1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெறும் நான்கு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா கூட தோற்றுப் போனார். அறந்தாங்கி திருநாவுக்கரசு, சங்கரன்கோயில் கருப்பசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாமரைக்கனி, ராசிபுரம் பி.ஆர்.சுந்தரம் என நான்கே பேர்தான் அ.தி.மு.க சார்பாக சட்டமன்றத்திற்குச் சென்றார்கள். அந்தக் காலக்கட்டத்திலும் சரி, பிற்பாடு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் நாமக்கல் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் சரி, அ.தி.மு.க மீதும், ஜெயலலிதா மீதும் தீவிர விசுவாசம் காட்டியவர் பி.ஆர்.சுந்தரம். இப்படிப்பட்டவர் சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்ததுதான் அ.தி.மு.க-வின் கொங்கு ஏரியாவை கலகலக்க வைத்திருக்கிறது. தவிர, கொங்கு பகுதியிலிருந்து அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களை தி.மு.க பக்கம் இழுத்து வரும் அசைன்மென்ட்டும் சுந்தரம் உள்ளிட்ட சிலரிடம் ஒப்படைத்திருக்கிறாராம் ஸ்டாலின். இந்தச் சூழலில், சில கேள்விகளுடன் பி.ஆர்.சுந்தரத்திடம் பேசினோம்.
``திடீரென தி.மு.க-வில் இணைந்திருக்கிறீர்களே? ”
``அ.தி.மு.க-வை நல்ல வழியில் இப்போதிருக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கொண்டு செல்வதாக நான் கருதவில்லை. தவிர, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சி பொறுப்பேற்ற சில நாள்களிலேயே கொரோனா பேரிடரை சிறப்பாக கையாண்டுள்ளனர். மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமென்கிற எண்ணத்தில்தான் நான் தி.மு.க-வில் இணைந்திருக்கிறேன்.”
Also Read: `தங்கமணி, வேலுமணியிடம் பெட்டி வாங்கிய ராமதாஸ்?!' - கொதிக்கும் வேல்முருகன்
``ஆனால், நீங்கள் திருச்செங்கோடு தொகுதி கேட்டு, அது கிடைக்காத விரக்தியில்தான் தி.மு.க-வில் இணைந்ததாகச் சொல்கிறார்களே?”
``எனக்கு விரக்தியெல்லாம் இல்லை. இருக்கும் இடத்தில் கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ, அதைக் கேட்டு நடப்பதுதான் ஒரு தொண்டனின் வழக்கம். ஆனால், என்னைச் சுற்றி சூழ்ச்சி செய்துவிட்டார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, நாமக்கல் தொகுதியை எனக்கு மீண்டும் தருமாறு அ.தி.மு.க தலைமையிடம் கோரினேன். ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் தன்னை மீறி வேறொருவர் கட்சிக்குள் தலையெடுத்துவிடக் கூடாது என்று தீர்மானமாக இருக்கும் தங்கமணி, எனக்கு சீட் கிடைக்க விடாமல் சதி செய்துவிட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாகப் பிளவுப்பட்ட போது, நான் ஓ.பி.எஸ் அணியில் இருந்தேன். சேலத்தில்தான் ஓ.பி.எஸ்-யை வைத்து முதல் பொதுக்கூட்டம் போட்டோம். ஜெயலலிதாவின் மரணத்தில் சி.பி.ஐ விசாரணை கேட்டு நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்பினேன். இவையெல்லாம் எடப்பாடிக்கு ஏனோ எரிச்சலை ஏற்படுத்தியிருந்தன. இதனால், தங்கமணியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியை எனக்கு ஒதுக்கவில்லை.
ஆனாலும் மனம் சோர்வடையாமல், அந்த நாடாளுமன்றத் தேர்தலில் பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதியில் கட்சி வேலைப் பார்த்தேன். அப்போதே கட்சித் தலைமையிடம், ‘எனக்கு 2021 சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி வேண்டும். கண்டிப்பாக ஒதுக்குங்கள்’ என்றேன். தங்கமணியும் சீட் வாங்கித் தருவதாகச் சொன்னார். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கு என்னைப் போட்டியிடச் சொல்லி வற்புறுத்தினார். மாவட்ட துணைத் தலைவராகிவிட்டால், திருச்செங்கோடு தொகுதியை நான் கேட்க மாட்டேன் என்று அவர் திட்டமிட்டு காய் நகர்த்தினார். இவரின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, மாவட்டத் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டாலும், எனக்கு சட்டமன்றத் தேர்தலில் சீட் வேண்டும் என்று பிடிவாதமாக நான் நின்றுவிட்டேன். கடைசியில், எனக்கு திருச்செங்கோடு தொகுதி சீட் கிடைக்கவில்லை. அ.தி.மு.க சரியான திசையில் செல்வதாகவும் எனக்குப்படவில்லை. இதனால் கட்சியிலிருந்து விலகிவிட்டேன்.”
Also Read: ஸ்டாலின் போடப்போகும் முதல் பட்ஜெட் எப்படி இருக்கும்? The Imperfect Show 03-08-2021
``உங்கள் மன வருத்தத்தை கட்சித் தலைமையிடம் கொண்டு சென்றீர்களா?”
``எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினேன். ‘நான் என்னப்பா பண்றது. கட்சியையே வேலுமணியும் தங்கமணியும் தான் நடத்துகிறார்கள். அவர்கள்தான் செலவு செய்கிறார்கள் உங்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்றுவிட்டார் தங்கமணி. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை’ என்று அவர் சொல்லிவிட்டார். பெரியகுளத்தில் பன்னீரை சந்தித்து, ‘எனக்காக சிபாரிசாவது நீங்கள் செய்திருக்கலாமே?’ என்றேன். அதற்கு, ‘நான் சிபாரிசு பண்ணினா எடுபடவா போகுது?’ என்று தட்டிக் கழித்துவிட்டார் பன்னீர். தன்னை நம்பி வந்த பெங்களூரு புகழேந்தியையே காப்பாற்ற முடியாத ஓ.பி.எஸ்., என்னை மட்டும் கைதூக்கிவிடுவாரா என்ன? அவரும் கைகழுவிவிட்டார்.
15 வருடங்களாக நான் அ.தி.மு.க-வில் மாவட்ட அவைத்தலைவராக இருந்திருக்கிறேன். சீட் கிடைக்கவில்லை என்பதால், கட்சியில் மாநில விவசாயி அணி செயலாளர் பதவியாவது தாருங்கள் என்றேன். ‘அதற்கெல்லாம் அக்ரி படிப்பு படித்திருக்க வேண்டும்’ என்று தட்டிக் கழித்தார் எடப்பாடி பழனிசாமி. துரை கோவிந்தராஜன், தங்கமுத்து என அக்ரி படிக்காத பலர் விவசாயி அணிக்கு தலைமையேற்று இருக்கிறார்கள். இதெல்லாம் எடப்பாடியின் கண்களுக்கு தெரியவில்லை. நான் ஓ.பி.எஸ் அணியில் இருந்தேன், தங்கமணிக்கு போட்டியாளனாக இருக்கிறேன் என்பதற்காகவே என்னை ஒதுக்கினார்கள். கட்சிக்குள் துடிப்பாக பணிசெய்ய விரும்புபவனை இப்படியெல்லாம் ஒதுக்கினால் என்ன செய்ய முடியும்? 1996-ல் நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, திருநாவுக்கரசர் என்னை அணுகி ‘வாங்க இரண்டு பேரும் ஒன்னா கட்சியை விட்டுப் போவோம். இரட்டை இலையை முடக்கிடலாம்’ என்றார். அதற்கு நான் இணங்கவில்லை. ஜெயலலிதா பக்கம்தான் நின்றேன். அந்த விசுவாசத்தை இப்போதிருக்கும் அ.தி.மு.க தலைவர்கள் மதிக்கவில்லை என்கிற வருத்தம்தான் எனக்கு இருக்கிறது.”
Also Read: எடப்பாடி, பன்னீர், சசிகலா தனித்தன்மையை இழந்துவிட்டார்கள்!
``அ.தி.மு.க-வின் கோட்டையான கொங்கு மண்டலத்தை தி.மு.க கைப்பிடிக்க முயற்சிக்கிறதே. இந்த முயற்சி பலனளிக்குமா?”
``இப்போது கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வெற்றிப் பெற்றதற்குக் காரணம் பணம் தான். இதெல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது. அந்தப் பகுதியிலிருந்து வரும் காலத்தில் பல்வேறு கட்சியிலிருந்தும் தி.மு.க-வுக்கு சாரை சாரையாக வரப் போகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை கோவைக்குத்தான் வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். கொங்கு மண்டலத்திற்கென ஸ்பெஷல் திட்டங்களை கொண்டுவர தி.மு.க-வும் துடிப்பாக இருக்கிறது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை என்கிற பிம்பம் இனி தவிடுபொடியாகும்.”
source https://www.vikatan.com/news/politics/former-mp-sundaram-accuses-former-minister-thangamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக