பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
காட்டுயிர்களில் மிகப் பெரியது யானை. இப்போதும் அவை ஊருக்குள் அசைந்தாடி வரும் காட்சியை, சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ஒரு கணம் நின்று ரசிப்பார்கள். ஒரு யானைக்கே அப்படி என்றால், 14 யானைகள் வலம் வந்தால், சொல்லவா வேண்டும். சீனாவில் கடந்த பலமாதங்களாக வலசைப்பாதை மாறி சுற்றித்திரிந்த யானை கூட்டம், நெடும்பயணத்திற்கு பிறகு அதன் இருப்பிடத்திற்கே சென்றிருக்கின்றன.
சீனாவின் ஷி சுவாங்பன்னாடாய் மாகாண வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய 14 யானைகள், பல நூறு கிலோ மீட்டர் பயணித்து அந்த மாகாணத்தின் தலைநகர் கன்மிங்கிற்கு, கடந்த ஜூன் மாதம் வந்து சேர்ந்தன. திசைமாறி சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் நடந்து நகருக்குள் வந்த காட்டு யானைகளை, மீண்டும் காட்டுக்குள் விரட்டும்போது நடக்க முடியாமல் ஓய்வெடுத்து மீண்டும் தங்களுடைய வலசையை தொடர்ந்தன.
யானையால் பொதுமக்களுக்கும், பொதுமக்களால் யானைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, அவை திரும்பிச் செல்லும் பாதை முழுவதும், போலீஸ் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. யானைகளுக்கு தேவையான உணவு அதன் வழித்தடத்தில் வைக்கப்பட்டன. எனினும், சில இடங்களில் தோட்டங்களை பதம் பார்த்தன யானை கூட்டம். முதியோர் இல்லம் ஒன்றிலும் உணவு ஏதும் கிடைக்குமா? என இவை சோதனை செய்து பார்த்தன.
பாதுகாப்பு கருதி யானைகள் திரும்பிச் செல்லும் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் களம் இறக்கப்பட்டனர். 18 ட்ரோன்கள் மூலம் கண்காணித்த அதிகாரிகள், அவ்வப்போது யானைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். கூட்டம் கூட்டமாக யானைகள் தூங்குவதும், அதில் குட்டி யானை ஒன்று தூங்காமல் குறும்புத்தனம் செய்யும் காட்சியும் சமூக வலைத் தளங்களில் வைரலானது.
இந்த சூழலில் சீனாவின் தேசிய வனவியல் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சுமார் 17 மாதங்களாக அலைந்து கொண்டிருந்த இந்த யானை கூட்டம், இப்போது யுன்னான் மாகாணத்தின் ஜிஷுவாங்பன்னா டாய் பிராந்தியத்தில் உள்ள இயற்கை காப்பகத்திற்கு பாதுகாப்பாக திரும்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை யுவான்ஜியாங் ஆற்றை யானைக்கூட்டம் கடந்த போது எடுத்த புகைப்படங்களை சீன அரசின் செய்தி நிறுவனம் சின்ஹூவா வெளியிட்டிருக்கிறது.
உலகெங்கும் யானைகள் தங்களது வாழ்விடங்களை தொலைத்துவிட்டு, வாழ்வதற்காக இங்கும் அங்கும் அல்லாடுவதற்கு உதாரணமே இந்த சீன யானைகளின் பயணம். இந்த மந்தைகூட்டம் இடம்பெயர்ந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக இல்லை, ஆனால் சாத்தியமான காரணங்கள் உணவு பற்றாக்குறை, யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மிக முக்கியமானது வாழ்விடம் இழப்பு என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
இப்பிரச்சனை சீனாவில் மட்டும் அல்ல, இந்தியாவில் கூட யானைகள் தங்களது வலசைப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், ஊருக்குள் வருவதும், பின்பு வனத்துறையினர் அதனை விரட்டுவதும் என தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் வெளியிட்டார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் ஒவ்வொரு ஆண்டும் இன்றைய நாள் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய நிலையில் காடுகளின் காவலனாக இருக்கும் யானைகள் பல விதமான அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின வழித்தடங்கள் துரித கதியில் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப்பாதைகள், துண்டாடப்படுகின்றன.
இதனால், யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணமாக விளங்குகிறது. இந்தியாவில் கொல்லப்படும் யானைகளில், 59 சதவீதம் வேட்டையாடப்பட்டவை.
விஷ உணவால் 13 சதவீதமும், நோயினால் 10 சதவீதமும், மின்சாரம் தாக்கி 8 சதவீதமும், ரயிலில் அடிபட்டு 5 சதவீதமும், பிற காரணங்களால் 5 சதவீதமும் யானைகள் உயிரிழக்கின்றன. யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும் பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும் என்பதே நிதர்சனம்.!
-அ.ஹரிகரன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-chinas-wild-elephants
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக