விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் என இந்த நால்வரையும் கிரிக்கெட்டில் ‘ஃபேன்டாஸ்டிக் ஃபோர்’ என்கிற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இதேப்போல் தமிழ் சினிமாவிலும் ஒரு ‘ஃபேப் ஃபோர்' பட்டியல் இருக்கிறது. ரஜினி, கமலுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களைக்கொண்ட அதில் சீனியர்களான விஜய், அஜித், விக்ரமோடு போட்டிபோட்டு உள்ளே நுழைந்து தன் திறமையான நடிப்பால் உச்சத்துக்கு உயர்ந்திருக்கும் இளவரசன் சூர்யா. இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடும் சூர்யாவைப் பற்றிய லேட்டஸ்ட் பர்சனல் அப்டேட்ஸ் இங்கே!
* ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அந்தப் படத்தைப் பற்றிய அத்தனை விவரங்களையும் தெரிந்துகொள்ள விரும்புவார் சூர்யா. அந்த வகையில் அடுத்து நடிக்கயிருக்கும் ‘வாடிவாசல்' படத்துக்காக ஜல்லிக்கட்டு காளைகள் பற்றி தெரிந்துகொள்ள அதுதொடர்பான புத்தகங்களை தொடர்ந்து படித்துவருகிறார்.
* உணவில் வெள்ளை அரிசிக்கு தடைபோட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் கேரளத்து சிவப்பு அரிசிதான் சூர்யாவின் டைனிங் டேபிளில் தவறாமல் இடம்பிடிக்கிறது.
* உணவில் மட்டும் வெள்ளை நிறத்தை தவிர்க்கவில்லை. காரிலும் நிறம் மாறியிருக்கிறார் சூர்யா. ஆடி முதல் இன்னோவா வரை அவருடைய எல்லா கார்களும் வெள்ளை வண்ணத்திலேயே இதுவரை இருந்த நிலையில் முதல்முறையாக கறுப்பு வண்ண டொயோட்டா லாண்ட்க்ரூஸர் கார் வாங்கியிருக்கிறார்.
* சூர்யாவுக்கும் இருக்கும் ஒரே அடிக்ஷன் ஃபேமிலி அடிக்ஷன். மனைவி, குழந்தைகளை விட்டுப்பிரிந்திருப்பதை எப்போதும் வெறுப்பவர். வீட்டிலிருந்தால் குழந்தைகள் தியா, தேவ், தம்பி கார்த்தியின் குழந்தைகள் உமையாள், கந்தனுக்கு புதுப்புது விளையாட்டுகள் சொல்லித்தருவது ஹாபி. குழந்தைகளோடு உட்கார்ந்து சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை. எங்கே போனாலும் தம்பி, தங்கை குழந்தைகள் என அனைவருக்கும் சேர்த்து ஏராளமான பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டுவந்து குவிப்பது சூர்யாவின் வழக்கம்.
* கூட்டுக்குடும்பமாக வாழ்வதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹாலில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து அந்த வாரத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பது வழக்கம். ஷூட்டிங்காக வெளியூர் போனாலும் இந்த மீட்டிங் மிஸ் ஆவதில்லை. வீடியோ கான்ஃபிரன்ஸில் ஃபேமிலி மீட்டிங்கை நடத்திவிடுகிறார் அண்ணன் சூர்யா.
* சூர்யாவின் மகன் தேவ் இப்போது டைரக்ஷனில் அதிக ஆர்வத்தோடு இருக்கிறானாம். அப்பாவை நடிக்க வைத்து குட்டி குட்டி வீடியோக்கள் எடுக்கிறாராம் குட்டி டைரக்டர் தேவ்.
* பாடல்களில் அதிக ஈர்ப்பு உண்டு. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையுமே ரொம்பவும் பிடிக்கும். மனதின் மகிழ்ச்சிக்கு ஏற்றபடி ரஹ்மான், ராஜா பாடல்களை ரசிப்பார். மனைவி ஜோதிகா, தம்பி கார்த்தி, நண்பன் ராஜசேகர் என இந்த மூவரும் இல்லாமல் புது படத்துக்கான கதை கேட்பதில்லை. மூவரின் ஆலோசனைகளையும் உள்வாங்கி, விவாதித்து இறுதிசெய்தபிறகுதான் இயக்குநருக்கு ஓகே சொல்வார்.
* அப்பா சிவக்குமாரின் கருத்துக்கு நேரடியாக எதிர்கருத்து சொல்லும் பழக்கம் சூர்யாவிடம் இப்போதும் இல்லை. மாற்றுக் கருத்து இருந்தால் அதை அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் சொல்லச்சொல்வார்.
* ‘சூரரைப் போற்று' பட ரிலீஸுக்கு முன்புவரை கொஞ்சம் மன அழுத்தத்தில் இருந்தவர் இப்போது மனமகிழ்ச்சியோடு இருக்கிறார். பாண்டிராஜ், வெற்றிமாறன், சிறுத்தை சிவா என அடுத்தடுத்து வெற்றி இயக்குநர்களளோடு பயணிக்க இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்' சூர்யாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-suriyas-latest-personal-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக