தமிழ்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், 8 நிறுவனங்களிடம் மட்டும் ஜி.பி.எஸ் கருவி வழங்க வேண்டும் எனப் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த உத்தரவுக்கு எதிராக ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ‘தமிழ்நாட்டில் மொத்தம் 118 நிறுவனங்கள் இருக்கும்போது குறிப்பிட்ட 8 நிறுவனங்களிடம் மட்டும் ஏன் ஜி.பி.எஸ் கருவிகள் வாங்க வேண்டும் எனக் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவுக்குத் தடை விதித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டும் ஒளிரும் பட்டைகளையும் வாங்க போக்குவரத்துறையினருக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் சென்னை உயர்நீதிமன்றமே தடைவிதித்திருந்தது. இந்நிலையில் கரூர், சென்னை வீடுகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
“தி.மு.க அரசு பொறுப்பேற்று இன்னும் 90 நாட்கள் முடியாத நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் இல்லத்தில் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் இப்படி அச்சுறுத்தும் முறையில் செயல்படுகிறது தி.மு.க அரசு. எவ்வளவு சோதனைகள், இடர்கள் வந்தாலும் அ.தி.மு.க அதை எதிர்கொள்ளும். இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களை தி.மு.க அரசு உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்” என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
Also Read: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!
உண்மையில் ரெய்டின் நோக்கம் என்ன எனத் தி.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணனின் கேட்டோம் “1996-லிருந்து 2001 வரை தி.மு.க ஆட்சியிலிருந்தது. அப்போது அ.தி.மு.க அரசால் தி.மு.க மீது தொடரப்பட்ட மேம்பால ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்ததா? அதன் பின் 2006 முதல் 2011 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க மீது நில அபகரிப்பு வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்குகளில் எல்லாம் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கண்டனம் தெரிவித்ததோடு அந்த வழக்கையும் ரத்து செய்தது நீதிமன்றம். ஆனால், தி.மு.க தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவே தண்டிக்கப்பட்டிருக்கிறார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே ஊழல் செய்த அமைச்சர்களின் பட்டியலை ஆதாரங்களுடன் இணைத்து ஆளுநரிடம் ஒப்படைத்தோம். ஆனால், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக மக்களிடம் சொன்னோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அ.தி.மு.க அமைச்சர்கள் எல்லோர்மீதுமா நடவடிக்கை எடுக்கின்றோம். ஊழல் செய்தவர்கள் மீதுதான் எனும்போது மற்றவர்கள் ஏன் பயப்பட வேண்டும்.
எங்களுக்குத்தான் காழ்ப்புணர்ச்சி என்றால் சமூகச் செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்களும் அல்லவா புகார் தெரிவிக்கிறார்கள் அவர்களுக்கு என்ன காரணம் இருக்கப்போகிறது. ஆட்சியிலிருந்தபோது அ.தி.மு.க அரசு செயல்படுத்திய பாரத் நெட் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அவர்களின் கூட்டணியைச் சேர்ந்த ஒன்றிய அரசே அந்த டெண்டர்களை எல்லாம் ரத்து செய்ததே அவர்களுக்கு இவர்கள் மீது என்ன காழ்ப்புணர்ச்சி இருக்கப்போகிறது?” என்ற கேள்விகளை முன்வைத்தவர்
சென்டில்மேன் என்ற நிறுவனத்தை வைத்து முறைகேடாகச் செவிலியர்களைப் பணி நியமனம் செய்தார்களே. ஆதாரங்களுடன் நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை எப்படி காழ்ப்புணர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையில் கடந்து போக முடியும். அதற்கு ஆதாரமும் இருக்கிறது. தங்கமணி, வேலுமணி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எல்லோர் மீதும் ஊழல் புகார் இருக்கிறது. அவையும் விரைவில் விசாரிக்கப்படும். தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது இருப்பது வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு என்பதால் ஆதாரங்களை அழிக்கவோ மறைக்கவோ வாய்ப்புகள் அதிகம். எனவேதான் தற்போது அவர் மீது முதலில் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. நிர்வாக ரீதியில் நடப்பவை எல்லாவற்றிற்கும் அரசியல் காரணம் கற்பித்தால் அதற்கு எல்லையே இருக்காது. தி.மு.க அரசின் நடவடிக்கையை மக்கள் புரிந்துகொள்வார்கள். யார் என்ன செய்தார்கள், அவர்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததும் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது ஊழல் புகார் சொல்லி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படிச் செய்தால் வேண்டுமானால் அதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செய்யப்பட்டது என்று சொல்லலாம். ஆனால், நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலிருந்தே இந்த நடவடிக்கையைத் தொடங்கிவிட்டோம். அடுத்தடுத்து அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை தொடரும். ஏனெனில் அ.தி.மு.க ஆட்சியில் பொறுப்பிலிருந்த அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் இருக்கிறது” அ.தி.மு.க அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் எனவும் திட்டவட்டமாகக் கூறினார்
source https://www.vikatan.com/government-and-politics/politics/reason-behind-it-raid-over-ex-minister-mrvijayabaskars-properties
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக