Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

வைத்திலிங்கத்துடன் மோதல்: அதிமுக முன்னாள் எம்.பி-யின் `தளபதி’ பாராட்டு! -அதிர்ச்சியில் அதிமுக-வினர்

தஞ்சாவூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி ஒருவர், `தளபதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்கிறார். அதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நானும் மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன்’ என ஸ்டாலின் குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் பாராட்டிப் பேசியிருப்பது அதிமுக-வுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.பி பரசுராமன்

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.பி-யாக இருந்தவர் பரசுராமன். இவர் தற்போது அ.தி.மு.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராகப் பதவி வகித்துவருகிறார். துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் பரசுராமன். கொடுக்கல் வாங்கலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்குள்ளும் பெரும் பனிப்போர் நிலவிவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், பரசுராமன் 2018-ம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக்கொண்டதாகவும், ஆனால் வேலை வாங்கித் தரவில்லை எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்மீது ஒருவர் குற்றம்சாட்டியது சர்ச்சைக்கு வித்திட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தஞ்சாவூர் ரகுமான் நகரிலுள்ள தனது இல்லத்தில் பரசுராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Also Read: “பிரமாண்ட இமேஜ்... கோடிகளில் மோசடி!” - சிக்கலில் கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

அப்போது அவர், ``நான் வேலை வாங்கித் தருவதாகக் கூறி யாரிடமும் பணம் பெறவில்லை. என் பெயரைப் பயன்படுத்தி யாரேனும் பணம் பெற்றிருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியவர், அடுத்து தற்போதைய ஸ்டாலின் ஆட்சி மிகச்சிறப்பாக இருப்பதாகக் கூறி பாராட்டத் தொடங்கினார்.

``மக்கள் ஆட்சி தத்துவத்தின்படி பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதல்படி அவரின் கொள்கைகளைப் பின்பற்றி மிகச் சிறப்பாக ஆட்சி செய்கின்ற தளபதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்துவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

`இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’

என்ற திருக்குறளின் வரிகளுக்கேற்ப, தமிழக மக்கள் யாரை நம்பி ஆட்சியைக் கொடுத்தார்களோ, அவர் சிறப்பான ஆட்சியைத் தருகிறார். தளபதி ஸ்டாலின் மிகச் சிறப்பாக ஆட்சி செய்வதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நானும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்” எனப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரசுராமன்

இது குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம். ``வைத்திலிங்கத்தின் தீவிரமான விசுவாசியாக இருந்தவர் பரசுராமன். அதனால்தான் 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட முக்கியஸ்தர்கள் பலர் சீட் கேட்ட நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நீலகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்த பரசுராமனுக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். அப்போது தி.மு.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், பலம் மிக்கவராகவும் வலம்வந்த டி.ஆர்.பாலுவை தோற்கடித்து அனைவரையும் கவனிக்கவைத்தார். `பரசுராமன் வைத்திலிங்கத்தின் பினாமி’ என அப்போது கட்சியினர் பேசிவந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் தொழில்ரீதியாகவும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் தலையிட்டு பிரச்னையை முடித்துவைத்தனர். அதன் பிறகு பரசுராமனைத் தவிர்த்துவந்தார் வைத்திலிங்கம். கட்சி நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓரங்கட்டினார். இதைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துவந்தார் பரசுராமன். மேலும், அவர் அ.ம.மு.க-வுக்கு செல்லப்போவதாகவும் செய்திகள் அடிப்பட்டன.

Also Read: தனியார் பார்; இடிக்கப்பட்ட பேருந்து நிலையச் சுவர்?!-வைத்திலிங்கம் உறவினரால் சர்ச்சை! என்ன நடந்தது?

ஆனால் அ.தி.மு.க-விலேயே அவர் தொடர்ந்ததுடன், 2021 சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் வைத்திலிங்கம், அறிவுடைநம்பிக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். அப்போது கொரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்டதாகக் கூறி பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக்கொண்டார் பரசுராமன். தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில்தான் அவர் தேர்தல் பணிகளைப் பார்க்கவில்லை என கட்சியினர் கூறினர்.

தேர்தல் முடிவில் அறிவுடைநம்பி தோல்வியைத் தழுவினார். `எனக்கு சீட் கொடுத்திருந்தா நான் நிச்சயம் ஜெயிச்சிருப்பேன். ஆனால் வைத்தி எனக்கு சிபாரிசு செய்யலை’ என்று தனக்கு நெருக்கமானவங்களிடம் பேசிவந்திருக்கிறார். மேலும், வைத்திலிங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து, அவருக்கு எதிராகச் செயல்படுவதற்கும் முயன்றார் என்ற தகவலும் உண்டு.

பரசுராமன்

இந்தச் சூழ்நிலையில்தான் ஸ்டாலின் மிகச் சிறப்பாக ஆட்சி செய்வதாகப் பாராட்டியிருக்கிறார். அ.தி.மு.க-வுக்கு விசுவாசமாக இருப்பவர் எதற்காக அப்படிப் பேசினார் எனத் தெரியவில்லை. பரசுராமனின் இந்தப் பேச்சு வைத்திலிங்கத்தை நிச்சயம் அதிர்ச்சியடையவைத்திருக்கும்” என்றனர்.

வேறு சிலரோ, ``திமுக-வைச் சேர்ந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் நெருங்கிய உறவினர் ஒருவரும், பரசுராமனும் அடிக்கடி சந்தித்துப் பேசக்கூடியவர்கள். அந்த நட்பினாலும், வைத்திலிங்கம் மீதுள்ள அதிருப்தியினாலும் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசியிருக்கலாம்’’ என்றனர்.



source https://www.vikatan.com/news/politics/former-admk-mp-praises-stalin-and-dmk-rule-shocks-admk-cadres

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக