மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கடல்வள மசோதாவை எதிர்த்து டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்தை சேர்ந்த பாரம்பரிய மீனவப் பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.
போராட்டத்துக்கு சென்றவர்கள், மத்திய மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கைகளை எடுத்துக் கூறி மனு அளித்துள்ளனர்.
இது பற்றி பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தங்கச்சிமடம் சின்னத்தம்பியிடம் பேசினோம், ``மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்வள மசோதாவில் பல சந்தேகங்கள் உள்ளது. அதில் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இதை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருசோத்தம ரூபாலாவிடம் நேரில் தெரிவிக்க நினைத்தோம். ராமாநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மூலம் அவரை சந்திக்க அனுமதி பெற்றோம்.
அமைச்சரிடம் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், மசோதாவில் இயந்திரம் பொருத்தப்படாத படகுகளுக்கு விதிவிலக்கு அளித்துள்ளீர்கள். இது முரணானது என்றும், இயந்திரம் பொருத்தப்பட்ட பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி படகுகளுக்கும் விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்றோம். அது மட்டுமில்லாமல் பல கோரிக்கைகளை அவருரிடம் விளக்கி கூறினோம்.
கவனமாகக் கேட்டுக்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர், பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார். இயந்திரம் பொருத்தப்பட்ட பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடி படகுகளுக்கு இயந்திரத்தின் திறன் மற்றும் படகின் நீளத்தை கணக்கிட்டு விதிவிலக்கு அளிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ராமாநாபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உடனிருந்து எங்களின் கோரிக்கைகளை மீன்வளத்துறை அமைச்சரிடம் விளக்கி கூறினார். பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் கனிஸ்டன், மாநில மீனவர் அமைப்பு நிர்வாகிகள் அன்பு, ராயப்பன், செழியன் ஆகியோரும் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். மத்திய அரசு கொண்டு வரும் மசோதாவில் நம் நியாயமான கோரிக்கைகளை தொடர்ந்து இதுபோல வலியுறுத்துவோம்" என்றார்.
இந்த சந்திப்பு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் (4-ம் தேதி காலையில்) மீனவர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லிக்கு வந்த தமிழக மீனவர்களை ரயில் நிலையத்தில் கைது செய்த காவல்துறை அருகிலிருந்த காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். நீண்ட நேரம் நடந்த விசாரணைக்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.அதன் பின்பே ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read: தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டம்: `உலக வரலாற்றிலேயே மோசமானது’ - கொந்தளிக்கும் மீனவர்கள்
source https://www.vikatan.com/government-and-politics/politics/fishermen-met-union-minister-about-fisherman-bill
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக