திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் மகள் உள்ளார் (செய்தியில் சிறுமியின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளது). சிறுமி அதே பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலிருந்து வந்த சிறுமியை கடந்த 1-ம் தேதி அவரது தாயார் அருகிலுள்ள கடைக்குச் சென்று மளிகைப் பொருள் வாங்கி வருமாறு அனுப்பி வைத்திருக்கிறார். கடைக்குச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பதறிப் போன சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் அலைந்து, திரிந்து தேடியிருக்கின்றனர். ஆனால், சிறுமியின் தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு என எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காததால் பயத்தில் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கின்றனர்.
அவர்களின் புகார் மனுவினை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீஸார் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவல்களின் பேரில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன் (32) என்பவர் சிறுமியைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். அதைத் தொடர்ந்து வெங்கடசேனைப் பிடிக்கக் காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்து செங்குன்றம் மற்றும் புழல் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் செங்குன்றத்திற்கு அருகில் வெங்கடேசன் மறைந்து தலைமறைவாக உள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் வெங்கடசேனை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதைத் தொடர்ந்து, ஆள் அரவமற்ற பகுதியில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர்.
பின்னர், போலீஸார் இருவரையும் திருமுல்லைவாயல் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் சிறுமி, கடைக்குச் சென்று கொண்டிருந்த தன்னை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று வெங்கடசேன் யாருமில்லாத வீட்டில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். அதனையடுத்து, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு விட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வெங்கடசேனைக் கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
source https://www.vikatan.com/news/crime/under-pocso-act-police-arrested-youngster-who-sexually-harrassed-girl-child
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக