நடிகர் தனுஷ் கடந்த 2015-ம் ஆண்டு சொகுசு கார் ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வாரியாக 60.66 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று வணிகத்துறை உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து வரிவிலக்கு கோரி நடிகர் தனுஷ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காரை பதிவு செய்ய இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வரித்தொகையில் 50 சதவிகிதத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் செலுத்தவேண்டும் என்றும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
வரிசெலுத்த காலவரம்பு கால அவகாசம் நீடிக்கப்பட்ட வகையில் 30.33 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்துக் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரலில் விதிகளைப் பின்பற்றிப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷ் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று(05-08-2021) ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனுஷ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே வரித்தொகையில் பாதியைச் செலுத்திவிட்டதாகவும், மீதமுள்ள தொகையையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை முடித்து வைக்குமாறும் கூறினார்.
இதற்கு நீதிபதி, ``இத்தனை ஆண்டுகள் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அப்போது எல்லாம் வழக்கை திரும்பப்பெறவேண்டும் என்று முடிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் நீங்கள் வழக்கை முடித்துக் கொள்ள நீங்கள் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. இந்த வழக்கை இழுத்தடிக்க நினைப்பதின் நோக்கம் என்ன?" என்றார். தொடர்ந்து ``நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமென்றாலும் வாங்குங்கள். ஆனால் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``வழக்கறிஞர் தான் உங்களின் தரப்பினருக்கு எடுத்துக் கூறவேண்டும். அதேபோல, மனுதாரர் தான் என்ன வேலை பார்க்கிறார் என்பதையும் மனுவில் குறிப்பிடவில்லை. ஒரு உயர்தர சொகுசு கார் வாங்கும் மனுதாரரால் தான் என்ன வேலையில் இருக்கிறோம், என்ன தொழில் செய்கிறோம் என்பதைக் குறிப்பிட முடியாதா? அதை ஏன் மறைத்தார் என்பது குறித்து ஒரு மனுத் தாக்கல் செய்யவேண்டும். தனுஷ் செலுத்தவேண்டிய வரிப் பாக்கி எவ்வளவு என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.
Also Read: விஜய் மட்டும்தான் Entry Tax கட்டவில்லையா… ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் நடந்தது என்ன?
இந்த தொகை என்ன என்பது தெரிந்த பின்னர் தான் என்றைக்குள் செலுத்தவேண்டும் என்பது தெரியவரும். நடிகர் விஜய் தனது சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்டிருந்த வழக்கையும் விசாரித்தது உத்தரவு பிறப்பித்தது இதே உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/judiciary/the-judge-criticized-the-actor-dhanush-in-the-luxury-car-tax-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக