கொரோனா முதல் அலையின்போது, வெளியில் இருந்து வரும் காய்கறி, பழங்களையும், கூரியர், செய்தித்தாள் போன்ற பொருள்களையும் டிஸ்இன்ஃபெக்ட் செய்வோம் அல்லது இரண்டு மூன்று நாள்களுக்கு வெளியில் வைத்துவிட்டு எடுப்போம். இன்றும் அதைச் செய்ய வேண்டுமா? மனிதர்களிடம் இருந்து பரவுவதைப்போல இது போன்ற பொருள்கள் மூலமும் கொரோனா பரவுமா? அப்படியென்றால் எத்தனை நாள்களுக்கு இந்தப் பொருள்களைத் தனியாக வைக்க வேண்டும். வீட்டிலேயே எளிய முறையில் டிஸ்இன்ஃபெக்ட் செய்வது எப்படி?
- ரமேஷ் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
``கொரோனாவின் முதல் அலையில் அந்த நோய், அது ஏற்படுத்திய பாதிப்புகள், அதன் பரவும் தன்மை என எல்லாமே நமக்குப் புதிதாக இருந்தன. பல யூகங்கள், பல அனுமானங்கள், பல கேள்விகள், பல சந்தேகங்கள் என அப்போதுதான் அந்த நோய் தொடர்பான பல விஷயங்களையும் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருந்தோம்.
அந்தக் குழப்பங்களின் விளைவாகக் காய்கறிகள், பழங்கள், வெளியிலிருந்து வரும் பொருள்கள் என எதன் மூலமும் தொற்று பரவுமோ என்று பயந்திருக்கிறோம். ஆனால், இந்த ஒன்றரை வருட அனுபவத்தில் கொரோனாவைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டிருக்கிறோம், தெளிவடைந்திருக்கிறோம். அதன்படி கொரோனா வைரஸானது ஒருவருக்குப் பரவவோ, தொற்றவோ அதற்கு மனிதர் அல்லது விலங்கு என ஓர் ஓம்புயிரி தேவைப்படுகிறது.
Also Read: Covid Questions: கொரோனா தொற்று குறைகிறது; இன்னும் நான் மாஸ்க் அணியத்தான் வேண்டுமா?
எனவே காய்கறிகள், பழங்கள், வெளியிலிருந்து வரும் பொருள்களுக்குத் தொற்றை ஏற்படுத்தும் தன்மை இருப்பதில்லை என்று தெரிந்துகொண்டோம். ஆனாலும் உலக சுகாதார நிறுவனம், எல்லோரையும் அடிக்கடி கைகளைக் கழுவ அறிவுறுத்துகிறது. வெளியிலிருந்து வரும் பொருள்களின் உறைகளை நீக்கிவிட்டு, காய்கறி, பழங்கள் போன்றவற்றை குழாய் தண்ணீரில் கழுவிக் காயவைத்துப் பயன்படுத்தவும் சொல்கிறது.
மற்றபடி காய்கறிகள், பழங்கள் உட்பட வெளியிலிருந்து வரும் பொருள்களை சோப்பு போட்டுக் கழுவுவதோ, மஞ்சள் தூள் கரைசலில் கழுவுவதோ, ஹைப்போகுளோரைடு சேர்த்துக் கழுவுவதோ தேவையற்றது."
Also Read: Covid Questions: நம்பிக்கை அளிக்கும்படி கொரோனாவுக்கு புதிய மருந்துகள் ஏதேனும் விரைவில் வருமா?
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/should-we-still-need-to-sanitize-outside-products-to-avoid-covid-infection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக