Ad

வியாழன், 22 ஜூலை, 2021

தெறிக்கவிடும் வசனம்; ஸ்டைலான ஓவியம்! - திறப்பு விழாவுக்குத் தயாராகும் ரஜினி நற்பணி மன்றம்

‘இனி, எப்போதுமே அரசியலுக்கு வரப்போவதில்லை’ என்பதை திட்டவட்டமாக அறிவிக்கும் நோக்கத்தில், கடந்த வாரம் மக்கள் மன்றத்தை அதிரடியாக கலைத்தார், நடிகர் ரஜினிகாந்த். இதனால், மன்றத்திலிருந்த நிர்வாகிகள் மீண்டும் இளமைக்குத் திரும்பும் வகையில், நற்பணி மன்றம் செயல்பட தொடங்கியிருக்கிறது. கரைவேட்டி கெட்டப்பிலிருந்த ரசிகர்கள், ரஜினியின் பழையப் பட ஹேர் ஸ்டைல்களுக்கு மாறிவருகிறார்கள். நற்பணி மன்ற பெயர் பலகைகளைத் திறப்பதற்கானப் பணிகளிலும் ரசிகர்கள் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள சுவர்களிலும் நற்பணி மன்ற பெயர், ரஜினியின் ஸ்டைலான காட்சிகள் ஓவியங்களாக ஜொலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ‘பதவி ஆசையில்லாத ரசிகர்கள் தலைவர் பக்கம் நிற்போம்’ என்பன போன்ற வசனங்களை அள்ளித் தெறிக்கவிடுகிறார்கள்.

ரஜினி படம் வரையும் ஓவிய கலைஞன்

நற்பணி மன்றம் செயல்படப் போவது குறித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவியிடம் பேசினோம். ‘‘1985-லிருந்து தலைவர் ரஜினியின் நடை, உடை, ஸ்டைலைத் திரையில் பார்த்து, ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் பேசிய வசனங்களை உள்வாங்கிக்கொண்டு வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியிருக்கிறேன். தலைவர் பெயரில், பல நற்பணிகளையும் செய்துவருகிறேன். 1996-ல் அவர் எடுத்த அரசியல் நிலைப்பாட்டால், நாங்களும் அரசியல் களத்தில் செயல்பட வேண்டிய நிலை உருவானது. பின்னர், தலைவரும் அரசியல் களத்தைவிட்டு விலகியிருந்ததால், மீண்டும் நாங்கள் அவரின் திரைப்படங்களைக் கொண்டாடத் தொடங்கினோம்.

தன்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக 2017-ல் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக மிகப்பெரிய தொலை நோக்குப் பார்வையோடு அனைத்துத் துறைகளுக்கும் நல்ல திட்டங்களையும் வகுத்து வைத்திருந்தார். குறிப்பாக, கல்வி, மருத்துவம், விவசாயம், நீர் மேலாண்மை, வேலை வாய்ப்பு போன்ற துறைகளுக்கு ஆகச் சிறந்த திட்டங்களை தீட்டி வைத்திருந்தார். களத்தில் இறங்கி மக்கள் முன் சென்றிருந்தால், நிச்சயமாக தலைவர் தலைமையில் ஆட்சி அமைந்திருக்கும். ஆனால், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, தலைவரின் அரசியல் பிரவேசம் தடைபட்டுவிட்டது.

ரஜினியுடன் சோளிங்கர் ரவி

இது, மிகப்பெரிய வருத்தமும், ஏமாற்றமும் தந்திருந்தால்கூட இந்த முடிவை எடுக்க அவர் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருப்பார் என்று எங்களால் உணர முடிகிறது. எனக்கு எல்லாமே தலைவர்தான். அவர் பொய் பேசியது கிடையாது. யாருக்கும் தீங்கும் செய்தததில்லை. அதேசமயம், உண்மையைப் பேசவும் தயங்கியதில்லை. அதனால்தான் அவர் வழியில் பயணிப்பதைப் பாக்கியமாக கருதுகிறோம். ‘பணத்திற்கோ, பதவிக்கோ ஆசைப்படுபவர்கள் என் பின்னால் வரவேண்டாம். வந்தால், ஏமாந்துடுவீர்கள்’ என்று தலைவர் ரஜினிகாந்த் அன்றே சொல்லிவிட்டார். சிலர் மாற்று கட்சியை தேடி போகலாம். அது, அவர்களுடைய விருப்பம். ஆனால், தயவு செய்து தலைவர் ரஜினியை யாரும் குறைச்சொல்ல வேண்டாம்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/rajinikanth-rasigar-narpani-mandram-preparing-for-the-opening-ceremony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக