நமது அண்டை நாடான இலங்கை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல்வேறு பொருளாதார சிக்கல்களைச் சந்தித்துவருகிறது. இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலா மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது கொரோனா காலகட்டம் என்பதால், அங்குப் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ரூபாய் மதிப்பும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. தொடர்ந்து இலங்கையின் அந்நிய செலவாணியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் இறக்குமதி குறைந்ததன் காரணமாக இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், விரைவில் இலங்கை மிகவும் மோசமான உணவுப் பஞ்சத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
அவசரநிலை பிரகடனம்:
சமீப காலமாக இலங்கையைக் கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா தொற்று, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு சிக்கலில் இலங்கை மக்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக அரிசி, சர்க்கரை, பால் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். நிலைமை மிகவும் மோசமாகச் செல்வதால், இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாட்டில் பொருளாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
உணவுப் பொருட்கள் விலையைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் இந்த அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக, முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் அத்தியாவசிய சேவைகளின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்படும். அனைத்து அத்தியாவசிய பொருட்களும் சரியான விலையில் விற்பதை ராணுவம் மேற்பார்வையிடும் என்றும் அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
எதனால் இந்த நிலை?
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பதவியேற்றது. புதிய அரசு பொறுப்பேற்ற அந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 20 சதவிகித்ததுக்கும் அதிகமாகச் சரிந்தது. இலங்கை மத்திய வங்கிகளின் தரவுகளின் படி 2019-ம் ஆண்டு இலங்கையின் அன்னிய செலவாணி கையிருப்பு 7.5 மில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஜூலை மாத நிலையில் இந்த கையிருப்பு வெறும் 2.8 மில்லியன் டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7.5 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
குறைந்து வரும் இலங்கை ரூபாயின் மதிப்பை அதிகரிக்க, இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதுடன், வராக்கடனை வசூல் செய்வதில் தீவிரம் காட்டிவருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பைச் சேமிக்க, பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதித்திருந்தது. இருந்தபோதிலும் இலங்கையில் நிலைமை மோசமாகிக்கொண்டுதான் போகிறது. இறக்குமதியாளர்கள், உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யக்கூடப் பணம் இல்லாத சூழலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Also Read: `உரிய காலத்தில் கடனைச் செலுத்தத் தவறினால்...' - சீனா வைத்த`செக்'; திணறும் இலங்கை! - என்ன பிரச்னை?
சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இலங்கை உணவுக் கையிருப்பு பற்றிக் கேள்வியெழுப்பியபோது, ``நீங்கள் கூறுவது உண்மைதான், இன்னும் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனை இவ்வாறே கையாளுவது மிகவும் சவாலானது. இந்த பிரச்சனை குறித்து அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிவப்பு எச்சரிக்கை என்ற அளவிற்குச் செல்லவில்லை. இருந்தாலும் எந்த எச்சரிக்கையையும் உதாசீனப்படுத்தவும் இல்லை. இதுகுறித்து அரசு சிறப்புக் கவனம் காட்டிவருகிறது. நிச்சயம் இதைக் கையாள முடியும்" என்று பேசியிருந்தார்.
இலங்கையில் எரிசக்தித்துறை அமைச்சரான உதய கம்மன்பில, " இலங்கை மக்களிடம் எரிபொருட்களை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு சேமிக்கப்படும் அந்நிய செலாவணியைக் கொண்டு மருந்து மற்றும் தடுப்பூசிகள் வாங்கப் பயன்படும்" என்று கூறியுள்ளார். மேலும், எரிபொருள் பயன்பாடு குறையவில்லை என்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் ரேஷனில் எரிபொருள் வழங்கவேண்டிய சூழல் உருவாகும் என்றும் அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/international/what-is-the-reason-for-the-sri-lanka-food-crisis
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக