Ad

திங்கள், 26 ஜூலை, 2021

வெளியே தெரியுமா மனம் - ஞானிகள் சொல்வது என்ன? #Video

பொதுவாக 'பேசுவது' என்றால் அது வாயின் வேலை என்றுதான் சொல்வோம். ஆனால் உதடுகளோ பற்களோ பேச்சுக்கு உதவுகின்றனவே தவிர உண்மையாகப் பேசுவது என்பது நா தான். தமிழ் இலக்கணத்தில் எழுத்தியல் பல எழுத்துகள் எப்படிப் பிறக்கும் என்கிறபோது நா வாயின் பகுதிகளைத் தொடுகிறபோது பிறக்கும் என்று சொல்கிறது. எனவே நாக்குதான் பேச்சுக்குக் காரணமாகிறது. சரி, நாக்கு எதைப் பேசுகிறது? மனம் நினைப்பதைப் பேசுகிறது.

கோபம்

மனம் மகிழ்ச்சியோ துக்கமோ என்ன உணர்வில் இருக்கிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துவது நாக்குதான். அதனால்தான் 'யாகாவாராயினும் நா காக்க' என்று சொன்னான் வள்ளுவன். மனம் மறைவாய் இருக்கிறது. அது நினைப்பதை வெளியில் காணமுடியாது. ஆனால் இந்த நா அப்படி அல்ல அது மனதில் உள்ளதைக் காட்டிக்கொடுத்துவிடும். 'மனதின் நிறைவினால் வாய் பேசும்' என்கிற வசனத்தைக் கூடக் கேள்விப்பட்டிருப்போம். ஒரு ஞானி சொன்னார்

இதற்கு ஓர் உதாரணம் சொல்வார்கள்.

இந்த நாக்கு வாய்க்குள் இருக்கிறது. பேசாமல் இருக்கிறது. சாப்பிடும்போது ஒரு துரும்பு பற்களுக்கு இடையே சிக்கிக்கொள்கிறது. பல் இடுக்குகளில் ஏதேனும் துரும்பு மாட்டிக்கொண்டுவிட்டால் நாக்கு நம் உத்தரவைக் கேட்காமல் அங்கே சென்று அந்தப் பல்லிடுக்கைத் தடவிக்கொண்டேயிருக்கும். அதைச் செய்யக் கூடாது என்று அதற்கு உத்தரவிட்டுப் பாருங்கள். அது ஒரு கணமும் உங்கள் பேச்சைக் கேட்காது. பல்லிடுக்கிலிருந்து அந்தத் துரும்பு வெளியேறுகிற வரைக்கும் உங்களால் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாது. மற்ற நேரங்கள் எப்போதாவது நாக்கு அந்தப் பல்லிடுக்கைச் சென்று வருடுகிறதைப் பார்த்திருக்கிறீர்களா?

நாக்கு வெளிப்படுகிற மனம் என்று சொல்கிறார்கள் அல்லவா அது இதனால்தான். நம் மனமும் அப்படித்தான் ஒரு பிரச்னை வந்துவிட்டால் அதையே எண்ணிக்கொண்டே அதையே நினைத்து வருந்திக் கொண்டிருக்கும். அதைவிட்டுக் கொஞ்சமும் நகராது. அதிலேயே உளன்று கொண்டிருக்கும். ஓய்வற்ற நாவினைப் போல ஓய்வற்ற மனமும் தொந்தரவாகத்தான் இருக்கும். நாவில் இருக்கும் துரும்பை எளிதாக அகற்றிவிடலாம். ஆனால் மனத்தை...

அதற்கு ஒரே வழி. இறைவழிபாடுதான். இறைவனை வழிபடும்போது மனம் ஒரு நிலைப்படும். உங்கள் பாரம் இறக்கிவைக்கப்படுவதுபோன்ற நிம்மதி ஏற்படும். நடப்பவற்றை அவன் பார்த்துக்கொள்வான் என்கிற ஆசுவாசம் ஏற்படும். இறைச்சந்நிதியில் நின்று நாவார அவனைத் துதித்து மனதார வழிபட்டால் நாவும் மனமும் அமைதி அடையும். தேவையற்ற பிரச்னைகளிலிருந்து நம்மை விலக்கிக் காக்கும். யாகாவாராயினும் மனம் காக்க.



source https://www.vikatan.com/spiritual/gods/whether-the-mind-can-we-seen-outside

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக