Ad

சனி, 24 ஜூலை, 2021

அம்பாசமுத்திரம்: கொரோனா ஊரடங்கால் நலிவடைந்த தொழில்; டிராவல்ஸ் அதிபருக்கு நேர்ந்த கொடூரம்!

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தில் உள்ள நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் வெங்கடேஷ். 33 வயது நிரம்பிய வெங்கடேஷுக்குத் திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

வெங்கடேஷ்

வெங்கடேஷ் சென்னையில் டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் அவரது தொழில் நலிவடைந்தது. கடன் வாங்கி கார்களை வாங்கியிருந்த நிலையில், தொழில் நடக்காததால் கடனுக்கான வட்டியைக்கூட செலுத்தமுடியாத நிலைமை உருவானது.

கடன் கொடுத்தவர்கள் வட்டியையும் அசலையும் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் சென்னையில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஆனாலும், கடன் கொடுத்தவர்கள் போன் மூலம் தொடர்ந்து கடனைக் கேட்டு வந்ததால் சில தினங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்த நிலையில், தொழில் நலிவடைந்ததால் வேதனையில் சிக்கித் தவித்த அவர், தென்காசி வழியாக திருநெல்வேலி நோக்கிச் சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். புளியங்குளம் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்கள். ஊரடங்கின் தாக்கத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/young-man-in-ambasamudram-committed-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக