Ad

வியாழன், 22 ஜூலை, 2021

கார்கள் நிறுத்தவே தனி வீடு! - ஹெலிகாப்டர் பிரதர்ஸ்-க்கு சொந்தமான 12 சொகுசு கார்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வீட்டிலிருந்து சுமார் 8 கோடி மதிப்புடைய 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்ததுடன், வங்கி கணக்கை முடக்குவதற்கான நடவடிக்கையினையும் போலீஸ் எடுத்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சகோதரர்களை பிடிக்க ஏழு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீ்ட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். சகோதர்களான இவர்கள் கிரிஷ் பால் பண்ணை, விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். வெளி நாடுகளிலும் பல்வேறு தொழில் செய்து வந்ததாக கூறப்பட்டது. சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்து கொண்டு அதிலேயே வலம் வந்ததால், ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக விக்டரி பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், ரூ. 1 லட்சத்திற்கு ஒரு வருடத்தில் கூடுதலாக ரூ 82,000 தரப்படும் என அறிவித்து நிதி வசூல் செய்து வந்தனர். இதற்காக முக்கியஸ்தர்கள் சிலரை ஏஜென்டாக நியமித்து பணம் வசூல் செய்தனர். தொடக்கத்தில் சரியாக பணம் திருப்பி கொடுத்ததால் தொழில் அதிபர்கள், செல்வந்தர்கள், வர்த்தகர்கள் என பலரும் ஹெலிகாப்டர் பிரதர்ஸிடம் கோடி கணக்கில் முதலீடு செய்தனர்.

புகார் அளித்த ஜபருல்லா - பைரோஜ்பானு

பெரும்பாலும் கறுப்பு பணம் வைத்திருந்தவர்களே அவர்களிடத்தில் முதலீடு செய்ததாக கூறப்பட்டது. வசூல் செய்த பணத்தினை வெளிநாடுகளில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தந்ததாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர், சொகுசு கார்கள் என ஆடம்பரமாக வலம் வந்தனர். பின்னர் எம்.ஆர்.கணேஷ் பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட வர்த்தக தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. கும்பகோணத்துக்கு வரும் பா.ஜ.க பிரமுகர்கள் பலர் அவர்கள் வீட்டிற்கு சென்றும் வரும் அளவிற்கு செல்வாக்கு படைத்தவர்களாக வலம் வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் இருந்தே முதலீடு செய்தவர்கள் யாருக்கும் பணம் சரியாக திருப்பி தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்து அடங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ்பானு தம்பதியினர் தங்களிடம் ரூ.15 கோடி வாங்கி கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்து விட்டதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் எனவும் தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்தனர்.

போஸ்டர்

இதையடுத்து கும்பகோணம் நகரம் முழுவதும் மெகா மோசடி என, `ஹெலிகாப்டர் பிரதர்ஸ் ரூ.600 கோடி மோசடி’ செய்து விட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டது. பின்னர் எம்.ஆர்.கணேஷை பா.ஜ.க-விலிருந்து நீக்குவதாகவும் அக்கட்சி அறிவித்தது. இதனை தொடர்ந்து சகோதர்கள் மீது மூன்று பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.

தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த இரு நாட்களாக கும்பகோணத்தில் எம்.ஆர்.கணேஷ் வீடு, நிதி நிறுவனம், பால்பண்ணை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், தலைமறவான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதனை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர். மேலும் அவர்களிடம் மேனேஜராக இருந்த ஸ்ரீகாந்த் என்பவரையும் கைது செய்தனர்.

போலீஸ் பறிமுதல் செய்துள்ள கார்கள்

இந்நிலையில் எம்.ஆர்.கணேஷ் தரப்பிற்கு இருபதுக்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. கார்கள் நிறுத்துவதற்கு என்றே ஒரு வீட்டை செட்டாக பயன்படுத்தி வந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு சென்ற போலீஸார் வீட்டிலிருந்த 2 பி.எம்.டபிள்யு கார்கள் உள்ளிட்ட 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து தஞ்சாவூர் டிஐஜி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் மூட்டை மூட்டையாக ஆவணங்கள், மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் விசாரணைக்காக எடுத்து சென்றதாக தகவல் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: “பிரமாண்ட இமேஜ்... கோடிகளில் மோசடி!” - சிக்கலில் கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், ``ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது புகார் வந்த நிலையில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சகோதரர்கள் அவர்களிடம் பணி செய்த சிலருடன் தலைமறைவாக உள்ளனர். அனைவரது செல் நம்பரும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டிலிருந்த 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு சுமார் ரூ 8 கோடி இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் அவர்களது வங்கி கணக்கை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” எனவும் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/police-seized-12-cars-from-the-helicopter-brothers-house-after-complaint-against-them

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக