Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

கொங்கு நாடு: ``மக்கள் விரும்பினால் தனி மாநிலமாகப் பிரிக்கலாம்" - நயினார் நாகேந்திரன்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 311-வது பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அழகுமுத்துக்கோன் பிறந்த ஊரான கட்டாலங்குளத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அ.தி.மு.க சார்பில் மரியாதை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர், மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நெல்லைக்கு அருகே வல்லநாடு, தேனிக்கு அருகே வருஷநாடு போல நாடு என்ற பெயர் கொண்ட பல ஊர்கள் இருக்கின்றன. அதை எல்லாம் மாநிலமாகப் பிரிக்கமுடியுமா?

நயினார் நாகேந்திரன்

கொங்கு நாடு என்ற பெயரைக் கேட்டதும் எதிர்க்கட்சியினருக்கு ஏன் பயம் ஏற்படுகிறது. அவசியம் இல்லாமல் கொங்கு நாடு குறித்து எதிர்கட்சியினருக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அது தேவையில்லாதது. அனைத்து பகுதியுமே தமிழ்நாடு தான்.

ஆந்திரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே இரண்டாகப் பிரிந்துள்ளன. அந்த மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பது அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனால் அவை பிரிக்கப்பட்டன. தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தால் அதைச் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

செய்தியாளர்களிடம் பேசும் நயினார் நாகேந்திரன்

கொங்கு நாடு என பிரிக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கவில்லை. மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என்று தமிழக எதிர்கட்சியினர் தான் சொல்கிறார்கள். குறுகிய கண்ணோட்டத்தோடு எதையும் பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, நெல்லையில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ-வான எம்.ஆர்.காந்தி, “தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் பாரதிய ஜனதாவுக்கு இல்லை. தி.மு.க-வுக்கு வேண்டுமானால் அந்த எண்ணம் இருக்கலாம்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/mla-nainar-nagendran-speaks-about-kongunaadu-in-press-meet-at-kattalangulam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக