Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

மியாவாகி மரம் வளர்ப்பு முறை தமிழ்நாட்டுக்கு ஏற்றதுதானா? - வனக்கல்லூரி முதல்வர் சொல்வது என்ன?

முன்பெல்லாம் காடு வளர்ப்பு என்றால், மரப் பொருள்கள் உற்பத்திக்காக மேற்கொள்ளும் வருமானம் தரும் ஒரு செயலாகவே பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் காடு வளர்ப்பு, மனிதர்களின் வாழ்வியலுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இந்திய நகர்ப்புறங்கள் பசுமைப் போர்வையை இழந்துகொண்டிருப்பதால், கடந்த 20 ஆண்டுகளில் நகர மக்கள் அதீத வெப்பத்தைச் சந்திக்கின்றனர். இந்த அதீத வெப்பத்துக்குக் காரணமான பசுமை இல்ல வாயு வெளியீடும் கட்டுப்பாடற்றுச் செல்வதால், புவி வெப்பமயமாதலும் தீவிரமடைந்து வருகிறது.

மியாவாக்கி காடு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றக் குழுவினுடைய உடன்படிக்கையில், இந்திய நிலப்பரப்பில் 33 சதவிகிதத்துக்கு காடுகளை உருவாக்குவதாக இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு கானக அளவை நிறுவனக் கணக்கெடுப்பின்படி இந்திய நிலப்பரப்பில் காடுகளின் மொத்த பரப்பளவு 24 சதவிகிதம். இந்நிலையில், மீதம் 9 சதவிகித நிலப்பரப்பைக் காட்டு நிலமாக மாற்றுவதில், மியாவாகி காடு வளர்ப்பு முறை பெரும் உதவியாக இருக்குமென்று மரம் வளர்ப்பில் ஈடுபடும் தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

அகிரா மியாவாகி என்ற ஜப்பானிய தாவரவியல் ஆய்வாளர் உருவாக்கிய காடு வளர்ப்பு முறைதான் அவருடைய பெயரிலேயே மியாவாகி காடு வளர்ப்பு என்று அறியப்படுகிறது.

அரசு, தனியார் அமைப்புகள் போன்றவை மட்டுமே முன்பு மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வந்தன. அந்த நிலை மாறி, இப்போது தனிமனிதர்களும் பெருவாரியாக மரங்களை வளர்ப்பதில் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இருந்தாலும், ஒரு மரம் முழுமையாக வளர சராசரியாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், இன்றைய சூழலில் காடுகளின் பரப்பை அதிகமாக்க வேண்டியது அவசியம். அதுவும் விரைவாக உருவாக்க வேண்டியது அதைவிடத் தேவையாக இருக்கிறது. இதற்கு மியாவாகி காடு வளர்ப்பு முறை உதவும் என்று சொல்லப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் ஒரு மரத்தின் வளர்ச்சி எப்படியிருக்குமோ அந்த வளர்ச்சியை இரண்டே ஆண்டுகளில் காட்ட முடியும் என்பதுதான் இந்த மியாவாகி முறை.

மியாவாகி காடு

தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி, இடைவெளியற்ற அடர்நடவு முறையில் மரங்களை நட்டு வளர்க்கும் இந்த முறையைக் கண்டுபிடித்தார். அவருடைய கூற்றுப்படி, குறைந்த பரப்பளவில் அதிகமான மரங்களை நட்டு வளர்க்க முடியும். அந்த முறையில் வளரும் மரங்கள் அதிவேகமாக வளர்வதையும் அவர் நிரூபித்துள்ளார். இவருடைய இந்தக் காடு வளர்ப்பு முறை, உலகம் முழுக்கக் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் மியாவாகி முறையில் காடு வளர்க்கும் செயல்முறை பல்வேறு பகுதிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.

சென்னையிலும் இந்த முறையில் காடுகளை உருவாக்கிய தொடக்கம் என்ற தன்னார்வ அமைப்பு, இதுவரை 9.2 ஏக்கர் பரப்பளவில் 65,000 நாட்டு மரங்களை வளர்த்துள்ளது. இவர்களைப் போலவே திண்டிமாவனம் என்ற அமைப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் மியாவாகி முறையில் காடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ராஜாராமிடம் பேசியபோது, ``இந்தியாவின் நிலப்பரப்பு அதிகம்தான். ஆனால், இங்கு மக்கள் தொகை அடர்த்தியும் அதிகம். ஆகவே, இங்கு மியாவாகி முறையைப் பின்பற்றுவது அவசியமாகிறது. மியாவாகி முறை, நகர்ப்புற காடு வளர்ப்பு முறைகளில் ஒன்று. நகரங்களில் காடுகளை உருவாக்குவதற்குத் தேவையான இடவசதி இருப்பதில்லை.

முன்பெல்லாம் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்று சொல்லப்பட்டது. 2,400 சதுர அடிக்கு ஒரு வீடு உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அங்கு ஒரு மரம் இருந்தால் சரியாக இருக்கும். ஆனால், நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் அதிகம். ஒரு குறிப்பிட்ட சதுர மீட்டருக்குள் பல மாடிகள் கட்டப்பட்டு பல குடும்பங்கள் வசிக்கின்றன. அப்போது, அந்த வீடுகள் அனைத்திலிருந்தும் குளிர்சாதன இயந்திரங்களின் பயன்பாடு உட்பட இன்னும் பல செயல்பாடுகளின் மூலம் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு அதிகமாக நடைபெறும். அவற்றைக் கட்டுப்படுத்தப் போதுமான மரங்களை சராசரி முறையில் வளர்த்தால் இடவசதி போதாது.

நாம் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகமாகவும் அவற்றைக் கிரகித்துக்கொள்ளும் மரங்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கும். சராசரியாக மரம் வளர்த்தால், ஒரு வீதிக்கு அதிகபட்சம் 20 மரங்கள் வளர்க்கலாம். இவை, நகரம் முழுவதற்குமாகச் சேர்த்துப் போதுமானதாக இருக்குமா என்றால், இருக்காது.

நடப்பட்டு 9 மாதங்களில் வளர்ந்துள்ள மியாவாகி காடு

வேப்பமரம், புங்க மரம் போன்ற நாட்டு மரங்களை மியாவாகி முறையில் வளர்க்கும்போது, அதற்குத் தேவைப்படும் நிலமும் மிகக் குறைவே. அதாவது, 120 சதுர அடியிலேயே 10 மரங்களை வளர்க்க முடியும். திருப்பூரில் மியாவாகி காடு வளர்ப்பு முறையில் நடப்பட்ட மரக்கன்றுகள், இரண்டே ஆண்டுகளில் காடுகளாக உருவாகின. 2016-17 ஆண்டின்போது நடப்பட்ட போது ஆரம்பத்தில் அவற்றுக்குப் பராமரிப்பு வேலைகளை மேற்கொண்டது மட்டும்தான். அதன்பிறகு அவையே காடாக வளர்ந்துவிட்டன.

அரச மரமும் ஆலமரமும் மிக மெதுவாகத்தான் வளரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், மியாவாகி முறையில் வளர்க்கும்போது, இந்த மரங்களே சராசரியாக இரண்டு ஆண்டுகளில் கொடுக்கும் வளர்ச்சியை, மியாவாகி முறையில் ஓராண்டில் காட்டுகின்றன. இதன் பலன்களை மிகக் குறைந்த காலத்துக்குள் நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நகர்ப்புறங்களில் அவை கொடுக்கும் பலன்களும் அதிகம்" என்று கூறினார்.

மியாவாகி முறை இதுபோன்ற நன்மைகளை வழங்கினாலும், தமிழ்நாட்டின் நிலப்பரப்பிற்கு மியாவாகி முறையை அனைத்து இடங்களிலும் மேற்கொள்ள முடியாது என்கிறார் மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் முதல்வர் முனைவர்.பார்த்திபன். அவரிடம் பேசியபோது, ``முதலில் ஒரு காடு எதற்காக வளர்க்கப்படுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். மியாவாகியாக இருந்தாலும் வேறு முறையாக இருந்தாலும், எந்த நோக்கத்திற்காக வளர்க்கப்படுகிறது என்பதுதான் முதன்மையானது. ஜப்பானில் மியாவாகி அந்த முறையை மேற்கொண்டதற்கு, அங்கு வெள்ளம், மண் அரிப்பைத் தடுக்க வேண்டும், மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது.

முனைவர் பார்த்திபன்

Also Read: `மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!

அதையே இங்கும் நம்மால் செய்ய முடியாது. ஒரு நிலத்துக்கு ஏற்றவாறு, அந்த நிலத்தின் அமைப்புக்கு ஏற்றவாறு காடு வளர்க்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, மண் வளத்தை மேம்படுத்துவது, வருமானத்துக்கு வழி செய்வது என்று பல்வேறு நோக்கங்கள் உள்ளன. அவையனைத்துக்கும் மியாவாகி முறையை அப்படியே நாம் கடைப்பிடிக்க முடியாது. அடர் காடுகளைப் பொறுத்தவரை, எங்கு மரங்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கு நீரின் தேவையும் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை பகுதிகளில் நீர்ப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அப்படியிருக்க, அங்கு மியாவாகி முறையில் காடு வளர்ப்பது பொருத்தமாக இருக்காது.

நகர்ப்புறக் காடு வளர்ப்பு (Urban forestry) என்பதைக் கடந்த நூறாண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம். பூக்கும் மரங்கள், அதிகக் கிளைகள் மற்றும் இலைகளைக் கொண்ட மரங்கள், வேகமாக வளரக்கூடிய மரங்கள் போன்றவற்றை நகர்ப்புறங்களில் இந்த முறையில் வளர்க்கலாம். நகரங்களின் இடவசதிக்கு ஏற்றவாறு இவை மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாட்டில்,

- அடர்த்தியாக நடுவது,

- குறைந்த அடர்த்தியில் இடைப்பட்ட விகிதத்தில் மரம் நடுவது,

- அடர்த்தியற்ற பரவலான முறையில் மரம் நடுவது

என்று மூன்று வகைகளில் மரம் நடும் முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில், அடர் நடவு முறையையே அனைத்து நிலங்களிலும் மேற்கொள்ள முடியாது. தண்ணீரே இல்லாத நிலப்பகுதிகளிலும் அடர் நடவு முறையில் காடு வளர்ப்பது, நீர்ப் பற்றாக்குறையைத்தான் அதிகப்படுத்தும்.

மியாவாக்கி

Also Read: `மரமும், மரம் நிமித்தமும்!' - முதுமையிலும் மரங்களுக்காவே வாழும் கருப்பையாவின் கதை

ஜப்பானில், வெள்ளம், மண் அரிப்பு போன்ற பிரச்னைகள் அதிகமாக இருந்த பகுதிகளில், அதைத் தடுப்பதற்காகக் குட்ட மரம், நெட்ட மரம், செடிகள் என்ற பல்வேறு வகையான தாவரங்களை, அடர்நடவு முறையில் அவர் வளர்த்தார். அதன்மூலம் அந்த மண் வளமும் நீர் வளமும் பாதுகாக்கப்பட்டது. அதையே கொண்டுவந்து, திறந்தவெளிக் காடுகளைக் கொண்ட நிலங்களிலும் மேற்கொண்டால் எந்தப் பயனும் கிடைக்காது. மியாவாகி காடு வளர்ப்பு என்பது நல்ல நடவு முறைதான். ஆனால், அதை எந்த நிலத்தில் மேற்கொள்கிறோம் என்பது முக்கியம்" என்று கூறினார்.

பொதுவாக, மரம் வளர்த்தல் என்று வந்துவிட்டால், எந்த மரத்தை எங்கு வளர்க்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு, நிலத்துக்கேற்ற மரங்களை வளர்ப்பதுதான் சரியான பலன்களைத் தரும் என்று தாவரவியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பெருவாரியாக நடக்கும் மரம் வளர்க்கும் செயல்பாடுகளில் இந்தக் கூற்றின் மீது அதிகக் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதேபோல் மியாவாகி முறையிலும் பின்பற்றாமல், எந்த நிலத்துக்கு எந்த முறையில் மரம் வளர்க்க வேண்டும் என்பதை உணர்ந்து, அந்தந்த நிலத்துக்கு ஏற்ற முறையில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டால், அதற்கான பலன்களை நம்மால் அடைய முடியும்.



source https://www.vikatan.com/news/environment/is-miyawaki-technique-tree-planting-suitable-to-tamilnadu-what-expert-says

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக