக்கம்,
குடியிருப்புகள் என அனைத்துக்கும் முதலில் கைவைப்பது விவசாய நிலங்கள்தான்.
உணவு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நன்றாக விவசாயம் நடக்கும் பகுதிகளைச் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என்பதே சூழலியலாளர்களின் எதிர்பார்ப்பு. இல்லையென்றால் எதிர்காலத்தில் உணவு உற்பத்தியை தார் ரோட்டிலும், தொழிற்சாலைகளுக்குள்ளும்தான் உருவாக்க முடியும்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/how-hosur-agriculture-lands-are-slowly-encroached-by-govt-and-private-players
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக