தமிழக பா.ஜ.க., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, வருகிற 16-ம் தேதி சென்னை கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க., தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்காக நேற்று கோவையிலிருந்து கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாகக் கிளம்பியவர் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வழியாக சென்னையைச் சென்றடைகிறார். இந்த பேரணியின்போது நேற்று (ஜூலை 14) திருப்பூருக்கு வந்த அண்ணாமலைக்கு, திருப்பூர் மாவட்ட பா.ஜ.க., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த வரவேற்பு விழா நிகழ்ச்சியில் பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., தலைவர் செந்தில்வேல், ``தமிழகத்தில் பா.ஜ.க., ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழக மக்களுக்கு திராவிட கும்பலிடம் இருந்து விடுதலை பெற அண்ணாமலை முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது விதியாகும்’ என்றதோடு சிலபல டயலாக்குகளைப் பேச என்ன ரியாக்ஷன் கொடுப்பதெனத் தெரியாமல், மொத்தக் கூட்டமும் விழிபிதுங்கி நின்றது.
அதனையடுத்து மைக் பிடித்த அண்ணாமலை, “தமிழகத்திலேயே உண்மையான சித்தாந்தத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. சித்தாந்தத்தில் எந்த ஒரு கட்சியும் நமக்கு அருகாமையில் வர முடியாது. ஏனென்றால் உண்மையான நாட்டுப்பற்று, தேசியப்பற்று இருக்கக்கூடிய நண்பர்கள் அனைவரும் இங்கு தான் இருக்கின்றனர். இத்தனைக் காலமாக பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகம் தேவைப்பட்டது. இப்பொழுது தமிழ்நாட்டிற்கு பாரதிய ஜனதா கட்சி தேவைப்படுகிறது. ஏனென்றால் இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 45 நாள் ஆட்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து நீட், புதிய கல்விக்கொள்கை என எதுவுமே தமிழ்நாட்டிற்கு வேண்டாம், எங்களை தனியே விட்டுவிடுங்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது. சாதாரண மக்களுக்கு தடுப்பூடு கிடைப்பதில்லை. தி.மு.க., துண்டு போட்டிருப்பவர்களுக்குத் தான் தடுப்பூசி போகுது. அதை மறைப்பதற்கு மோடிஜி தடுப்பூசி கொடுக்கலைன்னு பொய் சொல்கின்றனர். அடுத்த நான்கு மாதத்தில் நீங்க பாப்பீங்க, ஒவ்வொரு பொய்யையும், ஒவ்வொரு முள்ளையும் வேரறுப்போம்.
மக்களுக்கு பா.ஜ.க., மற்றும் பிரதமர் மோடி மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது, மத்திய அரசின் திட்டத்தில் அதிகம் பயனடைந்த ஊர் திருப்பூர். முத்ரா திட்டத்தில் திருப்பூர் இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறது. தமிழத்துல 13 ஆயிரம் கிராமங்கள் இருக்கு. ஒவ்வொரு கிராமத்துக்கும் நம்முடைய கட்சியை எடுத்துட்டு போகணும். வீடுவீடாக நம்முடைய கொள்கையை எடுத்துச் சொல்லி பேசணும். இனியும் நாம் பொறுத்திருக்க முடியாது. ஆட்சிக்கு வந்தாக வேண்டும். நம்முடைய நல்ல சித்தாந்தங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். 16-ம் தேதி உங்களுடைய சேவகனாக பதவியேற்க சென்னைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். அதிரடியாக அசுரத்தனமாக இந்தக் கட்சி இனி வளர்ச்சி பெறும். வரும் காலம் பாரதிய ஜனதா கட்சியின் காலம்” என்றார்.
Also Read: "இது ஆரம்பம்தான்" - கோவையில் சஸ்பென்ஸ் வைத்த அண்ணாமலை!
source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-bjp-leader-annamalais-tiruppur-visit
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக