அந்தக் காலத்தில் தமிழ்த் திரை இசையை ஆட்சி செய்தவர்களைப் பற்றிக்குறிப்பிடும்போது நான்கு ஊர்களைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அவை சிதம்பரம், சீர்காழி, கொடுமுடி, கோட்டூர்புரம். கோட்டூர்புரம் என்றால் அது எம்.எஸ். சுப்புலெட்சுமி அம்மாவைக் குறிக்கும். சீர்காழி என்றால் சீர்காழி கோவிந்தராஜன். கொடுமுடி என்றால் கே.பி. சுந்தராம்பாள். சிதம்பரம் என்றால் அது சிதம்பரம் ஜெயராமன் எனப்படும் C.S. ஜெயராமன். இவர்கள் நால்வருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. நால்வரும் பக்தி இசையைப் பாடிப் பரப்பியவர்கள் என்பதுதான் அது.
இவர் கலைஞர் மு. கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணன். அதாவது மு.க. முத்துவின் தாய்மாமம். இந்த அறிமுகத்தைவிட இவரை பாட்டு சித்தர் அல்லது இசை சித்தர் என்று தமிழ்த் திரையுலகம் அழைக்கும். அதுவே அவரின் உயர்ந்த அடையாளம். அவரின் குரல் கம்பீரமானது மட்டுமல்ல இனிமையானதும் கூட.
கிருஷ்ண லீலா (1934), பக்த துருவன் (1935), நல்ல தங்காள் (1935), லீலாவதி சுலோச்சனா (1936), பூம்பாவை (1944), கிருஷ்ண பக்தி போன்ற பக்திப் படங்களில் நடித்தார். பிறகு இசையில் ஆர்வமாகி உதயனன் வாசவதத்தா (1946), ரத்தக்கண்ணீர் (1954) ஆகிய இரண்டுபடங்களுக்கு இசையமைத்துள்ளார். விஜயகுமாரி (1950), கிருஷ்ண விஜயம் (1950) ஆகிய படங்களில் இணை இசையமைப்பாளராக இசையமைத்துள்ளார். எனினும் திரைப்படத்துறையில் ஒரு பின்னணிப் பாடகராகவே இவர் புகழ் பெற்றார்.
இவர் குரலில் இருந்த கம்பீரமும் கவர்ச்சியும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடும் வாய்ப்பினைக் கொண்டுவந்தது. 1940 முதல் 1960 வரை இவர் பாடிய பாடல்கள் ஏராளம். எம்ஜியாரும் சிவாஜியும் பெரிதும் மதித்த பாடகர் இவர். அதிலும் சிவாஜிக்கு இவர் குரல் மீது மையல் எனலாம். இவர் குரலுக்காகவே பாடல்கள் படிவாயின.
பராசக்தி படத்தில் இடம்பெற்ற கா...கா...கா பாடல், விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பாடல், ரத்தக்கண்ணீர் படத்தில் இடம்பெற்ற குற்றம் புரிந்தவன் போன்ற பிரபலமான பாடல்கள் இவர் குரலில் வெளியாகி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தன. அதிலும் 1958 ம் ஆண்டு வெளியான சம்பூர்ண ராமாயணம் படத்தில் இவர் பாடிய சங்கீத சௌபாக்யமே... இன்றுபோய் நாளை வாராய் ஆகிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை.
இவர் குரலின் சிறப்பைச் சொல்லும் சம்பவம் ஒன்று இவரின் இளம் வயதில் நடந்தது. அதை அவரே சொல்லியிருக்கிறார். ஒருமுறை கல்கத்தாவில் சூட்டிங். படப்பிடிப்பின் இடைவேளையில் சி.எஸ். ஜெயராமன் ஒரு மர நிழலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மாபெரும் ஆளுமை வருகிறார். ஆனால் அவர் யார் என்பது ஜெயராமனுக்குத் தெரியாது. வெண் தாடியோடு ஒளிபொருந்திய கண்களை உடைய அந்த முதியவர் ஜெயராமனிடம் வந்து, “ஒரு பாடல் பாடு” என்று ஆங்கிலத்தில் சொன்னார்.
யார் என்று தெரியாத மனிதர் பாடச் சொல்கிறார். ஜெயராமனால் மறுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவரின் தேஜஸ் இருக்கிறது. உடனே பாடுகிறார். பாடி முடித்ததும் அந்த மனிதர் ஜெயராமனை தட்டிக்கொடுத்து, ‘தெய்விகக் குரல்’ என்று சொல்லி ஆசீர்வதித்து விட்டுச் சொன்றாராம். அவரின் தொடுதல் சி.எஸ். ஜெயராமனை சிலிர்க்க வைத்துவிட்டது. அந்த மனிதர் நகர்ந்துபோனதும் சுற்றுமுற்றும் இருந்தவர்கள் ஜெயராமனை நெருங்கி ‘அவர் யார் என்று தெரியுமா...’ என்று கேட்டார்கள். சி. எஸ். ஜெ தெரியாது என்று சொன்னார். அப்போது அவர்கள் சொன்னபதில் சி.எஸ். ஜெயராமனை மகிழ்ச்சியிலும் சிலிரிப்பிலும் ஆழ்த்தியது. அவர் வேறு யாருமல்ல... பாரத தேசத்தின் பெருமை ரவீந்திரநாத் தாகூர்.
பக்திப்பாடல்கள் பாடுவது சி.எஸ். ஜெயராமனுக்கு மூச்சுபோல மாறிபோனது. அதற்கு சிதம்பரத்திலும் தமிழகம் முழுக்க இருக்கும் கோயில்களிலும் அவர் பாடியபோது நிகழ்ந்த அற்புதங்களே அதற்கு ஆதாரம். அந்நாளின் முதல்வர் அண்ணா சி.எஸ். ஜெயராமனை இசைக்கல்லூரி முதல்வராக ஆக்கினார். தகுதி நிறைந்த அவர் அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாத அளவுக்கு கொள்கைச் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்தும் மேலும் சி.எஸ். ஜெயராமன் குறித்தும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
source https://www.vikatan.com/spiritual/gods/chidambaram-jeyaraman-who-left-his-position-for-bhakthi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக