Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

பதக்கம் லட்சியம், ஸ்பாய்லர் நிச்சயம்... டேபிள் டென்னிஸ் ரேக்கட்டை சுழற்றும் மனிகா பத்ரா!

ஒலிம்பிக்கை பொறுத்தவரை இந்தியா இதுவரை டேபிள் டென்னிஸில் பெரிதாக எந்த முத்திரையையும் பதித்ததில்லை. இதுவரை 13 பேர் மட்டுமே இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் ஆடுவதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர்.

ஆனால், இந்த முறை இந்தியாவின் டேபிள் டென்னிஸ் அணி நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதிலும், குறிப்பாக பெண்கள் பிரிவில் ஆடப்போகும் மனிகா பத்ரா பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளர். 26 வயதாகும் மனிகா பத்ரா டெல்லியை சேர்ந்தவர். இவரின் மூத்த உடன்பிறப்புகள் இருவரும் டேபிள் டென்னிஸில் ஆர்வம் காட்டியதால் அவர்களை பார்த்து வளர்ந்த இவருக்கும் டேபிள் டென்னிஸ் மீது ஈர்ப்பு உண்டானது.

சிறு சிறு பயிற்சிகளை பெற்றே பள்ளி அளவிலான போட்டியில் சிறப்பாக ஆடியதால், முழு நேர டேபிள் டென்னிஸ் பயிற்சிக்கு சேர்ந்தார். துரோணாச்சார்யா விருதை வென்ற சந்தீப் குப்தாவே மனிகாவிற்கு பயிற்சி அளித்திருக்கிறார். மனிகா பள்ளிப்படிப்பை முடித்த சமயத்தில் அவருக்கு சில மாடலிங் வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது. டேபிள் டென்னிஸில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவற்றை ஒதுக்கி வைத்தார்.

மனிகா பத்ரா

கல்லூரி படிப்பையும் பாதியிலேயே கைவிட்டு முழுமையாக டேபிள் டென்னிஸ் மீது மட்டுமே கவனம் செலுத்த தொடங்கினார். இந்தியாவில் டேபிள் டென்னிஸை பிரபலமாக்க வேண்டும். அதன் முகமாக தான் இருக்க வேண்டும் என்பதே அவருடைய லட்சியம். 2011 சிலி ஓபனில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார். 2015 காமென்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 3 வெள்ளிகளை வென்றிருக்கிறார். 2016 தெற்காசிய போட்டிகளில் 3 தங்கம்,1 வெள்ளி ஆகியவற்றை வென்றுள்ளார். இந்த வெற்றிகளையெல்லாம் விட, 2018 காமென்வெல்த் தொடரில் மனிகா பெற்ற வெற்றிகள்தான் அவரை வெளி உலகுக்கு பரிட்சயமாக்கியது. அந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றவர், அணியாக ஆடிய போட்டியிலும் தன்னுடைய அணியை தங்கம் வெல்ல வைத்தார். 2002-லிருந்து தோல்வியே தழுவாத சிங்கப்பூர் அணியை இந்திய அணி தோற்கடித்திருந்தது.

மனிகா, இந்தியா சார்பில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.
Manika Bathra

டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முன்னேறி வந்து 62 வது இடத்தை பிடித்ததாலும் சில தகுதிச்சுற்று போட்டிகளில் சிறப்பாக ஆடியதாலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடுவதற்கு தேர்வாகியிருக்கிறார். ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக இப்போது புனேவில் சிறப்பு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

டேபிள் டென்னிஸ் ஆடுவதற்கு மனிகா பயன்படுத்தும் ரேக்கெட் அவருக்கு கூடுதல் பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.

'Long pip' வகை ரேக்கெட்களை அவர் பயன்படுத்துகிறார். உலக அரங்கில் தற்போது இந்த வகை ரேக்கெட்களை பெரிதாக யாரும் பயன்படுத்துவதில்லை.

'Short pip' வகையையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இதனால் மனிகாவின் சில மூவ்களை எதிரணியினர் கணிப்பதற்கு கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது.

 2018 காமென்வெல்த் போட்டியில் இந்த ரேக்கெட்களை பயன்படுத்தியே தங்க வேட்டை நடத்தியிருந்தார் மனிகா. அதேமாதிரியான ஆட்டத்தை இங்கேயும் வெளிப்படுத்துவாராயின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.

2016 ரியோ ஒலிம்பிக்கிலேயே மனிகா பத்ரா பங்கேற்றிருந்தார். ஆனால், முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியிருந்தார்.

தோக்குறோமோ ஜெயிக்கிறோமோ... இப்டி ஒருத்தன் வந்து ஆடிட்டு போனான்னு எல்லாரும் பேசணும் என்கிற மோடில் இருக்கிறார் மனிகா!



source https://sports.vikatan.com/olympics/manika-batra-aiming-medal-in-tokyo-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக