Ad

புதன், 14 ஜூலை, 2021

இது கூட ஒரு மாதிரி ஜாலியா தான் இருக்கு..ஆனா...! - தனி வீட்டு புராணம்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

'நீராழி அரங்கிற்குள் நுழைந்தாள். நீள்வட்டப் பளிங்கு நீர்குடுவை அவளுக்காகக் காத்திருந்தது. அதில் நாற்பத்தியிரண்டு நறுமணப் பொருட்கள் கலக்கப்பட்ட மணநீர் நிரப்பப்பட்டிருந்தது. பொற்சுவை அருகில் வந்தாள். பக்கவாட்டில் அமைந்திருந்த படிமேல் ஏறி வலதுகால் நீட்டி பெருவிரல் கொண்டு நீரினை அசைத்தாள். சிற்றலைகள் விளிம்பிற் போய் முட்டித் திரும்பின'

ச்ச.. எவ்வளவு நேர்த்தியான வரிகள். படிக்க படிக்க அந்த நீர்குடுவைக்குள் குதித்து விட ஆசை எழுகிறது.

அலுவலகத்திற்கு வேறு நேரமாகி கொண்டிருக்கிறது. நகராமல் நான் பாட்டிற்கு பாரி, கபிலர், நீலன், மயிலா என்று வேல்பாரி கதையின் மாந்தர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கிறேன்.

Representational Image

இதில் பொற்சுவை குளிக்கும் மணநீர் மீது ஏக்கம் வேறு. கிடைத்ததோ இந்த ஊரின் உப்பு தண்ணீர் தான். ஒருவாரமாக தண்ணீர் மாற்றி ஊற்றியதில் முகப்பருக்கள் என்னைத் தேடி வருகின்றன. இந்த ஊர் நீரை ஏற்றுக்கொள் என்று முகத்திடம் கெஞ்சி கொண்டிருக்கிறேன்.

வீட்டில் இருந்திருந்தால் அம்மா விரட்டிக் கொண்டே இருந்திருப்பார். நேரமாச்சு குளி.. நேரமாச்சு தலை சீவு.. நேரமாச்சு சாப்பிடு..

நானோ தனி வீட்டில் இப்படி அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருக்கிறேன். தங்கையோ, அம்மாவோ இருந்திருந்தால் நிச்சயம் இந்நேரம் கதை புத்தகம் படிக்க விட மாட்டார்கள்.

ஏன் தனி வீட்டில் இருக்கிறேன் என்கிற கதை வேண்டுமா... தனி வீட்டின் அனுபவங்களை மட்டுமே பகிர தானே இந்த கட்டுரையை தொடங்கினேன்.

சரி சுருக்கமாக சொல்வதென்றல் வெளியூரில் வேலை. ஹாஸ்டல் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. உறவினர்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு காலியானது. என்னுடன் வேலைக்குச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் நானும் தங்கிக் கொள்ள முடிவெடுத்து முன்பணம் கொடுத்தாயிற்று.

Representational Image

கடைசி சமயத்தில் அவள் பின் வாங்கிவிட்டாள். நினைத்திருந்தால் அப்பொழுதாவது விடுதிக்கு மாறியிருக்கலாம். கிட்டத்தட்ட அதே செலவு தான், பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை. அவ்வப்போது என் குடும்பம் வந்தால் தங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

சரி ஒரு கை பார்த்து விடலாம் என்று புகுந்துவிட்டேன் தனி வீட்டில்!

'நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே..'

விடிந்தும் விடியாமலும் இருக்கும் வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டு இசையோடு அமர்ந்திருப்பதில் எத்தனை அமைதி கலந்த ஆனந்தம். இந்நேரம் என் வீட்டில் இருந்திருந்தால் அம்மா ராசிபலனையோ அப்பா செய்தியையோ போட்டிருப்பார்கள். என்ன அதிர்ஷ்டமோ என் காதில் எதிர்மறை வார்த்தைகளே வந்து விழும். இப்பொழுது அந்த சங்கடங்கள் இல்லை.

நான் சொல்வதை மட்டும் எனக்கு கொடுக்கும் என் தனி வீடு. என்னதான் என் குடும்பத்தோடு பாசம் இருந்தாலும் சுயநலமாக அனுபவித்தேன் தனிமையை.. நினைத்த நேரத்தில் பாடலாம், ஆடலாம், புத்தகம் படிக்கலாம், வாக்குவாதங்கள் இல்லை தேவையற்ற சத்தங்கள் இல்லை.. இது கூட ஒரு மாதிரி ஜாலியா தானா இருக்கு என்று தான் போனது ஒரு வாரம்.

உணவகத்திற்கு செல்வது குஷியானதே.. ஆசையாக எதிர்பார்த்து மகிழ்ச்சியோடு போவேன். ஆனால் இப்பொழுது சாப்பிட வேறு வலியில்லாமல் திணிக்கப்படுவதாய் தோன்ற ஆரம்பித்தது.

Representational Image

என் வீட்டின் சமையல் அறையை தயாராக்கித் தந்தனர். எனக்கு மட்டும் சமைப்பதால் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் இஷ்டத்திற்கு சமைக்கலாம் என்றாலும் சமையல் செய்தாலே பாத்திரங்கள் சேர்ந்து விடுகிறது.. எந்நேரமும் ஏதாவது வேலை இருந்த வண்ணமானது. இதில் வீட்டை பராமரிக்கும் வேலையும் சேர்ந்து கொண்டது.

அலுவலக வேலையை விட இந்த வேலைகளை செய்யும் பொழுது தான் திக்கு முக்காடி போனேன்.

நான் மட்டும் தான் இங்கு இருக்கிறேன் என்று மகிழ்ந்த தருணங்கள் பல இருந்தும் நான் தனியாக இருக்கிறேன் என்ற உணர்வு மேல் எழ தொடங்கியது.

பேய் நம்பிக்கையெல்லாம் ஒன்றும் கிடையாது. இருந்தால் தான் என்ன அதுபாட்டிற்கு ஒரு புறம் இருக்கட்டும்.

மேல் வீட்டில் இருக்கும் உறவினர் பாட்டியை தூங்கும்பொழுது மட்டும் கீழே வந்து படுத்துக்கொள்ள சொன்னேன். திருடன் வந்தால் கூட நான் தான் பாட்டியை அவனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் எனினும் ஒரு மனித வாசம் அருகில் இருக்க பாட்டியின் துணையோடு இருந்தேன்.

"எங்க இருக்க வீட்டுக்கு வந்துட்டிய?"

கேட்க பல குரல்கள் அலைபேசியில் தொடும்.

"வந்துட்டேன் மா.. "

"சாப்டியா.."

"சாப்ட்டேன்.. தினம் கேப்பியா" சலித்துக் கொண்டு வைத்து இணைப்பை துண்டித்தேன்.

Representational Image

எப்படிதான் இப்படி அழுக்கு துணிகள் சேர்ந்து கொண்டே போகிறதோ.. சரி இன்று துவைத்து விடலாம் என்று ஊறவைத்து விட்டேன். துணிகளைத் துவைத்து காய வைத்துவிட்டு வந்தால் சமைப்பதற்கு நேரமில்லை. கடையில் வாங்கிக் கொள்ளலலாம் என்று திட்டமிட்டு குளித்து விட்டு கிளம்பினேன். கடையின் வாசல் வரை சென்றுவிட்டேன் ஏனோ உள்ளே சென்று தனியாக அமர்ந்து சாப்பிட இன்று மனம் விரும்பவில்லை.

பேருந்திற்கு கிளம்பிவிட்டேன்.

'என்ன சாப்பிட்டியான்னு கேக்க கூட யாருமே இல்லை' ஒரு மனம் இப்படி நினைக்க 'நம்மள அக்கறையா விசாரிக்கரவங்கள சும்மா சும்மா கேக்காதிங்கனு சொல்லிட்டு இப்போ என்ன' இன்னொரு மனம் திட்டியது.

மாயக்கார மனது!

ஆறுதல் அளிக்க முடியாத காரணம் இல்லாத அழுத்தம் உள்ளுக்குள் என்னோடு பேருந்தில் பயணித்து வந்தது.

'வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
ஆராரிராரோ'

பேருந்தில் ஓடிக்கொண்டிருந்த இந்த பாட்டின் வரிகள் எதை உடைத்ததோ கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது.

Representational Image

அய்யோ எல்லாரும் என்னையே பாக்கிறாங்களே.. இந்த மாஸ்க் கொஞ்சம் பெருசா இருந்தா கண்ணுக்கும் சேர்த்து போட்டிருக்கலாம். நகைத்தும் கண்ணீரை விழுங்கியும் அழுகையை மறைத்து கொண்டிருக்கும்பொழுது அலைபேசி துடித்தது.

"கண்ணு, நான் அத்தை பேசுறேன்டா.. ஒரு மாசமா ஊர்ல தான் இருக்கியாம். வீட்டுக்கு வரமாட்டியா.. கூப்டாதான் வருவியா.. சாயங்காலம் இங்க வந்து சாப்பிட்டு போ"

"வேணாம் அத்தை.. உங்களுக்கு ஏன் சிரமம்"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ஆபீஸ் முடிஞ்சி பஸ் விட்டு இங்கயே இறங்கிகோ.. சாப்டுட்டு பேசிட்டு இருந்துட்டு மொள்ள போய்கலாம்"

இந்த வாழ்க்கை அவ்வப்பொழுது ஆச்சர்யமானது தான்!

நாளை முதல் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு விடுமுறை. ஊருக்குச் செல்ல போகிற மகிழ்ச்சி தாளவில்லை.

என் வீட்டைச் சுற்றி நோக்கினேன். நான் இல்லாமல் மூன்று நாள் என் வீடு என்ன செய்யுமோ..

வீட்டில் நிறைய தூசி படிந்திருந்தது. நீர் போட்டு துடைக்க ஆரம்பித்தேன். அங்கே ஊரில் வீட்டை துடைப்பதெல்லாம் என் வழக்கம் இல்லை. எப்பொழுதாவது செய்வேன்.

இது என்னை மட்டும் தாங்கும் வீடு. நான் சுத்தம் செய்ய மாட்டேனா என ஏங்கி கிடக்கும் தரையையும் சுவரையும் பார்த்தேன்.

தலை வாரும் பொழுது உதிர்ந்து கிடந்த ஒன்றிரெண்டு முடிகள்.. துடைத்து வீசிய துண்டு.. கழட்டி போட்டிருந்த கம்மல்கள்.. பிரித்து வைத்திருந்த பொட்டலங்கள்.

என் ரேகையின் அழுக்கு மட்டும் படிந்திருந்த திட்டுகளை சுத்தமாக துடைத்தேன். நான் வைத்ததை வைத்த இடத்தில் பத்திரமாக வைத்திருக்கிறதே.

இது நிரந்தரம் இல்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்துவிட்டால்.. மனித வாசனையை தேவையான பொழுது நுகர்ந்து கொண்டால்.. விரல் நீட்டி தொடும் தூரத்தில் உறவினர்கள் இருந்துவிட்டால்... தனிமையில் இருப்பது கூட ஒரு கலையே!!

-செ. ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-a-lone-girl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக