Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

கரூர்: பறிபோன ஆசிரியர் வேலை; அதிக மன உளைச்சல்! - பெற்ற தாயைக் கொலை செய்த பி.ஹெச்டி படித்த மகன்

பி.ஹெச்டி வரை படித்து, தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்த இளைஞர் ஒருவரின் மனநலம் பாதிக்கப்பட்டதால், அவரை வேலையைவிட்டு நீக்கியிருக்கிறது, தனியார் பள்ளி நிர்வாகம். இதனால், அதிக மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர், தன்னைப் பெற்ற தாயையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குளித்தலை - கொலை

Also Read: `கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல!' - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது திம்மம்பட்டி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கணக்கப்பிள்ளையூர் கிராமத்திலுள்ள கக்கன் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர், பி.ஹெச்டி முடித்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பொன்னுசாமி, கரூரிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்துவந்திருக்கிறார். சமீபத்தில் இவருக்கு மனநலம் சற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. தனியார் பள்ளி நிர்வாகம், பொன்னுசாமியை ஆசிரியர் பணியிலிருந்து நீக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பொன்னுசாமி இன்னும் அதிக மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இவரின் தாய் முருகாயி வேலை விசயமாக கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் கோபமடைந்த பொன்னுசாமி, முருகாயியை திடீரென கழுத்தை அறுத்து, கொடூரமாகக் கொலை செய்தார். பிறகு, நிதானத்துக்கு வந்த அவர் தன் தாயைக் கொலை செய்த வருத்தத்தில், தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி

அதைக் கண்ட உறவினர்கள், பொன்னுசாமி தற்கொலை செய்துகொள்ள முயன்றதைத் தடுத்து, அவரைக் காப்பாற்றினர். அதோடு, இந்தக் கொலைச் சம்பவம் குறித்து கிராம மக்கள் குளித்தலை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குளித்தலை காவல் நிலைய போலீஸார், முருகாயி உடலைக் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த குளித்தலை காவல் நிலைய போலீஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பெற்ற தாயையே மகன் கொலை செய்திருக்கும் சம்பவம், குளித்தலைப் பகுதி மக்களை அதிரவைத்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/karur-teacher-murdered-in-his-mother-police-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக