Ad

வியாழன், 15 ஜூலை, 2021

பெட்ரோல்,டீசல்: தொடரும் விலை உயர்வுக்கு என்ன காரணம்? விதிக்கப்படும் வரிகள் என்னென்ன? முழு ரிப்போர்ட்

2021 - இந்த ஆண்டு இந்தியாவில் உயர்ந்துகொண்டே இருந்த இரண்டு விஷயங்கள். ஒன்று கொரோனா உயிரிழப்பு, மற்றொன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு. தற்போது கொரோனா உயிரிழப்பும் நோய்த்தொற்று பரவலும்கூட குறைந்துவிட்டது. ஆனால், பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் உள்ள சாமானிய மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் தலைநகர் டெல்லி முதல் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, தமிழ்நாடு என பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை ரூ.100 ஐத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 4-ம் நாள் தொடங்கி இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை 38 முறை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 10.51 ரூபாய் அளவுக்கும், ஒரு லிட்டா் டீசல் விலை 9.15 ரூபாய் அளவுக்கும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் முதல் தற்போது வரையில் சுமார் 60 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல்

இதனால், இக்கொடிய கொரோனா காலத்தில் வருமானமற்ற தங்களின் நிதிச்சுமை மேலும் அதிகரித்தும், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து விலைவாசி உயர்வு ஏற்படும் அபாய நிலையும், உருவாகியிருப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இப்படி, இந்த வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக என்ன இருக்கும்? எதனால் நாள்தோறும் இந்த கிடுகிடு விலை உயர்வு? என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

பெட்ரோல் விலை உயர்வுக்கான முதன்மைக் காரணங்கள்:

1) சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை :

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றத்துக்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றம் மிக முக்கியக் காரணமாகும். கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவி, விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தின. அதனால், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அனைத்துத் தொழில் துறைகளும் முடங்கின. அத்தியாவசிய பணிக்களுக்குத் தவிர, வாகனங்களின் பயன்பாடு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் வெகுவாகக் குறைந்தது. எனவே பெட்ரோல், டீசல் விற்பனையும் குறைந்தது. உலக நாடுகள் பலவற்றிலும் அவற்றின் தேவை குறைந்ததால், 2020-ல் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக, 2020 ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 19 டாலராகக் குறைந்திருந்தது.

crude oil

அதன் பின்னர் கச்சா எண்ணெய் விலை, 2020 அக்டோபரில், பேரல் ஒன்றுக்கு, 40.7 டாலராக இருந்தது. கடந்த பிப்ரவரி 16-ல், பேரல் ஒன்றுக்கு, 62.64 டாலராக அதிகரித்தது. கச்சா எண்ணெய்க்கான தேவை குறைவாக இருந்தபோதும், அதன் விலையை உயர்த்துவதற்கா 'எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு' (OPEC) கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 9.7 மில்லியன் பேரல் குறைத்தன. இதனால் தற்போது, 2021 ஜூலை 15-ம் நாள் நிலவரப்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 74.24 டாலராக மேலும் உயர்ந்துள்ளது.

2). தினசரி விலை நிர்ணயம்:

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அந்நிய செலாவணி விகிதங்களின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. குறிப்பாக, ஆரம்பத்தில் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை நி்ர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப்பட்டது. இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது.

petrol price

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை புதிதாக அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில், 2017-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதன் காரணமாக, தினசரி விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான மே மாதத்தில் மட்டும் 19 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3). மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் :

உலகிலேயே பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இங்கு அதிகபட்சமாக 69 சதவிகித வரி விதிக்கப்படுகின்றன. அதாவது அடக்க விலையை விட இருமடங்கு அதிமாக வரி விதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வரியின் மூலம் உயர்த்தப்படும் தொகையானது, தினசரி விலை நிர்ணயித்தின்படி மாநிலங்களுக்கு மாநிலம் சில பைசாக்கள் தொடங்கி, சில ரூபாய்வரை வேறுபடும்.

2021, ஜூலை மாதம் தலைநகர் டெல்லி நிலவரப்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 38.93 ரூபாய், டீசலின் அடிப்படை விலை, 41.41 ரூபாய் மட்டுமே. அப்படி இருக்கும்போது, அடக்க விலையைத் தாண்டி இரு மடங்கு அதிகமாக விலை வைத்து விற்பனைசெய்யக் காரணம் மத்திய, மாநில அரசின் வரிகள். இதுவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் மீது, மத்திய அரசு கலால் வரியும், மாநில அரசுகள் வாட் வரியும், கூடுதல் வரியும் விதிக்கின்றன.

> கலால் வரி: மத்திய அரசின் கலால் வரி, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் போக்குவரத்து செலவை ஈடு கட்டுவதற்காக விதிக்கப்படுகிறது. ஒப்பீட்டளவில், அதிகபட்சமாக மத்திய அரசின் கலால் வரி மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, 2014-2015-ல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த கலால் வரியை, தற்போது லிட்டருக்கு சுமார் ரூ.32.98 ஆக 3.5 மடங்காக உயர்த்தி வசூலிக்கிறது மத்திய அரசு. அதேபோல், டீசல் லிட்டருக்கு ரூ.3.56-ஆக இருந்த கலால் வரியை தற்போது ரூ.31.80-ஆகவும் உயர்த்தி வசூலிக்கிறது.

> டீலர் கமிஷன் : முகவர் தரகு விலை எனப்படும் டீலர் கமிஷன், பெட்ரோலியப் பொருட்கள், வாங்குவதற்கும் விற்பதற்குமான விலையில் செய்யப்படும் மாற்றம் ஆகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு டீலர் கமிஷன் சுமார் 3 முதல், 4 ரூபாய் வரை போகிறது.

> வாட் வரி & மதிப்புக் கூட்டு வரி : மாநில அரசின் சார்பில் விதிக்கப்படும் வாட் வரி. மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 2021 ஜூலை மாதக் கணக்கின்படி, பெட்ரோலுக்கு 15 சதவீதமும், டீசலுக்கு, 11 சதவீதமும் வாட் வரி விதிக்கப்படுகிறது. அதேபோல், பெட்ரோலுக்கு 13.02 ரூபாயும், டீசலுக்கு 9.62 ரூபாயும் மதிப்பு கூட்டு வரியாக தமிழ்நாடு அரசால் வசூலிக்கிறது.

வரி சலுகை

> செஸ் வரி: நேரடியாக விதிக்கப்படும் வரிக்கு மேல், கூடுதலாக விதிக்கப்படும் மறைமுக வரி தான் செஸ் வரி. இந்த வரித்தொகையானது விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு திட்டத்திற்காக செலவிடப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை மீது விவசாயத் துறைக்கான செஸ் வரியை மத்திய அரசு விதித்தது. அதாவது பெட்ரோல் மீது 2.30 ரூபாயும், டீசல் மீது 4 ரூபாயும் கூடுதலாக செஸ் வரி விதித்தது. அதேபோல், சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்கான செஸ் வரியையும் விதித்தது. இதன்மூலம், பெட்ரோலுக்கு 20.50 ரூபாயும், டீசலுக்கு 22 ரூபாயும் செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், முதற்கட்டமாக பெட்ரோலின் மூலமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து நம் நாட்டுக்கு கொண்டுவரப்படும் போக்குவரத்து செலவாக Ocean Freight எனப்படும் செலவுத்தொகை செலுத்தப்படுகிறது. அதன்பிறகு, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு தான் பெட்ரோல், டீசல், தார், மண்ணெண்ணெய் என இத பெட்ரோலிய பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த சுத்திகரிப்பு செலவும் பெட்ரோலின் அடிப்படை விலையில் அடங்கும். அதன் பிறகு தான், மற்ற வரிகள் அடங்குகின்றன. மேலும், டாலரில் தான் பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இதில் பெரும்பங்கு வகிக்கிறது.

Oil Rig

இதுபோன்று, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தினசரி விலை நிர்ணயம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் போன்றவைகள் தான் தற்போதைய பெட்ரோல் டீசல் விலையேற்றத்துக்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. கொரோனா பரவலுக்கு அடுத்தபடியாக, தற்போது இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை மிகக் கடுமையாக பாதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: `மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது தற்போது சாத்தியமில்லை’ - பி.டி.ஆர் சொன்னது சரியா?



source https://www.vikatan.com/government-and-politics/politics/a-detailed-analysis-on-petrol-and-diesel-price-hike

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக