Ad

புதன், 14 ஜூலை, 2021

கீழ்ப்பசார் சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் நாளை (16-7-21) கும்பாபிஷேகம்!

கீழ்ப்பசார் சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் நாளை கும்பாபிஷேகம்!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்துக்கு முன்னதாக 3 கி.மீ தொலைவிலேயே இடப்புறமாக ஒரு சாலை பிரியும். இந்த திண்டிவனம்- ஆவணிப்பூர் சாலையில் உள்ளது கீழ்ப்பசார் கிராமம். இங்கு தான் அருளாட்சி செய்கிறார் அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர். அம்பிகை பச்சை நிறத்தினளாகத் திகழ்வதால் மரகதாம்பிகை என்ற திருப்பெயர் கொண்டிருக்கிறாள்.

சுக்கிரப் பரிகாரத் தலமாக விளங்க இருக்கும் இந்த ஆலயம் குறித்து 2018 ஜனவரி 2-ம் தேதியிட்ட சக்தி விகடன் இதழில் 'ஆலயம் தேடுவோம்' கட்டுரையில் வெளியிட்டு இருந்தோம்.
சந்திர மௌலீஸ்வரர்

சந்திர மௌலீஸ்வரர்


பிற்காலச் சோழர்களும், விஜய நகர மன்னர்களும் கொண்டாடிய அந்த ஊரும், ஆலயமும் அப்போது யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்தன. ஆலகாலம் உண்டு அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய பரமன் கோயிலும் மண் மூடி, மரத்தின் விழுதுகள் மூடி, சுற்றிலும் காடு மண்டி அந்த பிரமாண்ட கற்றளி காணாமல் போய் இருந்தது. அங்கு 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு துர்கை சிலையும், இரட்டை நந்தியும், உடைந்துபோன சில சிலைகளும் கிடைத்தன.

இந்நிலையில் தேவபிரச்னம் பார்த்ததில் அந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புற்று விளக்கியதும், சுக்கிரபகவான் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டார் என்பதும், அதனால் இந்தத் தலம் சுக்கிரப் பரிகாரத் தலமாகவும் திகழ்ந்தது என்றும் தெரிய வந்தது.

சுக்கிரப் பரிகாரத் தலம்
கீழ்ப்பசார் அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர்


இந்தக் கோயிலைக் குறித்து கட்டுரை வெளியிட்டு வாசகர்களுக்குத் தெரிய வைத்தோம். வழக்கம் போல வாசகர்களின் ஏகோபித்த பங்களிப்பால் ஆலயம் புதிதாக உருவாகத் தொடங்கியது. அற்புதக் கற்றளியாக, சுவாமி சந்நிதியுடன், அம்பிகை, வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், கற்பக விநாயகர், சுக்கிர பகவான், லட்சுமி குபேரர் சந்நிதிகள் உருவாகத் தொடங்கியது. பௌர்ணமி பூஜைகளும், நித்ய அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தது.

தற்போது ஈசன் திருவருளால் வரும் வெள்ளிக்கிழமை 16-ம் தேதி காலை கீழ்ப்பசார் அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் ஆலயத்துக்குக் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் சகல வைபவங்களும் ஒன்றிணைந்த இந்த மகாகும்பாபிஷேக விழாவை உங்கள் சக்தி விகடன் முகநூல் புத்தகத்தில் லைவ்-வாக நீங்கள் கண்டு தரிசிக்கலாம்.



source https://www.vikatan.com/spiritual/temples/tindivanam-keezhppasar-sri-chandra-mouleeswarar-temple-kumbabishegam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக