Ad

ஞாயிறு, 25 ஜூலை, 2021

பட்டாக் கத்திகளும் படுகொலைகளும் இல்லா வடசென்னை வரலாறு! - சார்பட்டா பரம்பரை விமர்சனம்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தை முதல் பாதி இரண்டாம் பாதி என பிரித்துத்தான் விமர்சிக்க வேண்டும் !


ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூலோகம் படம் மேலோட்டமாக காட்டிய மெட்ராஸ் குத்துச்சண்டையை ஆழமும் நுணுக்கமுமாக, ரத்தமும் சதையுமாக அணுகும் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக சார்பட்டாவை வகைப்படுத்தலாம்.

ஆங்கிலேயர்களின் மூலம் அறிமுகமாகி, சென்னை சாமானிய மக்களின் பிரபல விளையாட்டாய் விளங்கிய பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி அந்த விளையாட்டை தங்களின் பெருமையாகவும் கெளரவமாகவும் கொண்டாடும் சார்பட்டா மற்றும் இடியப்ப பரம்பரைகளுக்கிடையே நிகழும் பரம்பரை போட்டியையும், இடியப்ப பரம்பரையிடம் பறிகொடுத்த சாம்பியன் கெளரவத்தை மீட்டெடுக்க ரங்கன் வாத்தியாரின் தலைமையில் தொடர்ந்து போராடும் சார்பட்டா பரம்பரையின் கதையையும் பேசுகிறது சார்பட்டா பரம்பரை. அந்த கலையை உயிர்மூச்சாய் சுவாசித்து வாழ்ந்த பல்வேறு மனிதர்களை அவரவருக்கான விதவிதமான உடல்மொழி, குணாதிசயங்கள் மற்றும் விருப்பு வெறுப்புகளுடன் திரையில் உயிர்ப்பித்திருப்பது தான் படத்தின் வெற்றி. தான் உயிர்ப்பித்த இந்த "கறுப்பர் நகரத்து" மனிதர்களின் மூலம் பல அடுக்குகளில் சமூக பாகுபாடு, அரசியல், சாதியம் பற்றியெல்லாம் குறியீடுகளாய் கதை சொல்கிறார் இயக்குநர் .

பா.ரஞ்சித் | Pa.Ranjith

இங்கிலீஸ் குத்து சண்டையின் வரலாறு, அந்த விளையாட்டின் நுணுக்கங்கள், ஒவ்வொரு சிறந்த விளையாட்டு வீரர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் அவரவர் தனித்திறன் என இன்றைய தலைமுறை அதிகம் அறிந்திராத பழைய மெட்ராஸின் பாக்ஸிங் விளையாட்டு மிக சிறப்பான முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, படம் நெடுகிலும் நிகழும் குத்துச்சண்டை போட்டிகள் படமாக்கப்பட்டிருக்கும் முறை. பாக்ஸிங் ரிங்குக்குள் நடைபெறும் காட்சிகளிலும், பயிற்சி காட்சிகளிலும் தான் சார்பட்டா பரம்பரையின் ஜீவன் ஜொலிக்கிறது !

காட்சிகளின் தரத்துக்கு அடிக்கொருத்தரம் ஹாலிவுட் படங்களின் ஆக்கத்தை உதாரணமாக குறிப்பிடுபவர்கள் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் ராக்கி படங்களின் குத்துச்சண்டை காட்சிகளுக்கு ஈடான தரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் குத்துச்சண்டை காட்சிகளின் தரத்தை பற்றி தாராளமாய் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் !

அதிலும் டான்ஸிங் ரோஸாக நடித்திருக்கும் ஷபீரும் கதாநாயகன் கபிலனாக ஆர்யாவும் சண்டையிடும் காட்சி வேற லெவல் ! கதாநாயக வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்ட தமிழ் சினிமாவில் துணை பாத்திரங்கள் நாயகனை மிஞ்சும் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் வடசென்னை ராஜனுக்கு பிறகு, சார்பட்டாவின் டான்ஸிங் ரோஸ் !

சார்பட்டா பரம்பரை

ஆர்யாவுடன் போட்டிக்கு ஒத்துக்கொள்வதில் தொடங்கி, ரிங்கினுள் நளினமான உடல்மொழியுடன் சண்டையிடத்தொடங்கி, ஆர்யாவின் குத்துகளினால் அதிர்ந்து களைத்தபோதும் கூட நடன பாணி உடலசைவை நிறுத்தாமல் சண்டையிட்டு தள்ளாடிச் சாயும் வரை ஷபீரை தவிர கதாநாயகன் ஆர்யா உட்பட பிரேமிலிருக்கும் யாரும் கண்களுக்கு தெரியவில்லை !

ஆங்கிலோ இந்திய கதாபாத்திரமான டேடி கெவின் கதாபாத்திரம் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று. அலட்சியமான உடல் மொழியுடன் பட்லர் இங்கிலீஸ் பேசி நடித்து கதையின் ஓட்டத்தை தீர்மானிக்கும் அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார் ஜான் விஜய்.

ஆங்கிலேய ஆட்சியின் போது குமாஸ்தாக்களாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவில் பணி புரிய வந்து, இந்திய மக்களுடன் வாழ்ந்து கலாச்சாரத்திலும் பழகி சுதந்திரத்துக்கு பிறகும் இங்கேயே தங்கிவிட்ட நடுத்தர வர்க்கத்து ஆங்கிலேயர்களும் ஒரு வகையில் புலம் பெயர்ந்த மக்களின் வலியை சுமந்தவர்கள் தான். சொந்த மண்ணையும் தவிர்த்து, இந்தியர்களாலும் "சட்டைக்காரர்கள்" என சற்றே ஒதுக்கிவைக்கப்பட்ட இந்த மக்களின் வரலாறும் சரியாக பதியப்படாத ஒன்று. இந்த ஆங்கிலோ இந்திய சமூகத்துக்கு தமிழ் சினிமாவின் மரியாதையாக, மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டேடி கெவின் கதாபாத்திரத்தை குறிப்பிடலாம்.

மகன் பாக்ஸிங் கற்றுக்கொள்ளக்கூடாது என அம்மா போடும் அலப்பறைகளினால் கபிலனை தன் மாணவனாக ஏற்றுக்கொள்ளாத சார்பட்டா பரம்பரை குரு ரங்கன் வாத்தியாரை மானசீகமாய் பூஜித்து, பாக்ஸிங் கனவுகளுடன் மட்டுமே வாழும் ஏகலைவ கபிலனாக ஆர்யா ! போட்டி காட்சிகளில் உடல் அமைப்பாலும், மொழியாலும் பாக்ஸிங் வீரனாகவே மாறியிருக்கும் ஆர்யா ரிங்குக்கு வெளியிலான காட்சிகளில் சற்றே தடுமாறியிருப்பது போன்ற தோற்றம்.

சார்பட்டா பரம்பரை

ரங்கன் வாத்தியாராக பசுபதியின் முகத்தில் ஒரு தலைமுறையின் அத்தனை வெற்றி வீழ்ச்சிகளையும் கண்டுவிட்ட நிதானம் ! பயிற்சி காட்சிகளில் அவரது கை அசைவுகள் ஒரு சிறந்த தொழில்முறை பாக்ஸிங் பயிற்சியாளரின் அசைவுகளை கண்முன்னால் நிறுத்துகின்றன.

தன் மகனுக்கு பாக்ஸிங் ஆசையை காட்டும் ஜான் விஜய்யிடம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி பொரிந்து தள்ளிவிட்டு, ரோஸிம்மா டின்னர் ரெடி என்று தன் கடமையையும் மறக்காத காட்சியில் அனுபமா குமார் அசத்தல் !

எழுபதுகளின் சூழலை காட்சிப்படுத்த, அந்த காலகட்ட திமுக அதிமுக ஆகிய கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகளையும், இரு கட்சிகளுக்கான பிரச்சனைகளையும் காட்சிப்படுத்தியிருப்பது தமிழுக்கு புதிது. மேலும் கதையின் நாயகன் சார்ந்திருக்கும் சார்பட்டா பரம்பரையின் குரு ரங்கன் வாத்தியார் திமுக ஆதரவாளர், எமெர்ஜென்சியை எதிர்க்கும் கண்டன தெருப்பேச்சு போன்ற அரசியல் காட்சிகள் கதை நிகழும் எழுபதுகளை உணர்த்த மட்டும் அமைக்கப்பட்டவையா அல்லது அந்த காலத்தின் முக்கிய அரசியல் நிகழ்வுகளை தன் இன்றைய அரசியல் நிலைப்பாட்டுக்கான குறியீடுகளாக்கும் கதைசொல்லியின் நோக்கமா என்பதும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று

தமிழ் சினிமாவுக்கான அத்தனை இலக்கணங்களிலிருந்தும் விலகி, ஒரு மிக சிறந்த பீரியட் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக நகரும் படம், இரண்டாம் பாதியில் பழிக்குப் பழி, சாராயம் என வழக்கமான தமிழ் சினிமாவின் கிளிஷேக்குள் சிக்கி கொள்கிறது! முதல் பாதியின் இறுதியில், கபிலன் வேம்புலியிடம் மோதும் போதே ஒரு முடிவை எட்டிவிட்ட கதையின் கமர்சியல் வெர்சன் போல நகர்கிறது இரண்டாம் பாதி ! சிறுவயதிலிருந்தே கபிலனுக்கு பாக்ஸிங் ஆசையை காட்டி ஊக்குவிக்கும் டேடி கெவினும் ஒரு சிறந்த சாம்பியன் தான் என ரங்கன் வாத்தியாரே முன்பாதியில் குறிப்பிடும் போது, கபிலனின் அம்மாவின் கட்டளையின் பேரில், ரங்கன் வாத்தியாரே ஒதுக்கிய நாயகன் கபிலனை மீட்டெடுக்கும் பீடி ராயப்பா கதாபாத்திரம் படத்துடன் ஒட்டவில்லை.

சார்பட்டா பரம்பரை

கபிலனின் தகப்பன் ரவுடியாக திசை மாறியதால் அவன் பாக்ஸிங் பக்கம் போகக்கூடாது என அழுது ஆர்ப்பரிக்கும் அம்மா, அதே காரணத்தை ஒரு பரம்பரையின் வீழ்ச்சிக்கே காரணமாக கூறும் ரங்கன் வாத்தியார் என கபிலனின் தந்தை பாத்திரம் படம் நெடுகிலும் மற்றவர்களின் வாய் வார்த்தைகளாகவே வந்து போவதும் ஒரு குறை. ஒரு சமூகம் அல்லது ஒரு குழுவை சார்ந்தவர்களில் ஒரு ஒற்றை மனிதன் வழி தவறுவதால் மட்டுமே அவன் சார்ந்த குழுவுக்கோ அல்லது சமூகத்துக்கோ பெரிய கெடுதல் வந்துவிடப்போவதில்லை.வழி தவறி அவன் செய்த காரியத்தின் வீரியமே பாதிப்பை நிர்நணயிக்கும். அப்படியான எந்த ஒரு பெரும் பாதிப்பும் படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

முதலிரவு அறையில் "மாரியம்மா" துஷாரா விஜயன் ஆடுவது குத்தாட்டம் அல்ல !...

பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என பெண்களுக்கு மட்டுமேயான சட்டதிட்டங்களை வகுத்துவைத்திருக்கும் சமூகத்தை உடைத்தெறியும் ருத்ரதாண்டவம் !!

கதாநாயக வளர்ச்சி வீழ்ச்சி, பரம்பரை போட்டி, சாதிய வேறுபாடு, என பல பிரச்சனைகளை பேசுவதாக தோன்றினாலும் ஜாதி மத பேதமெல்லாம் தாண்டி ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த கடைநிலை மனிதர்களின் எழுச்சியை காட்டும் படம் என வாதிடுவதற்கான சாத்தியங்கள் சார்பட்டா பரம்பரையில் அதிகம்.

"நீயெல்லாம் இங்க வரவே கூடாது... !", "மூட்டை தூக்கறவன் தான நீ ?", "மூட்ட தூக்கறவனெல்லாம் நம்மகிட்ட நின்னு பேசவே கூடாது", "இந்த வாய்ப்பெல்லாம் நமக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைச்சிடறது கிடையாது... இது நம்ம ஆட்டம் ! இது நம்ம காலம்", போன்ற வசனங்கள்,

வாத்தியார் ஏசியது பொறுக்காத பணக்கார சிஷ்யன் மிலிட்டரி கோச்சை வரவழைத்து பயிற்சி எடுப்பது, அவர்களின் மூலமே கபிலனுக்கு பிரச்சனைகள் எழுவது என, இது வர்க்கப்போராட்டத்தை பேசும் படம் என்பதற்கான குறியீடுகளே அதிகம்.

சார்பட்டா பரம்பரை

பல்வேறு கதைமாந்தர்களைப் போலவே படத்தின் ஆக்கத்திற்கு கேமராவும், கலை இயக்கமும் பெரும் துணை புரிந்திருக்கின்றன! சண்டைக் காட்சிகளின் சப்தங்களுக்கும் இடம் கொடுத்து அடக்கி அம்சமாய் வாசித்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.


தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக பட்டாக் கத்திகளும் படுகொலைகளும் இல்லாமல் வடசென்னையின் வரலாற்றையும் வாழ்வையும் பேசும் படமாக அமைந்திருக்கிறது சார்பட்டா பரம்பரை. ரிங்குக்குள் அடித்துக்கொள்ளும் இரு குழுக்களுக்கிடையே பரம்பரையாய் தொடரும் கொலை பழிதீர்ப்பு இல்லை ! ரிங்குக்கு வெளியே நிகழும் சண்டைகளும் கூட அடித்துப் போடு என்பதாக தான் நிகழ்கிறதே தவிர, கொன்று கருவறுக்கும் வெறியில்லை ! "இன்னிக்கு இவங்கிட்ட ஆடின பாரு அதான் ஆட்டம்... நீ தோக்கல வேம்புலி" என டான்ஸிங் ரோஸ் இறுதியாக பேசும் வசனம் அந்த மக்களின் அன்பையும், அரவணைப்பையும் உணர்த்துவதாகவே அமைந்திருக்கிறது.

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/sarpatta-parambarai-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக