Ad

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

டெல்லி: 50 இடங்களில் கத்திக்குத்து; இளம்பெண் கொடூரக் கொலை! - கூட்டுப்பாலியல் வன்கொடுமையா?

டெல்லி சங்க விஹார் பகுதியைச் சேர்ந்தவர் நிரோஷா (21)(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). காவல்துறையில் சேர்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிரோஷாவுக்கு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காவல்துறை பணி கிடைத்தது. அதையடுத்து, அவர் கிழக்கு டெல்லியின் SDM அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி பணிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்று கொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிழக்கு டெல்லி போலீஸார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள்.

முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண்ணுடன் வசித்து வந்ததாகக் கூறப்படும் நிஜாமுதீன் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழவே, நிஜாமுதீனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஆனால், போலீஸார் தன்னை தேடுவது தெரிந்து தலைமறைவான நிஜாமுதீன் பின்னர், காவல்நிலையத்தில் இளம்பெண்ணை கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்தார்.

நிஜாமுதீன் - ரஃபியா

நிஜாமுதீனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து போலீஸார் விசாரித்தனர். அப்போது நிஜாமுதீன், கொலைசெய்யப்பட்ட பெண்ணும் தானும் பல வருடங்களாகக் காதலித்து வந்ததாகவும், அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்ததாக கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, போலீஸார் காதல் மனைவியைக் கடத்தி கொன்றதற்கான காரணம் குறித்துக் கேட்கவே, நிஜாமுதீன் கொலை செய்ததன் பின்னணியை விவரித்திருக்கிறார். `என்னுடைய வீட்டாரைக் கூட மறந்து விட்டு, காதலி தான் முக்கியம் என்று அவளை கரம் பிடித்தேன். அவளும் அரசாங்க பணியில் சேர்ந்தாள், வாழ்க்கை நன்றாகவே நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், சமீபமாக அவரின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்தது. அவள் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக எனக்குத் தெரிந்தது. அது குறித்துக் கேட்ட போது, எங்கள் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது.

பலமுறை சொல்லியும் அவள் கேட்கவில்லை. அதனால் அவளைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். ஆகஸ்ட் 27-ம் தேதியன்று, பணிமுடிந்து திரும்பிக் கொண்டிருந்த அவளை ஃபரிதாபாத்தின் சூரஜ்குண்ட் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். பின்னர், இருவருக்கும் இடையே நீண்டு கொண்டே சென்ற வார்த்தை மோதல்கள் ஒருகட்டத்தில் கொலையில் முடிந்தது. அவளை நான் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன்" என்று அதே உக்கிரத்துடன் காளிந்தி குஞ் காவல்நிலைய போலீஸாரிடம் நிஜாமுதீன் கூறியிருக்கிறார். அப்பெண்ணின் உடலில் 50 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

சரணடைந்த நிஜாமுதீனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நிஜாமுதீன் கூறியவற்றை ஏற்க மறுத்த கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர், நிஜாமுதீன் எங்கள் வீட்டுப் பெண்ணை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாகவும், அதை மறைக்கவே தங்கள் மகள் மீது நிஜாமுதீன் குற்றம் சுமத்துவதாகவும் போலீஸாரிடம் வாதிட்டனர். மேலும், கொலை தொடர்பாக நியாயமான முறையில் விசாரித்து கொலையின் உண்மை பின்னணியை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் போலீஸாரை வலியுறுத்தினர்.

இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய இளம்பெண்ணின் உறவினர்கள், "எங்கள் மகள் எங்கள் பேச்சைக் கேட்காமல் ஏமாற்று பேர்வழி நிஜாமுதீனின் வலையில் வீழ்ந்தார். எங்களிடம் இருந்து ரஃபியாவை பிரித்துச் சென்ற அந்த நபர் திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பது கூட உறுதியாக எங்களுக்கு தெரியாது. குற்றம்சாட்டப்பட்டுள்ள நிஜாமுதீன், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எங்கள் மகளைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதை அவள் வெளியில் கூறி விடுவாளோ என்ற பயத்தில் தான் அவர்கள் சேர்ந்து அவளைக் கொலை செய்திருக்கின்றனர்.

எங்கள் மகளின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுள்ளது. அவளின் உடலில் அடித்துத் துன்புறுத்தியதற்கான காயங்கள் ஏராளமாக உள்ளது. அதே போல், அவளுடைய அந்தரங்க உறுப்பும் காமுகர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவல்துறையினர், குற்றவாளி நிஜாமுதீன் மட்டும் தான். அவர் சரணடைந்து விட்டார் என்கின்றனர். இந்த கொலையில் தொடர்புடைய பல குற்றவாளிகள் இன்னும் வெளியில் சுதந்திரமாக இருக்கின்றனர். எனவே, காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்" என்றனர்.

Also Read: மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை: கொடூரச் சம்பவமும் விசாரணை நிலையும் - ஒரு பார்வை

இளம் பெஅண் கொலை தொடர்பாகத் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைஸி, "அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனை. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அவர் எப்படி..என்..? கொல்லப்பட்டார் என்பதை அறிந்துகொள்ள அறிந்துகொள்வதற்கு அவர்களின் குடும்பத்தினர் தகுதியானவர்கள். எனவே, டெல்லி அரசாங்கத்திற்காக உழைத்த இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

அஸாதுதீன் ஓவைஸி

கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டரில், 'பாலியல் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட வேண்டும். சமூகம் இதுபோன்ற ஆபத்தான நபர்களைப் புறக்கணிக்க வேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும்',

ஜோதிமணி

'பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதைத் தடுப்பதற்கு ஆரம்பக்கல்வி முதலே பெண்கள் சமத்துவம், மரியாதை, பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாகத் தண்டிக்கவேண்டும்', 'ரஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி. கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு, தொண்டை அறுக்கப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது' என்று தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

Also Read: நாமக்கல்: போர்டில் `ஸ்பா மசாஜ்’; உள்ளே பாலியல் தொழில்! - அதிரடிகாட்டிய போலீஸார்

இளம்பெண் கொலை விவகாரம் தேசியளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பெண்ணிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்தக் கொலை தொடர்பாக தங்களது கருத்துக்களை ஹேஷ்டேகுகள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே, உடற்கூறாய்வு முடிவுகளின் படி, கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்ற தகவலும் போலீஸ் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/21-year-old-civil-defence-officer-brutally-murdered-in-delhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக