Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

`அம்மா உணவகம் முதல் லியோனி நியமனம் வரை!' ஓ.பி.எஸ்ஸின் அறிக்கைகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

''பா.ஜ.க மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அ.இ.அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை''

``பா.ஜ.க உடனான கூட்டணியே, அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்'' என முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடந்த, அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேச, உடனடியாக ஓ.பி.எஸ்ஸிடமிருந்து வந்த அறிக்கை இது. ''இந்த உடனடி அறிக்கையை வெறும் பா.ஜ.க ஆதரவு மனப்பான்மையில் வெளியானது என்று மட்டும் பார்க்கமுடியாது. அதற்கும் மேலாக அ.தி.மு.க என்கிற கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் நான்தான், கூட்டணிக் கட்சிகள் குறித்து அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் உரிமையும் எனக்குத்தான் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவும்தான்'' என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஓ.பி.எஸ்ஸின் இந்தத் தனி அறிக்கை யுத்தம் எப்போது தொடங்கியது?

வானூர் ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம்.

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள், சென்னை ஜெ.ஜெ நகரில் உள்ள அம்மா உணவகத்தைத் தாக்கியதைக் கண்டித்து வெளியான அறிக்கைதான் ஓ.பி.எஸ் பெயரில் வெளியான முதல் தனி அறிக்கை. அதனைத் தொடர்ந்து, கொரோனா நடவடிக்கைகளை துரிதப்படுத்த, தனியார் ஆம்புலன்ஸ் கட்டணங்களை முறைப்படுத்த, கறுப்புப் பூஞ்சை சிகிச்சைகளை விரைவுபடுத்த, கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய, மேகதாது அணை விவகாரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க என தினம் தினம் அவரிடமிருந்து அறிக்கைகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, லியோனி நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வருக்கு கோரிக்கையை முன்வைத்து இன்றும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேர்தலுக்குப் பிறகாக ஆரம்பித்த ஓ.பி.எஸ்ஸின் இந்தத் தனி அறிக்கைகள் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வான பிறகு வேகமெடுத்தது. ஓ.பி.எஸ்ஸின் இந்த அறிக்கைகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்,

'' முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்ட நாள் முதலாகவே ஓ.பி.எஸ் அவர் மீது வருத்தத்தில்தான் இருந்தார். ஆனால் தேர்தல் நேரத்தில், ஏதாவது செய்ய அது தொண்டர்களிடமும் மக்கள் மத்தியிலும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும். அது தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை தேர்தலில் தோற்றுப்போனால் முழுப்பழியையும் நம்மீது போட்டு விடுவார்கள் என்பதற்காகவே அமைதியாக இருந்தார். தேர்தல் முடிந்த மறுநாளில் இருந்து அவரின் தனி அறிக்கைகள் வெளிவர ஆரம்பித்தன. தொடர்ந்து அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். அது இனிமேலும் தொடரும். எங்களின் ஆட்சி இருக்கும்போது வேண்டுமானால், எடப்பாடி முதல்வராக, ஓ.பி,எஸ் துணை முதல்வராக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது ஆட்சி இல்லை. கட்சியில் மூத்த பொறுப்பில் இருப்பவர் ஓ.பி.எஸ்தான். அதனால், அவருக்கு அறிக்கை வெளியிடும் முழு அதிகாரமும் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் தொடர்ந்து தனி அறிக்கைகளாக வெளியிட்டு வருகிறார்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் சூழ்ச்சி செய்து கைப்பற்றிவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் எங்கள் கட்சி தோற்றபோதும், தேனியில் ஓ.பி.எஸ் மகன் வெற்றி பெற்றார். பா.ஜ.க கூட்டணியில் உள்ள அனைத்து பெரிய கட்சிகளுக்கும் மத்தியில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அ.திமு.க சார்பில் ஒருவர்கூட இல்லை. மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, எடப்பாடி அதற்கான முயற்சிகளில்கூட இறங்கவில்லை. ஓ.பி.எஸ் மகன் அமைச்சரானால் எங்கே தன்னைவிட கட்சியில் ஓ.பி.எஸ் ஆதிக்கம் அதிகமாகிவிடுமோ என்கிற பயத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே வருகிறார்.

Also Read: அ.தி.மு.க: எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி... பன்னீர் செல்வத்தின் அடுத்த அஸ்திரம் என்ன?

எதிர்க்கட்சித் தலைவராக, எடப்பாடி பழனிசாமி இருந்தாலும் தமிழகத்தின் முதன்மையான பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி தினசரி ஆக்கப்பூர்வமான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், ஓ.பி.எஸ்தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். அதுமட்டுமல்ல, கட்சியைக் காப்பாற்றும் வேலையையும் ஓ.பி.எஸ்தான் செய்கிறார். சி.வி.சண்முகம் கட்சிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் பேசியதும் உடனடியாக அறிக்கை விட்டு சலசலப்பில்லாமல் பார்த்துக்கொண்டதும் ஓ.பி.எஸ்தான். பிறகுதான், எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் அழைத்து இரண்டு பேரும் சேர்ந்தே அறிக்கை வெளியிடலாம் என வேண்டுகோள் விடுக்க, இரண்டு பேரின் பெயரிலும் ஒரு அறிக்கை வெளியானது. என்னதான் ஓ.பி.எஸ்ஸை இவர்கள் ஓரம்கட்ட நினைத்தாலும் அவரின் கையெழுத்தில்லாமல் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. முன்பு, பலமுறை விட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால், இனிமேல் அவர் விடும் எண்ணத்தில் இல்லை'' என்கிறார்கள் அதிரடியாக.

ஓ.பி.ரவீந்திரநாத்

அ.தி.மு.க நிர்வாகிகள் இது குறித்துப் பேசும்போது, '' ஓ.பி.எஸ் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர் அல்ல. அவரின் ஆதரவாளர்கள் என அவருடன் இருக்கும் சிலர்தான் அவரை வற்புறுத்தி இது போன்ற அறிக்கைகளை வெளியிட வைக்கின்றனர். இதனால் அவருக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை'' என்கிறார்கள் தடாலடியாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-politics-behind-the-opss-individual-statements

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக