சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சாந்தினி பிரபாகர். அரசு மருத்துவர். இவரின் செல்போனுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் செல்போன்நெட்வொர்க் நிறுவனத்தில் உங்களின் சுய விவரங்களை (கேஒய்சி - kyc) அப்டேட் செய்யாததால் விரைவில் சிம்கார்டு (expiry) காலாவதியாகி விடும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
உடனே டாக்டர் சாந்தினி பிரபாகர், எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, டாக்டர் சாந்தினி பிரபாகரின் செல்போன் நம்பருக்கு செயலி ஒன்றின் லிங்க் வந்தது. அதை ஓப்பன் செய்த போது டாக்டர் சாந்தினியின் செல்போன் ஹேக் செய்யப்பட்டது. அதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் டாக்டரின் வங்கி கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்தது. இதையடுத்து டாக்டர் சாந்தினி, சென்னை அண்ணா நகர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்தார். அதன்பேரில் அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். தற்போது இந்தப் புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Also Read: எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை: யூடியூப் பார்த்து கற்ற ஃபார்முலா; சைபர் க்ரைம் கும்பல் சிக்கியது எப்படி?
இன்னொரு சம்பவம்:
சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருப்பவர் அன்பழகன். பேராசிரியர். இவரின் மனைவி மகேஸ்வரி. ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார். அன்பழகனைத் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், எஸ்.பி.ஐ வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறியிருக்கின்றனர். பின்னர் ஏடிஎம் கார்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறி கார்டு விவரங்களைக் கேட்டிருக்கின்றனர்.
வங்கியிலிருந்துதான் பேசுவதாக நம்பிய அன்பழகனும் விவரங்களைக் கூறியிருக்கிறார். அதன்பிறகு ஓடிபி நம்பரையும் அவர் பகிர்ந்திருக்கிறார். அடுத்த சில நிமிடத்தில் அவரின் வங்கி கணக்கிலிருந்து 10,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறது. அதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அன்பழகன் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வலருகின்றனர்.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``முன்பெல்லாம் படிக்காதவர்கள்தான் இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழப்பார்கள். தற்போது, படித்தவர்களும் மோசடி கும்பலின் வலையில் சிக்கி பணத்தை இழந்து வருகிறார்கள். செல்போனுக்கு வரும் தேவையில்லாமல் வரும் லிங்க், எஸ்.எம்.எஸ்களை மக்கள் ஓப்பன் செய்ய வேண்டாம். ஏனெனில் அந்த லிங்க் மூலம் செல்போன் ஹேக் செய்யப்பட்டு உங்களின் செல்போனிலிருக்கும் அனைத்து விவரங்களையும் சைபர் க்ரைம் மோசடி கும்பல் எடுத்துவிடும். அதே போல ஓடிபி எண்கள், ரகசிய எண்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக் கூடாது" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/cyber-crime-cheating-event-educated-people-getting-in-trap
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக