Ad

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

கோலி வருவதற்குள் ஜார்வோ வந்துவிட்டார்... லார்ட்ஸில் மட்டுமல்ல,லீட்ஸிலும் தொடரும் ரசிகரின் அட்டகாசம்!

இந்திய கிரிக்கெட் மைதானங்கள் போல் இங்கிலாந்து மைதானங்கள் கிடையாது. இந்திய மைதானங்களில் கேலரியில் இருக்கும் ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழையமுடியாதபடி இரும்புக்கம்பி தடுப்பு போடப்பட்டிருக்கும். ஆனால், இங்கிலாந்து மைதானங்களில் ரசிகர்களை அப்படி கைதிகள் போல் நடத்துக்கூடாது என்கிற நடைமுறை பின்பற்றப்படுவதால் ரசிகர்கள் மைதானத்துக்குள் ஈஸியாக நுழைய முடியும்.

இதனால் இங்கிலாந்து மைதானங்களில் வெற்றிபெற்றதும் அந்த வெற்றியைக்கூட கொண்டாடமுடியாமல் ரசிகர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என வீரர்கள் தலைதெறிக்க பெவிலியன் நோக்கி ஓடுவதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.

இதனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மைதானங்களில் எல்லை மீறும் சில ரசிகர்களும் இருக்கிறார்கள். நிர்வாணமாக மைதானத்துக்குள் ஓடுவது, மைதானத்துக்குள் இறங்கி கலாட்டா செய்வது, வீரர்களை தாக்க முற்படுவது போன்ற சில நிகழ்வுகளும் அடிக்கடி நடக்கும். அந்தவகையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரிலும் ஒரு ரசிகர் எல்லை மீறியிருக்கிறார். ஆனால், அவரது எல்லை மீறல்கள் ரசிக்கும்வகையில் இருப்பதால் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகியிருக்கிறார்.

டேனியல் ஜார்விஸ்

அந்த ரசிகரின் பெயர் டேனியல் ஜார்விஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் பிராங்க் செய்வதில் ஆர்வம் கொண்டவர். இங்கிலாந்து - இந்தியா மோதிய லார்ட்ஸ் டெஸ்ட்டின் நான்காவது நாளில் திடீரென இந்திய கிரிக்கெட் வீரர் போன்று வெள்ளை ஜெர்ஸியில் ஸ்பான்சர் லோகோக்களுடன் களமிறங்கி ஃபீல்டிங் செட் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவரது ஜெர்ஸியின் பின்புறம் ஜார்வோ - 69 என எழுதியிருந்தது.

இப்படி ஒரு கேரெக்டரை திடீரென களத்தில் பார்த்ததும் இந்திய வீரர்கள் முகமது சிராஜும், ரவீந்திர ஜடேஜாவும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பின்னர் பாதுகாவலர்கள் மைதானத்துக்குள் வந்து ஜார்வோவை இழுத்துக்கொண்டு போனார்கள்.

டேனியல் ஜார்விஸ்

லார்ட்ஸில் ஃபீல்டிங் செட் செய்யும் இந்தியாவின் கேப்டன் கோலியாக உள்ளே நுழைந்த ஜார்வோ, லீட்ஸ் டெஸ்ட்டில் நுழைந்தவிதம் எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ரோஹித் ஷர்மா அவுட் ஆனதும், கோலி வருவதற்குள் மைதானத்துக்குள் ஜார்வோ வந்துவிட்டார். இந்தமுறை பேட்ஸ்மேன் கோலியாக!

பேட், கிளவுஸ், ஹெல்மெட் எல்லாம் அணிந்துகொண்டு ஒரு பேட்ஸ்மேன் போல மைதானத்துக்குள் நுழைந்து பிட்ச்சில் ‘கார்டு' எடுக்க ஆரம்பித்தார் ஜார்வோ. இதைப் பார்த்து நடுவர்கள் அதிர்ச்சியாக பின்னர் பாதுகாவலர்கள் வந்து ஜார்வோவை வெளியே இழுத்துகொண்டு போயினர். இந்த முறை ஜார்வோ பாதுக்காப்பாக ஹெல்மெட்டுக்குள் மாஸ்க்கும் அணிந்து வந்திருந்தது எல்லோரையும் ரசிக்கவைத்தது.

அடுத்த டெஸ்ட்டில் ஜார்வோவின் என்ட்ரி எப்படி இருக்கும்?!



source https://sports.vikatan.com/cricket/pitch-invader-jarvo-comes-to-bat-for-india-at-leeds-test

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக