Ad

திங்கள், 5 ஜூலை, 2021

''பிரபாகரன் போட்டோ வைத்து அரசியல் செய்பவர்கள் பற்றிப் பேச விரும்பவில்லை!'' - புலவர் புலமைப்பித்தன்

''நான் தலைவராக விரும்பவில்லை. அதேநேரம், 'சசிகலாவோடு யாரும் பேசக்கூடாது; பேசினால் கட்சியை விட்டு நீக்கிவிடுவோம்' என சீண்டியதால்தான் அவரோடு நான் பேசவேண்டியதானது!'' என்கிறார் அ.தி.மு.க முன்னாள் அவைத்தலைவரான புலவர் புலமைப்பித்தன்! அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமை குறித்து காத்திரமான விமர்சனங்களை முன்வைத்துவரும் மூத்த தலைவரான புலவர் புலமைப்பித்தனை நேரில் சந்தித்தேன்.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

''ஜெ. மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்று கட்சியை திறம்பட நடத்திவரும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மீது என்ன குற்றம் சொல்லமுடியும்?''

''ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையிலும் கட்சி கட்டுக்கோப்பாக இருந்துவந்தது. 'மோடியா இந்த லேடியா...' என்று பேசுகிற அளவுக்கு துணிச்சல் மிக்கவராக இருந்தார் அவர். ஆனால், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் என இவர்கள் இருவரும் இன்றைக்கு அ.தி.மு.க-வை 'தமிழக பா.ஜ.க-வாக மாற்றிவிட்டார்கள். ஒரு மதவாதக் கட்சிக்கு ஈடாக அ.தி.மு.க-வை கொண்டுவந்து நிறுத்தியதை, என்னால் கொள்கை ரீதியாக ஒத்துப்போகவே முடியாது!''

''எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலேயே ஆன்மிக விஷயத்தில் அ.தி.மு.க தாராள மனப்பான்மையுடன்தானே இருந்துவந்தது... அப்போதெல்லாம் நீங்கள் எதிர்க்கவில்லையே ஏன்?''

''எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனாலும்கூட இவர்களுக்கு இதையெல்லாம் தாண்டிய ஆளுமைத்திறனும் இருந்தது. ஜெயலலிதாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும்கூட, தமிழ்நாட்டின் நன்மைக்காகத்தான் அவர் பாடுபட்டார். அதனால்தான் ஜனாதிபதியே ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்கூட 69% இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்து, சமூக நீதியை நிலைநாட்டினார். அவர் சேலை கட்டிய சிங்கம்! ஜெயலலிதா முன்னிலையிலும் 'கடவுள், மதம்' குறித்த என்னுடைய பகுத்தறிவுக் கருத்துகளை வெளிப்படையாகப் பேசியிருக்கிறேன்.ஒரு பட பூஜையின்போது, ஆராதனை தட்டு எடுத்துவந்தவரிடம், 'அவரிடம் மட்டும் தீபாராதனை காட்டவேண்டாம்' என்று என்னைக் குறிப்பிட்டுச் சொன்னார் எம்.ஜி.ஆர்.''

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

''அ.தி.மு.க-வில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்கிறீர்களே.... இதற்கு முன்னரும் அ.தி.மு.க-வில் குறிப்பிட்ட ஜாதியினரது ஆதிக்கம் இருந்ததுதான் என்கிறார்களே?''

''முதலில் நான் ஜாதிக்கு அப்பாற்பட்டவன். எனவே எந்த ஜாதிக்காரர்களையும் நான் ஜாதியக் கண்ணோட்டத்தில் பார்ப்பது கிடையாது. கட்சிக்கு ஆதரவானவர்களாக யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு உரிய பொறுப்புகளை எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் வழங்கிவந்தார்கள். உதாரணமாக அ.தி.மு.க என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரே மாயத் தேவர்தான். எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அன்றைக்கு ஜாதிய உணர்வின்றி கட்சித் தொண்டர்களாகத்தான் செயல்பட்டு வந்தார்கள். ஆனால், இன்றைக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கம் கட்சியில் அதிகரித்திருக்கிறது. இவர்கள் அரசியல் செய்வதில் காட்டும் ஆர்வத்தைவிடவும் காசு சேர்ப்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.''

''10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சிக்குப் பிறகும் நடந்து முடிந்த தேர்தலில், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க 65 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது இரட்டைத் தலைமைக்கு கிடைத்த வெற்றிதானே....?''

''தி.மு.க-விலிருந்து விலகியபிறகு புதிதாக கட்சி தொடங்குவது குறித்து சுமார் ஒரு மாதம் காலம் நானும் எம்.ஜி.ஆரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை செய்தபிறகுதான், 'அ.தி.மு.க' என்ற கட்சியே உருவானது. அப்போதெல்லாம் இந்த இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் எங்கே இருந்தார்கள்? அவ்வளவு ஏன்... கட்சிக்குள் வரும்போது இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் எந்த நிலையில் இருந்தார்கள்? இன்றைக்கு தங்களது சுயநலத்துக்காக அ.தி.மு.க எனும் கட்சியைப் பாழ்படுத்திவிட்டார்கள் இவர்கள்!''

ஓ.பன்னீர்செல்வம்

''இந்த சர்ச்சைக்குப் பிறகு, இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பில் யாரேனும் உங்களோடு தொடர்புகொண்டார்களா?''

''அவர்கள் தரப்பில் யாரும் இதுவரை பேசவில்லை! ஆனால், தமிழ்நாடு முழுக்க உள்ள தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'நல்லவேளை நீங்கள் இப்போது தலையிட்டீர்கள்...' என்று பாராட்டுகிறார்கள். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களும் பேசிவருகிறார்கள்.''

''கட்சிக் கட்டுப்பாடு முழுவதும் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் வசம் இருக்கும்போது, நீங்கள் எப்படி கட்சிப் பொதுக்குழுவைக் கூட்டமுடியும்?''

''பொதுக்குழுவை ஏன் கூட்ட வேண்டும்? அதுதான் ஏற்கெனவே இவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, சசிகலாவை பொதுச்செயலாளராகவே தேர்ந்தெடுத்து அங்கீகரித்துவிட்டார்களே! எனவே, இப்போதும் பொதுச்செயலாளர் சசிகலாதான். மற்றபடி திராவிட இயக்க வரலாற்றில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளெல்லாம் ஒருபோதும் கிடையாது. எனவே, பொதுச்செயலாளர் சசிகலாதான் இனி பொதுக்குழுவைக் கூட்டி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய இவர்கள் இருவரையும் (இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்) கட்சியை விட்டு நீக்கவேண்டும்!''

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

''இன்றைய அ.தி.மு.க தலைவர்களில் நம்பிக்கைக் கொடுக்கக்கூடிய தலைவர் என்று யாரை அடையாளம் காட்டுவீர்கள்?''

''அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை!''

Also Read: Ghost town : "ஊரைவிட்டு வெளியே வந்தா நாங்க இறந்திடுவோம்" - ஒரு கிராமத்தின் கதறல்!|பகுதி 6

''ஈழத்தமிழர் விவகாரங்களை முன்வைத்து செய்யப்பட்டு வரும் தமிழக அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம், விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்காக ஈழம் சென்றுவிட்டு வந்திருக்கலாம். ஆனால், தம்பியும் (பிரபாகரன்) விடுதலைப் புலிகளும் என்னைச் சந்திப்பதற்காக என் வீட்டுக்கே வந்து தங்கியிருந்தவர்கள். அதனால்தான் "உங்கள் இல்லம்... ஈழத் தமிழர்களின் இரண்டாவது தாயகம்" என்று புலிகளே சொன்னார்கள். கழுத்தில் சயனைடு குப்பியைக் கட்டிக்கொண்டு தாய் மண்ணுக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடியவர்கள் அவர்கள். கருணாநிதி ஆரம்பத்திலிருந்தே ஈழ விடுதலையை ஆதரிக்கவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர்-தான் புலிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார்.

பிரபாகரன்

வைகோ, விடுதலைப் புலிகளோடு நல்ல தொடர்பில் இருந்தவர். ஆனால், தமிழக அரசியல் சூழலில் ஈழம் குறித்த எந்த முன்னெடுப்பையும் அவராலும்கூட பெரியளவில் செய்ய இயலவில்லை. அதேபோல், பழ நெடுமாறன் தேர்தல் அரசியலுக்கே வரமுடியாமல் போய்விட்டவர். மற்றபடி தம்பியோடு (பிரபாகரன்) ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு, அதைவைத்து இங்கே அரசியல் வியாபாரம் பண்ணிக்கொண்டிருப்பவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், ஈழ விவகாரத்தில் ஆக்கபூர்வ முன்னெடுப்புகளை எடுக்கக்கூடிய தலைவராக இன்றைக்கு இங்கே யாருமே இல்லை!''

Also Read: 140 நாட்களுக்குப் பின் கூண்டிலிருந்து வெளியே வந்த கொம்பன்; பாகனாக பொறுப்பேற்ற பழங்குடி இளைஞர்!

''திராவிட கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வோம் என்ற தி.மு.க அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''கருணாநிதியோடு எனக்கு நீண்டகாலத் தொடர்பு உண்டு; நெருங்கிய நண்பர். என் மகனே முதல் அமைச்சராக வீற்றிருக்கிறார் என்றுதான் நான் பெருமையடைகிறேன்.

மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலையில் திருக்குறளைப் பாடமாக்கியிருக்கிறார். தமிழில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்திருக்கிறார். ஆக, நான் அரசியலில் நான் செய்ய விரும்புவதை இப்போது ஸ்டாலின் செய்துவருகிறார். எனவே, 'எங்கே நன்மை யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் உலகம்; அங்கே வந்து தழுவிக் கொண்டு போற்றும் நல்ல இதயம்' என்ற உலகம் சுற்றும் வாலிபன் பாடலைத்தான் உதாரணமாக சொல்ல விரும்புகிறேன்!"



source https://www.vikatan.com/government-and-politics/politics/lyricist-and-politician-pulavar-pulamai-pitthan-interview-on-tamilnadu-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக