Ad

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனை! - தடை செய்யப்பட்ட பொருள்கள் சிக்கியதாக தகவல்!

தமிழகத்தில் சென்னை, கடலூர், மதுரை, பாளையங்கோட்டை , திருச்சி, உள்ளிட்ட 9 மத்திய சிறைச்சாலைகளும், விருதுநகர், ஸ்ரீவைகுண்டம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 மாவட்ட சிறைச்சாலைகளும் ஒரு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியும் உள்ளன. மத்திய சிறைச்சாலைகளில் அனைத்து தண்டனை பெற்ற குற்றவாளிகளும், விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள்

மத்திய சிறைச்சாலை உள்ளே அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, பணத்துக்காகத் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக 08-08-2021 தேதியிட்ட ஜூ.வி-யில் ”சிறை அரசியல்! - ‘பீடி’ கரன்ஸி... ‘சிறப்பு’ குத்தகை... உணவு ஊழல்... உரிமை மீறல்கள்...” என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.

சிறைச்சாலைகளில் குத்தகை முறை இருப்பது தொடர்பாகவும் முறைகேடுகள் குறித்தும் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள மத்திய சிறைச்சாலைகளில், அங்கங்கு உள்ள உள்ளூர் போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அதிகாலைத் தொடங்கிய சோதனை சில சிறைச்சாலைகளில் மூன்று மணி நேரம் நீடித்துள்ளது.

Also Read: பாளையங்கோட்டை சிறையில் அதிரடி சோதனை! - சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்கள்

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில், நெல்லை மாநகர உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் 60 போலீஸார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சிறைச்சாலை விஜிலென்ஸ் காவலர்களும் இந்த சோதனையில் பங்கேற்றனர். மொத்தம் 100 பேர் அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கேன்டீன், உணவு தயாரிப்பு அறை, தொழிற்கூடப் பகுதி உள்ளிட்ட இடங்களில் மட்டுமலாமல் கைதிகளை அடைத்து வைக்கும் அறைகளிலும் சோதனை நடந்துள்ளது. மேலும் ஒவ்வொரு கைதியையும் தனித்தனியே அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதிரடி சோதனை நடந்த பாளையங்கோட்டை சிறைச்சாலை

பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் அதிரடி சோதனை நடந்தபோது தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆயுதங்கள் மற்றும் செல்போன்கள் போன்றவை எதுவும் சிக்கவில்லை என பாளையங்கோட்டை சிறையில் சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/raid-in-jail-all-over-tamil-nadu-to-subside-the-illegal-activities

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக