Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

`ஆள் மாறாட்டம் மூலம் 24 வருடங்களாகச் சம்பளம் வாங்கிய நபர்!’ - மும்பை மாநகராட்சியில் அதிர்ச்சி

ஒரே பெயரில் இருக்கும் இரண்டு பேர், ஒரே துறையில் இருந்தால் குளறுபடி ஏற்படுவது வழக்கம். அது போன்ற ஒரு குளறுபடியில் மும்பை மாநகராட்சியில் பணியாற்றுவதாகக் கூறி ஒருவர் 24 வருடங்களாகச் சம்பளம் வாங்கி ஏமாற்றியிருக்கிறார். சோபன் மாருதி சபாலே என்பவர் 1989-ம் ஆண்டு மும்பை மாநகராட்சியின் எஃப் தெற்கு வார்டில் பில்டிங் சூப்பர்வைசராக வேலைக்குச் சேர்ந்தார்.

1993-ம் ஆண்டு அதே பெயரில் ஒருவர் பைகுலாவிலுள்ள தண்ணீர்துறையில் கார்டன் பராமரிப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், இரண்டு பேருக்கும் ஒரே பெயர், ஒரே பிறந்த தேதி, ஒரே பள்ளிச் சான்றிதழ் என எல்லாம் ஒன்றாக இருந்தன. இதனால் இரண்டு பேருக்கும் மாநகராட்சி நிர்வாகம் சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தது. அதாவது 1989-ம் ஆண்டு சேர்ந்த சோபன் என்று நினைத்து 1993-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுவந்தது. உண்மையில் 1993-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த சோபனுக்கு குறைவான சம்பளமே கிடைக்க வேண்டும். ஆனால் ஆள் மாறாட்டம் செய்து 1993-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த சோபன் 24 ஆண்டுகளாகச் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்.

மும்பை மாநகராட்சி கட்டடம்

2017-ம் ஆண்டுதான் மாநகராட்சி ஊழியர் ஒருவர் இரண்டு பேருக்கும் ஒரே பெயர், பிறந்த தேதி மற்றும் படித்த பள்ளி, பள்ளியில் இருந்து வெளியேறிய வருடம் போன்றவை ஒன்றாக இருந்ததைக் கண்டுபிடித்தார். இது குறித்து உடனே உயரதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். உடனே இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உடனே இரண்டு பேரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. வேலையில் சேரும்போது தாக்கல் செய்த ஆவணங்களைக் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். 1989-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த சோபன் உடனே ஆவணங்களைக் கொண்டு வந்து தாக்கல் செய்தார். ஆனால் 1993-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த சோபன் விசாரணை நடப்பதைத் தெரிந்து கொண்டு சான்றிதழ்களைக் கொண்டு வந்து தாக்கல் செய்யவில்லை.

அதோடு கார்டன் பராமரிப்பு வேலைக்கு வருவதையும் நிறுத்திவிட்டார். இதனால் பணியில் சேரும்படி கூறி 1993-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த சோபனுக்கு மும்பை மாநகராட்சி தண்ணீர்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த நோட்டீஸ் 1989-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த சோபனுக்கு சென்றது. உடனே அவர் நேரில் சென்று அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் அளித்தபோதுதான் 1993-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த சோபன் ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

கைது

24 வருடங்களில் ரூ.43.31 லட்சம் அளவுக்கு மோசடி செய்து சம்பளமாக வாங்கியுள்ளார். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து 1993-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த சோபனை கைதுசெய்து மேற்கொண்டு விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டுவருகிறது. மும்பை மாநகராட்சி துப்புரவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் வேலைக்குச் செல்லாமல் வேறு ஓர் ஊழியரைக் குறைந்த சம்பளத்துக்கு நியமித்துவிட்டு, வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதற்கு அதிகாரிகளும் துணை போகின்றனர். துப்புரவுத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். அவர்களில் பாதிப் பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: `மும்பை பார்ட்டிகளில் 'போதை கேக்' சப்ளை'- மனோதத்துவ டாக்டர் கைது!



source https://www.vikatan.com/news/crime/mumbai-man-arrested-for-cheating-as-a-corporation-employee

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக