புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை திமுக தெற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் பரமசிவம். இவர் வெள்ளாளவிடுதி ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருக்கிறார். இவர் வெள்ளாளவிடுதி, மங்களாகோவிலில் உள்ள நேரடி கொள்முதல் நிலைய விவகாரங்களில் ஈடுபடுவதாகவும் இதனால், விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை ஒன்றியச் செயலாளர் அரசப்பனிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான், பரமசிவத்திடம் அரசப்பன் இதுகுறித்து கேட்க, '' இது எல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம்" என்று கூறி அரசப்பனை பரமசிவம் தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடிக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இதுபற்றி அரசப்பன் கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், திமுக ஒன்றியச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது, அரசப்பனை அவதூறாகப் பேசியது தொடர்பாகப் பரமசிவத்தின் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுக ஒன்றிய செயலாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.அரசப்பனிடம் இதுபற்றி கேட்டபோது,
" வெள்ளாளவிடுதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 7ஆண்டுகளாக எந்தவித பிரச்சினையுமின்றி நடக்குது. இந்த வருசம் அதைத் தானே நடத்தணும்னு திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பரமசிவம் திட்டம் போட்டு எல்லா வேலையும் பார்த்தாரு. காரணம் அதில் வருமானம் வருது. விவசாயிகள்கிட்ட இருந்து மூட்டைக்கு ரூ.40 வரை பணம் வசூலிக்கலாம் என்றெல்லாம் திட்டம் போட்டாரு. தானோ அல்லது தன்னுடைய பினாமி ஒன்றிய கவுன்சிலர்கள் தான் நடத்தணும்னு கோரிக்கை வச்சாரு. ஆனால், அதை விவசாயிகள் ஏத்துக்கலை. உடனே அவர் கலெக்டர்கிட்ட மனு கொடுத்து நேரடி கொள்முதல் நிலையத்தைச் செயல்பட விடாமல் நிறுத்திட்டாங்க.
கிட்டத்தட்ட 30 நாட்களுக்கும் மேலாகியும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால, நெல்மூட்டைகள் மழையில் நனைஞ்சு முளைக்கத் தொடங்கிருச்சு. இதையடுத்து விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தித் திறக்க வச்சோம். அவரோட முயற்சிக்குத் தடை ஏற்பட்டதாலும், சம்பாதிக்க முடியலைங்கிற ஆத்திரத்தாலும், என்னைத் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, செருப்பை எடுத்து அடிக்கவும் வந்தார். அவருக்கு விவசாயிகள் மீது எந்த அக்கறையும் இல்லை. காசு பணம் மட்டுமே முக்கியம். போராட்டம் நடத்தி தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்" என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலும், சில இடங்களைத் தவிர்த்து பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சியினர் கைகாட்டும் இடங்களில்தான் இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த 10ஆண்டுகளாகவே பெரும்பாலான இடங்களில் அதிமுகவினர் தேர்வு செய்த இடங்களில் இவை செயல்படுத்தப்பட்டு வந்தன. தற்போது திமுக ஆட்சி அமைந்த நிலையில், இவற்றை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் என திமுகவினரும், ஏற்கெனவே அமைந்த இடத்திலேயே நடத்த வேண்டும் என்று அதிமுகவினரும் முட்டி மோதிக்கொள்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விளைவித்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தத்தளிக்கின்றனர். இதில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்" விவசாயிகள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/case-filed-against-dmk-cadre-who-tried-to-attack-cpi-party-member
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக