Ad

சனி, 18 செப்டம்பர், 2021

கருப்பாயி எடுத்த புதையல்! - அம்மா சொன்ன திக் திக் குடும்ப கதை

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"ஏய் கருப்பாயி வெளிய வாடி....." இன்னும் நிறைய தங்க காசு தாரேன்... என்ற குரல் குடிசையின் வெளிப்புறத்தில் இடைவிடாது இரவு முழுவதும் ஒலித்து கொண்டிருக்க குடிசைக்குள் ஒருவிதமான நடுக்கத்துடன் கதவிற்கு முன்பு உலக்கை வெளக்கமாறு செருப்பு ஆகியவற்றை போட்டு கொண்டு கருப்பாயி உள்ளே இருந்த நடுக்கத்தை வெளியில் காட்டாமல்

"இந்தா போறியா இல்லையா...." எனக்கு எதுவும் வேணாம்.... என்று கூறிக்கொண்டிருந்தாள். குடிசைக்கு வெளியில் இருந்தது யார்? என்ன நடந்தது?


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி. காவிரிக்கரையின் அருகில் மகேந்திரவர்ம பல்லவரால் பிரம்மதேயமாக அறிவிக்க பட்ட மகேந்திர மங்கலம் என்ற ஊரின் அருகிலுள்ள தொட்டியம் என்ற ஊரின் கிழக்கு பகுதிக்கு கோட்டை மேடு என்று பெயர். அங்குள்ள பெருவாரியான நிலங்கள் எல்லாம் மகேந்திரமங்கலம் பண்ணைக்கு சொந்தமானவை. கடவுள் நம்பிக்கை மிகுந்த காலம். கோட்டை மேடு பகுதியில் வாழையும் நெல்லும் கரும்பும் செழித்து வளர்ந்து சிறப்பான விளைச்சலை கொடுக்கும் வயல் வெளி தொடங்கும் இடத்தினருகில் இருந்தது அந்த குடிசை.

Representational Image

அதிகாலை நேரம். விழிப்படைந்த பறவையினங்கள் தங்களுடைய அன்றாட உணவு தேடல்களை தொடங்குமுன்பாக ஆனந்த இரைச்சல்களை வாரி இறைக்க, சாம்பல் பூக்க ஆரம்பித்த கிழக்கு வானமும் அதனால் ஒளி குன்றிய கிழக்கு வானத்தில் தோன்றிய வெள்ளியுமாய் காலை நேர கதிரவன் இன்னும் சற்று நேரத்தில் உதயமாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.


வெள்ளி முளைத்த ஓரிரு நாழிகைக்கு முன்பாக முதற் சேவலின் கூவலில் விழித்த கருப்பாயி அந்த நேரத்திலேயே மங்கலான எண்ணெய் விளக்கில் பளிச்சென கழுவிய முகமும் சுருட்டி முடிந்த கூந்தலுடனும் காலை உணவு தயாரித்து கொண்டிருந்தாள். கருப்பாயிக்கு அற்புதமான கை வண்ணம். அந்த அதிகாலை நேரத்திலேயே தாளித்த குழம்பின் மணத்தை அனுபவித்து நுகர்ந்து கொண்டே கட்டிலில் விட்டேத்தியாக வானத்தை பார்த்து கொண்டு படுத்திருந்தார் கிழவர்.

பொழுது புலர்ந்ததும் காலை உணவை முடித்து விட்டு ஒரு தூக்கு சட்டியில் மத்திய உணவை எடுத்து கொண்டு கிழவர் வயலுக்கு வேலைக்கு கிளம்பினார். சற்று நேரம் கழித்து கருப்பாயியும் காலை உணவை முடித்து கொண்டு பேரனை திண்ணை பள்ளி கூடத்துக்கு அனுப்பிவிட்டு பள்ளி முடிந்ததும் வீட்டில் பத்திரமாக இருக்க வலியுறுத்தி விட்டு இன்னொரு தூக்கு சட்டியில் மதிய உணவை எடுத்து கொண்டு பட்டியிலிருந்து ஆடுகளையும் ஒரு செவலை பசுவையும் கன்றையும் மேய்ச்சலுக்காக ஓட்ட ஆரம்பித்தாள்.

Representational Image

தலையில் ஒரு துண்டை முண்டாசாக வெயிலுக்கு கட்டிக்கொண்டு புல்வெளிக்கு கால்நடைகளை விரட்டி கொண்டிருந்தாள். உச்சி பொழுது வரை காவிரி ஆற்றின் கரையில் புற்களை உண்ட ஆடுகளும் பசுவும் ஆற்றில் நீர் குடித்து விட்டு இளைப்பாற எப்பொழுதும் ஆலமரத்தடி அய்யனார் கோவிலுக்கு ஒட்டி கொண்டு செல்வது வழக்கம். ஒரு கலயத்தில் மொண்டு கொண்டு வந்திருந்த காவிரி நீரை அருகில் வைத்து விட்டு மதிய உணவை ஆலமர நிழலில் அமர்ந்து உண்ண தொடங்கினாள்.

சாப்பிட்ட பின்பு கை கழுவி வாய் கொப்பளித்து அணைத்து ஆடுகளும் பசுவும் இருக்கின்றனவா என பார்த்து விட்டு சற்று கண்ணயர தலையில் இருந்த துண்டை உதறி கீழே விரித்து வலது கையை மடக்கி தலைக்கு வைத்து கொண்டு தூக்கம் சற்றே கண்ணை இழுக்க கண்ணசர ஆரம்பிச்சா. சிறிது நேரத்திற்கு பிறகு திடீரென்று ஒரு குளிர்ந்த காற்று வீசுவது போலவும் ஒரு குதிரை கணைப்பது போலவும் ஒரு உணர்வு தோன்ற திடுக்கிட்டு கண் விழித்தாள்.

நெற்றியில் முத்து முத்தாக வியர்வை. சட்டென்று எழுந்து அமர்ந்தாள். கலயத்திலிருந்து சிறிது நீரை முகத்திலறைந்து கழுவி கொண்டு அய்யனாரை கும்பிடலாம் என அய்யனார் சிலைக்கருகே சென்றவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அய்யனார் சிலைக்கும் அய்யனாரின் வாகனமான வெள்ளை குதிரை வாகனத்துக்கும் இடையே உள்ள கற்கள் பாவிய தரையில் ஒரு புலி தோலில் பொற்காசுகள் பரப்பி வைக்க பட்டு தக தகவென உச்சி பொழுது கடந்து ஓரிரு நாழிகை கடந்த சூரிய ஒளியில் மின்னி கொண்டிருந்தது.

கருப்பாயிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திடு திப்பென்று இப்படி ஒரு காட்சியை கண்டதும் செய்வதறியாது சில நொடிபொழுது சிலை போல நின்று விட்டாள். ஆனாலும் சில கணங்களில் சுதாரித்து கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள். பல காலமாக ஊருக்குள் உலவும் வதந்தியாக அய்யனார் கோவில் புதையல் பற்றிய நினைப்பு வர அது வதந்தியல்ல உண்மைதான் என்பது உரைக்க சுறுசுறுப்பாக முடிந்த அளவு பொற்காசுகளை அள்ளிக்கொண்டு தனது சேலையில் போட சேலையில் போட்டவுடன் பொற்காசுகள் வட்ட வடிவ மண் ஓடுகளாக மாறியது. அதிர்ச்சி அடைந்த கருப்பாயி மறுபடியும் அந்த மண் ஓடுகளை புலி தோலில் கொட்ட அனைத்தும் பொற்காசுகளாக மாறின.

அய்யனார் கோயில்

ஏன் இப்படி நடக்கிறது, புலித்தோலில் இருக்கும்போது தங்கமாகவும் கையில் எடுத்தால் மண் ஓடுகளாகவும் மாறுகின்ற அதிசயத்தை எண்ணி என்ன செய்வது என்று யோசனை செய்த கருப்பாயிக்கு,

அப்பொழுது தான் புதையலை கண்டால் அதனை அசுத்த படுத்தினால் தான் அதனை பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் என்று யாரோ எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. அத்தனை பொற்காசுகள் மீதும் சிறுநீர் கழித்து அசுத்த படுத்திய பின் மீண்டும் பொற்காசுகளை தன்னுடைய முண்டாசை விரித்து அள்ளி போட இம்முறை பொற்காசுகள் பொற்காசுகளாகவே துண்டில் இருக்க அவற்றை முடிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் விரைவாக ஆடு மாடுகளை ஒட்டி கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

ஆடுகளை பட்டியில் கூட அடைக்காமல் உள்ளே சென்று ஒரு பானையில் அனைத்து பொற்காசுகளையும் கொட்டி மூடிவிட்டு கால்நடைகளை அடைத்து விட்டு இரவு உணவை சமைக்க ஆரம்பித்தாள்.

அந்தி பொழுதில் வீட்டிற்கு வந்த கிழவரிடம் நடந்தவற்றை கூறினாள். அவரோ,

ஏலா கருப்பாயி ... நீ இப்போ கொண்டாந்திருக்கிறது அய்யனார் பலகாலமா காவ கத்துக்கிட்டு வர புதையல்....

அதனால இன்னைக்கு ராவுல அய்யனார் கண்டிப்பா அத தேடி நம்ம ஊட்டுக்கு வருவாரு... அதனால நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். என்ன நடந்தாலும் ஊட்ட உட்டு வெளிய வராத. கதவை சாத்திக்கிட்டு நிலைப்படி முன்னால வெளக்கமாறு செருப்பு உலக்கை எல்லாம் போட்டு வச்சுட்டு படுத்துக்க. அய்யனார் நிலவாசல் தாண்டி உள்ள வரமாட்டாரு.... நீயும் என்ன சொல்லி கூப்பிட்டாலும் வெளிய வராத. என்ன நாஞ்சொல்றது புரியுதா லே அப்படினு சொல்லிட்டு படுத்துட்டாரு.


கருப்பாயிக்கு உள்ளுக்குள் கொஞ்சம் நடுக்கம் இருந்தாலும் என்னதான் நடக்கும் பாப்பமுனு என்று ஒரு சிறிய துணிச்சல். கொஞ்சம் கொஞ்சமா ஊரெல்லாம் அடங்கி ராத்திரியாச்சு. உள்ளாரா பக் பக்னு இருக்க கருப்பாயி தூக்கம் வராம கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருந்தா. ஒருவழியா நடுசாமத்துக்கு கொஞ்ச நேரம் இருக்கையிலே குதிரையோட குளம்படி சத்தம் "டொக்..டொக்.......டொக்..டொக்..." அப்படினு எட்டத்துல கேக்க ஆரம்பிச்சது.கொஞ்ச கொஞ்சமா பக்கத்துல வர ஆரம்பிச்சு சரியாய் நாடு சாமத்துல குடிசைக்கு முன்னால வந்து நிக்கவும் குதிரை ஊரே அதிருனாப்ல கணைக்கவும் சரியாய் இருந்துச்சு..

Representational Image

மூச்சை இறுக்கி புடிச்சுகிட்டு ஊட்டுக்குள்ள இருந்த கருப்பாயிக்கு அவளோட இதய துடிப்பே பெரிய சத்தமாக கேக்க ஆரம்பிச்சது. அப்போ வெளியிலிருந்து "ஏய் புள்ள கருப்பாயி கருப்பாயி வெளிய வாடி....." இன்னும் நிறைய தங்க காசு தாரேன்... என்ற கிழவரின் குரல் அன்பொழுக கேட்க தொடங்கியது.

கருப்பாயியும் பதிலுக்கு "போறியா இல்லையா எனக்கு ஒன்னும் காசு வேணாம்..."என்று உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியில் தைரியமாக சொல்லிக்கொண்டே இருந்தால். இது போல சில நாழிகைகள் வெளியிலிருந்து குரல் கருப்பாயியை அன்பு கோபம் கட்டளை மிரட்டல் ஆகிய பல தொனியில் வெளியில் அழைப்பதும் அதற்கு கருப்பாயி மறுதலிப்பதுமாக இரவு நகர்ந்து கொண்டிருந்தது. முதல் சேவல் கூவ ஆரம்பித்த அதிகாலை பொழுதில் விடியலுக்கு சற்று முன் "ம்ம்க்க்கும்ம்ம்ம்............" என மிக கோபமாக குதிரை கனைக்கும் சத்தமும் தொடர்ந்து குதிரை ஓட துவங்கிய ஒலியும் கேட்க சில நொடிகளில் குதிரையின் குளம்பொலி கொஞ்சம் கொஞ்சமா தேஞ்சு அப்புறமா நின்னு போச்சு..

அப்பாடா... அய்யனாரு கிளம்பிட்டாருனு ஒரு பெரு மூச்சு விட்டா கருப்பாயி. தன்னோட புதையலை சேர்க்க வேண்டிய இடத்தில செத்துட்டோமுன்னு நெனச்சாரோ என்னவோ...அதுக்கப்புறம் அய்யனாரு கருப்பாயியை தேடி வரவே இல்ல.

அந்த காச வச்சுதான் இந்த வீட்டையும் நூறு பவுன் நகையும் செஞ்சதாகவும் அவங்க வாழ்க்கை ரொம்ப செல்வ செழிப்பா மாறுனதாகவும் என்னுடைய பெரியப்பாவோட (கதையின் ஆரம்பத்தில் வரும் கருப்பாயி பேரன்) நூறு வருடங்களுக்கு முன் கட்ட பட்ட வீட்டின் கதையை சொல்லி முடித்தார் என்னுடைய அம்மா.

இது உண்மையானு தெரியல ஆனா எங்களோட சின்ன வயசுல இந்த கதையை உடம்பெல்லாம் மயிர்கூச்செரிய ஒரு விதமான திகிலோடையும் பயத்தோடையும் கேட்டுருக்கோம். அந்த அய்யனார் கோயில் இன்னும் இருக்கு ஆனா ஒரு தடவை கூட அங்க போனதில்லை. எல்லாம் ஒரு பயம்தான்... ஹி ஹி ....


-ஆனந்தகுமார் முத்துசாமி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-short-story-about-ayyanar-treasure

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக