Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

‘25,000 பேரை தி.மு.க-வுக்கு அழைத்து வருவேன்!’ - அறிவாலயத்தில் சூளுரைத்த தோப்பு வெங்கடாசலம்!

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர், அ.தி.மு.க., அ.ம.மு.க., ம.நீ.ம போன்ற மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த பலரும் தி.மு.க-வில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் இன்று 900 பேருடன் தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தோப்பு வெங்கடாசலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாகவும், 4 ஆண்டுகள் அமைச்சராகவும் மற்றும் ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளாக பதவி வகித்தவர் தோப்பு வெங்கடாசலம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர் பதவி கிடைக்காததால், கடும் அதிருப்தியில் இருந்துவந்த தோப்பு அ.தி.மு.க. தலைமைக்கு எதிராகவே பல குடைச்சல்களைக் கொடுத்து வந்தார். அதன்காரணமாக 2021 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட தோப்பு வெங்கடாசலத்துக்கு எடப்பாடி பழனிசாமி சீட் கொடுக்க மறுத்தார். அதனையடுத்து பெருந்துறையில் சுயேச்சையாகக் களமிறங்கிய தோப்பு 10 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளை மட்டுமே வாங்கித் தோல்வியைச் சந்தித்தார். சுயேச்சையாக போட்டியிட்டதன் காரணமாக அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட தோப்பு வெங்கடாசலம், தி.மு.க.வில் இணைய கடும் முயற்சியெடுத்து வந்த சூழலில், அறிவாலயத்தில் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அறிவாலயத்தில் தோப்பு வெங்கடாசலம்

இணைப்பு விழாவில் பேசிய தோப்பு வெங்கடாசலம், “ஈரோடு மாவட்டத்தில் எங்களுடைய உழைப்பையெல்லாம் கொடுத்தாலும்கூட உதாசீனப்படுத்தப்பட்டு தவித்து நின்றோம். அந்த வேளையில் தாயுள்ளத்தோடு எங்களை தி.மு.க., தலைவர் அரவணைத்து ஏற்றுக் கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி வருகிறார். நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற திட்டத்தைக் கொடுத்து, பெண்களை பெருமைப்படுத்தியுள்ளார். இனி தமிழகத்தினுடைய நிரந்தர முதலமைச்சர் அண்ணன் தளதியார் அவர்கள் தான். இந்த நிமிடத்திலிருந்து ஈரோடு மாவட்டத்தை தி.மு.க.வினுடைய அசைக்க முடியாத எஃக்கு கோட்டையாக்க சூளுரை ஏற்கிறோம். நாங்களெல்லாம் வந்து தான் தி.மு.க.,வை ஈரோடு மாவட்டத்தில் வளர்க்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. தி.மு.க., பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்திலே தேடி வந்த பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறீர்கள்.

தி.மு.க,வில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்

எப்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் ஈரோட்டில் 100 சதவிகித வெற்றியைப் பெற்று அதனை உங்களுடைய பொற்பாதங்களில் வைப்பது தான் எங்களுடைய வேலையாக இருக்கும். தூங்குகிற நேரத்தைத் தவிர கழகத்திற்கு உழைக்க தயாராக இருக்கிறோம். 905 அ.தி.மு.க., மற்றும் பல்வேறு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு தங்களை தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல, இது மணியோசை தான். தலைவர் அவர்களே, நீங்கள் எனக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுத்தால், ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் பேரை தி.மு.க.,வில் இணைத்துக் காட்டுகிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/admk-ex-minister-thoppu-venkatachalam-joined-in-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக