Ad

சனி, 24 ஜூலை, 2021

மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய இளைஞர்; முதலுதவி செய்து காப்பாற்றிய காவலர்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரானூர் அருகே உடையாளிப்பட்டி காவல் சரகத்திற்குப்பட்ட பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது குன்றாண்டார் கோவில், ஆழ்வான்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் மின்வாரிய ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரைப் பொதுமக்கள் உதவியுடன், உடையாளிப்பட்டி போலீஸார் அவரை மீட்டனர். உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நோயாளியின் நிலைமைப் பார்த்துக் காவலர் வெள்ளைச்சாமி நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்.

காவலருக்குப் பாராட்டு

மூச்சுப்பேச்சின்றி மயக்க நிலையில் கிடந்த இளைஞரின் மார்புப்பகுதியை தனது கைகளால் அழுத்தி (சி.பி.ஆர்) முதலுதவி சிகிச்சையை மேற்கொண்டனர். அதோடு, வாய் வழியாகச் சுவாசமும் ஏற்படுத்தினார். முதலுதவியால் நோயாளியின் உடல் நிலையில் சிறிதே மாற்றம் ஏற்படத் துவங்கிய நிலையில் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 108 வரும் வரையிலும் தாமதிக்காமல், நோயாளியின் பாதிப்பின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சமயோசிதமாகச் செயல்பட்டு முதலுதவி செய்த உடையாளிப்பட்டி காவல் நிலையக் காவலர் வெள்ளைச்சாமியைப் பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/police-gave-first-aid-to-the-electricity-board-labour-in-pudukottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக