Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

காவிரி விவகாரம்; பாஜக தலைமைக்கு செக் வைக்க நினைக்கும் எடியூரப்பா!

மேக்கேதாட்டு அணை விவகாரம் தான் தற்போது தென் மாநிலங்களிலும் தலைநகர் டெல்லியிலும் பற்றி எறியும் விஷயமாக இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசியலில் இருந்து பிரிக்க முடியாத விஷயம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அது காவிரி தான். எந்த கட்சி ஆட்சி நடத்தினாலும் யார் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்கள் பிரதானமாக கையில் எடுக்கும் ஆயுதம் காவிரி. இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காவிரி நதிநீர் விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு பிறகு சற்று அமிழ்ந்து போயிருந்தது. அதை காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை என்ற விவகாரம் மூலம் மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

மேக்கேதாட்டு

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விவகாரம் நீரு பூத்த நெருப்பாக இருந்தபோதும் கூட தற்போது அதனை ஊதி மீண்டும் கொழுந்து விட்டு எரியச் செய்திருக்கிறார் அவர். கர்நாடக அரசியலில் ஏதாவது ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியே தீரவேண்டும் என்ற நிலைமை அவருக்கு ஏற்பட்டதுதான் இதற்குக் காரணம்கர்நாடகா முதல்வராக எடியூரப்பா தொடர்ந்து இருப்பதை அம்மாநில பாஜகவினர் விரும்பவில்லை என்ற பேச்சுகள் தான் இதற்கு மிகப் பிரதான காரணம். அவர் தனது மகனான விஜயேந்திரவை தனக்குப் பிறகு அரசியல் வாரிசாக அம்மாநிலத்தில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த வாரம் பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநில எம்எல்ஏக்கள் வெளிப்படையாகவே முதல்வரை இந்த விவகாரம் தொடர்பாக விமர்சித்தனர்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Also Read: ‘டெண்டருக்காக மோதும் எம்.எல்.ஏ-க்கள்’ முதல் ‘அண்ணாமலைக்கு எதிரான நிர்வாகிகள்’ வரை:கழுகார் அப்டேட்ஸ்

டெல்லி தலைமையில் இருந்தும்கூட எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எடியூரப்பாவை மாநில கவர்னர் போன்ற கௌரவ பதவிகளில் அமர்த்தி விட்டு முதல்வர் பதவிக்கு வேறு யாரையாவது நியமிக்க தலைமை ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எடியூரப்பாவும் வயதை காரணம் காட்டி தனது பதவி பறிக்கப்பட்டால்கூட தனது மகனின் எதிர்கால அரசியலுக்கு சில ஆதாயங்களை அவர் மத்திய பாஜக தலைமையில் இருந்து எதிர்பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தான் கடந்த சில வாரங்களாக மேக்கேதாட்டு அணை விவகாரத்தை மிக மூர்க்கமாக கையாண்டு வருகிறார் அவர். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்திப்பது பிரதமரை நேரில் சந்திப்பது தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுவது என அடுத்தடுத்து எடியூரப்பா இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டுவதற்கு காரணம் மேக்கேதாட்டு அணை விவகாரத்தைக் காரணம் காட்டி மத்திய பாஜக தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதுதான். மேக்கேதாட்டு அணைக்கு நிச்சயம் மத்திய அரசால் அனுமதி கொடுக்க முடியாது என தெரிந்திருந்தும்கூட எடியூரப்பா இதனை தீவிரமாக செய்வதற்குக் காரணம் மாநிலத்திலும் பாஜக ஆட்சி மத்தியிலும் பாஜக ஆட்சி ஆனால் மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு உதவவில்லை என்ற எதிர்மறை பிரசாரத்தை மேற்கொண்டு கர்நாடக மாநிலத்தில் பாஜகவிற்கு ஒருவித நெருக்கடியை உருவாக்குவதற்காகத்தான் எடியூரப்பா கவனமாக காய்களை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது.

காவிரி ஆறு

முதல்வர் பதவியை உதறச் சொல்லி டெல்லி தலைமை அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் பகடைக்காயாகப் பயன்படுத்த அவர் வகுத்து இருக்கக்கூடிய முக்கியமான வியூகம் தான் இந்த மேக்கேதாட்டு அணை விவகாரம். இதை உறுதிப்படுத்தும் வகையில் காவிரியில் கர்நாடக அரசிற்கு உரிமை இருக்கிறது மேக்கேதாட்டு அணை 100% கட்டப்படும் என கர்நாடக மக்களுக்கு தான் உறுதி அளிப்பதாகப் பிரதமரை சந்திப்பதற்கு முன்பு அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார். ஆனால் சட்டரீதியாக அதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. முழுக்க முழுக்க தனது எதிர்கால அரசியலுக்காக டெல்லி பயணம் மேற்கொண்ட எடியூரப்பா அதனை நேரடியாக மேக்கேதாட்டு அணை விவகாரத்துடன் இணைத்துக் கூறுகிறார். மத்திய அரசுக்கு ஒருவித அழுத்தத்தை உருவாக்குவதும் தனது சொந்தக் கட்சியான பாஜகவின் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தான் என மிகத் தெளிவாகத் தெரிவதாக மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். பாஜக தலைமை எடியூரப்பாவிற்கு அடிபணிகிறது அல்லது எடியூரப்பாவின் மேக்கேதாட்டு வியூகம் வீழ்ச்சி அடைகிறது என்பதாகத்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

(டெல்லியில் இருந்து நமது சிறப்பு நிருபர்)



source https://www.vikatan.com/news/politics/is-yeddiyurappa-facing-political-issue-in-karnataka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக