Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

தோல்விகள் சூழ்ந்தாலும் முயற்சிகள் ஓயவில்லை... நம்பிக்கையோடு தமிழக வீரர் சரத் கமல்!

இந்திய டேபிள் டென்னிஸின் முகம் சரத் கமல். இதற்கு முன்பே மூன்று முறை ஒலிம்பிக்கில் ஆடியிருக்கிறார். மூன்று முறையும் தோல்வியே மிஞ்சியது. ஒலிம்பிக் பதக்கம் என்பது இன்னமுமே அவருக்கு ஒரு எட்டாக் கனவாக இருக்கிறது. வயது நாற்பதை நெருங்கிவிட்டது. ஆனால், முயன்று கொண்டே இருக்கிறார், முன்பை விட வேகமாக... இன்னும் ஆவேசமாக! அதன் பலனாக நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த முறை பதக்கத்தை வென்றே தீரும் லட்சியத்தோடு டோக்கியோவுக்குள் நுழைந்திருக்கிறார்.

சரத் கமல், இவரது குடும்பம் ஆந்திராவை சேர்ந்தது. இவருடைய அப்பாவும் ஒரு டேபிள் டென்னிஸ் வீரரே. விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் வேலை பெறும் நோக்கத்தோடு சென்னை வந்தவர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். மாநில அளவிலான போட்டியளவுக்கு ஆடியிருந்த அவருக்கு டேபிள் டென்னிஸில் உச்சத்தை தொட வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்கான தீவிர பயிற்சிகளில் ஈடுபடும் வயதை அவர் தாண்டியிருந்தார். இதனால் ஒரு பயிற்சி மையம் ஆரம்பித்து சிறுவர்களுக்கு பயிற்சியளித்து அவர் நினைத்ததை தன்னுடைய மாணவர்களை வைத்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓடத் தொடங்கினார்.

மாணவர்கள் தன்னுடைய டேபிள் டென்னிஸ் கனவை நிறைவேற்றுவார்கள் என அவர் நினைக்க, அவருடைய மகனே மாணவனாக வந்து நின்றார். நான்கு வயதிலேயே டேபிள் டென்னிஸ் பேடை கையிலெடுத்த சரத் கமல் அப்போது அந்த டேபிளின் உயரம் கூட இருந்திருக்கவில்லை. தந்தையின் மடியில் அமர்ந்து டேபிள் டென்னிஸ் பேடை சுழற்ற தொடங்கியவர், தந்தையின் நிறைவேறா கனவுகளை நிஜப்படுத்தும் எண்ணத்தோடு தீர்க்கமாக ஆடத் தொடங்கினார்.

இவருடைய சித்தப்பாவும் ஒரு டேபிள் டென்னிஸ் வீரரே. அப்பாவும் சித்தப்பாவும் மாறி மாறி பயிற்சியளிக்க நம்பிக்கையளிக்ககூடிய இளம் வீரராக உயர்ந்தார் சரத் கமல்.

சரத் கமல் பேடை சுழற்றிய அந்த 90 களின் கடைசியில் டேபிள் டென்னிஸை பெரிதாக யாரும் அறிந்திருக்கக்கூட இல்லை. ஒரு இளம் வீரராக டேபிள் டென்னிஸுக்குள் நுழைந்து பல சாதனைகளை செய்தார் சரத்.

சரத் கமல்

இந்தியா சார்பில் ப்ரோ டூர் டைட்டிலை வென்ற முதல் டேபிள் டென்னிஸ் வீரர். காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் டேபிள் டென்னிஸ் வீரர். தேசிய அளவில் 9 டைட்டில்களை வென்றிருக்கும் முதல் வீரர் என இன்றைக்கு வரைக்கும் யாருமே செய்யாத சாதனைகளை முதல் வீரராக செய்து சாதனை படைத்து வருகிறார்.

இளம் வீரர்களுடன் சரத் கமல்
2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸ், 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸ், 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் என இதற்கு முன்பே மூன்று முறை ஒலிம்பிக் ஆடிய அனுபவத்தையும் வைத்திருக்கிறார்.

காமென்வெல்த் போட்டியில் சரத் கமல் அளவுக்கு வெற்றிகரமான வீரரை பார்ப்பது கடினம். 2006 மெல்பர்ன் காமென்வெல்த் போட்டிகளில் இரண்டு தங்கம், 2010 டெல்லி காமென்வெல்த் போட்டிகளில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், 2018 கோல்ட் கோஸ்ட் காமென்வெல்த் போட்டியில் உச்சமாக பங்கேற்ற நான்கு பிரிவுகளிலும் பதக்கம் வென்றிருந்தார். ஒரு தங்கம் ஒரு வெள்ளி இரண்டு வெண்கலம் இதில் அடக்கம்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சீனியர் லெவல் போட்டிகளில் ஆடி வருகிறார். இவருக்குப் பிறகு இப்போது புதிதாக வந்து கோலோச்சிக் கொண்டிருக்கும் சத்யன் ஞானசேகரன், மனிகா பத்ரா போன்ற இளம் வீரர்களுடனும் எந்தவித ஈகோவும் இன்றி ஒன்றாக இணைந்து சிறப்பாக ஆடி வருகிறார். மேலும், அவர்களுக்கு எந்தவிதத்திலும் சளைக்காமலும் இன்னமும் தன்னுடைய இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமலும் ஸ்திரமாக ஆடி வருகிறார்.

மார்ச்சில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் மற்றும் மனிகா பத்ராவுடன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஆடுவதற்கு தகுதிப்பெற்றிருக்கிறார். இது அவரின் நான்காவது ஒலிம்பிக். இந்த முறை ஒலிம்பிக்கில் ஆடப்போகும் இந்திய வீரர்களில் அதிக அனுபமிக்க ஒலிம்பியன் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

ஓமன் ஓபனை வென்று இரண்டு முறை ப்ரோ டைட்டிலை வென்ற இரண்டாவது வீரர் என்கிற பெருமையை பெற்றார். தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டார், உலகளவிலான தரவரிசையில் 30-வது இடம் வரை முன்னேறினார் என கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சரத் கமலின் ஃபார்ம் அட்டகாசமாக உள்ளது.

மூன்று முறை தவறவிட்ட பதக்க வாய்ப்பை இந்த முறை சரத் கமல் கெட்டியாக பிடித்துக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது. 38 வயதாகி விட்டதால் இதுவே அவரின் கடைசி ஒலிம்பிக்காக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த கடைசி வாய்ப்பில் தன்னுடைய தந்தைக்காகவும் தாய்நாட்டுக்காகவும் பதக்கத்தை அவர் வென்றே ஆக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.

எல்லாருக்கும் வெற்றி தோல்விகள் ஒரே மாதிரியாக அமையாது. சிலர் சீக்கிரமே மிகப்பெரிய வெற்றிகளை ருசிக்கலாம். சிலருக்கு அந்த வெற்றிகள் கொஞ்சம் தாமதமாகலாம். சரத் கமல் இரண்டாம் வகையைச் சார்ந்தவர். அவருக்கு ஒலிம்பிக் வெற்றி கொஞ்சம் தாமதமாகியிருந்தது. ஆனால், அவர் முயன்று கொண்டே இருந்தார். அதுதான் முக்கியம். அந்த முயற்சியின் பலனை டோக்கியோவில் அறுவடை செய்வார் என ஒட்டுமொத்த தேசமுமே நம்பிக்கொண்டிருக்கிறது!



source https://sports.vikatan.com/olympics/sharath-kamal-ready-to-battle-in-tokyo-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக