Ad

சனி, 10 ஜூலை, 2021

''கொரோனா இரண்டாவது அலைல கொஞ்சம் அலட்சியமா இருந்ததோட விளைவு அம்மா மரணம்!'' - 'வேலம்மாள்' ரம்யா

''கொரோனாவின் தாக்கம் இந்த அளவுக்கு இருக்கும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. அதனால நான் இழந்தது என் உயிருக்கு மேல நேசிச்ச என் அம்மாவை'' கலங்கியபடியே பேசுகிறார் ‘வேலம்மாள்’ ரம்யா. பிரபல தொடர்களில் நடித்துவரும் இந்த ரம்யா ராமகிருஷ்ணாவிடம் அம்மாவின் இழப்பு குறித்து பேசினேன்.

''கொரோனாவோட முதல் அலை எப்படி இருக்கும்னு யாருக்குமே தெரியாது. அதனால, ’வீட்ல அம்மா இருக்காங்க... நாம பாதுகாப்பா இருக்கணும்’கிற அக்கறையோட ரொம்பவே கவனமா இருந்தேன். பாதுகாப்புக்காகவே 'ரோஜா' தொடரில் இருந்தும் விலகினேன். முதல் அலையில பெரிய அளவில் உயிரிழப்புகள், பாதிப்புகள் இல்ல. என் நட்பு வட்டத்துலயும் யாருக்கும் கொரோனா பாதிப்பும் ஏற்படல. அதனால இரண்டாவது அலை வந்தப்போ கொஞ்சம் அசலாட்டா இருந்துட்டேன்.

அம்மாகிட்ட எப்பவுமே ‘வீட்டுக்குள்ள யாரையும் கூப்பிட்டு வெச்சு பேசிட்டு இருக்காதீங்க’ன்னு சொல்லுவேன். ஆனா, வீடு தேடி வந்து பேசுறவங்களை எப்படி போகச் சொல்றதுன்னு அம்மா எல்லோரையும் உட்கார வைச்சு பேசிட்டு இருப்பாங்க. எப்படி யார் மூலமா கொரோனா எங்களுக்கு வந்ததுன்னு கண்டுபிடிக்க முடியலை.

ரம்யா ராமகிருஷ்ணா

ஆரம்பத்துல அம்மாவுக்கு இருமல் மட்டும்தான் இருந்தது. ஏதாவது குளிர்ச்சியா சாப்பிட்டிருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா, நாளஞ்சு நாள் கழிச்சு காய்ச்சல் வரவும் மருத்துவர்கிட்ட ஆலோசனை கேட்டு மருந்துகள் கொடுத்தேன். அப்புறம், டாக்டர்கிட்ட கேட்டு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தோம். கொரோனா பாதிப்பு குறைவாதான் இருந்தது. மருத்துவமனை தேடி அம்மாவை அட்மிட் பண்ணோம். ஆனா, மறுநாள் காலையில் அம்மா இறந்துட்டாங்க. அவங்க, இறந்தப்போ அவங்களுக்கு கொரோனா நெகட்டிவ்’’ என்று மெளனமானார் ரம்யா.

''நிறைய பேர் நமக்குலாம் கொரோனா வராதுன்னு அசால்ட்டா இருக்காங்க. நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனா, கொரோனா எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்னு கண்ணால பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன். தயவுசெஞ்சு மூணாவது அலை பத்தி எச்சரிக்கையா இருங்க. அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குறாங்க. என்னை பொறுத்தவரை சிடி ஸ்கேன் எடுத்து பார்த்துக்கிறது ரொம்பவே நல்லது. அதே மாதிரி வீட்ல பல்ஸ் செக் பண்ற மிஷின் வெச்சுக்கோங்க'' என்றவர் ஸ்கேன் சென்டர்கள் குறித்து தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

''ஸ்கேன் சென்டருக்கென சில பொறுப்புகள் இருக்கு. அவங்க அந்த பொறுப்புகளை நிச்சயம் எடுத்துக்கணும். நோய் தீவிரம் அதிகரிக்கும்போது உயிரோட மதிப்பை அவங்க புரிஞ்சு மக்களை காப்பாத்த உதவி செய்யணும். தேடி வரவங்களை அலைக்கழக்கவோ, ரிசல்ட்டை தாமதப்படுத்தவோ கூடாது'’ என்கிறார்.

மந்திரா பேடி தன் கணவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ததுபோல, ரம்யாவும் அவருடைய அம்மாவின் இறுதி சடங்குகளை ஒரு பெண்ணாக முன்நின்று செய்திருக்கிறார்.

''பெண்கள் இந்த மாதிரி சடங்குகளைச் செய்யக் கூடாதுன்னு சொல்லுவாங்க. சாஸ்திர சம்பிரதாயத்தை நான் பெருசா எடுத்துக்கலை'' என்கிறார் ரம்யா.



source https://cinema.vikatan.com/television/velammal-serial-actress-ramya-ramakrishna-talks-about-her-mothers-death-due-to-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக