Ad

திங்கள், 19 ஜூலை, 2021

ஏறுவதும் இறங்குவதுமாய் கொரோனா பாதிப்பு! - தளர்வுகளுடனான ஊரடங்கில் நாம் செய்ய வேண்டியது என்ன?

உலகின் பெரும் வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகளைப் புயலெனப் புரட்டிப் போட்டது கொரோனா பேரிடர். உலகளவில் இதுவரை 19.12 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 41.06 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் 17.42 கோடி மக்கள் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகிறது. தொற்றின் பாதிப்பு அதிகரிப்பதும் பின் குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்று கொரோனா பேரிடருக்கு ஒரு முடிவே இல்லாது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முதல் அலையில் பெரும் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், இரண்டாம் அலையினது பாதிப்பு யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. மருத்துவமனையில் படுக்கைகளுக்காக மக்கள் அல்லாடுவதையும். படுக்கைகள் கிடைக்காது மருத்துவமனை வாசலில் உயிரிழந்த கொடுமைகளையும் காண முடிந்தது.

கொரோனா இரண்டாம் அலை

பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இரண்டாம் அலையின் தாக்கம், அரசின் பல்வேறு நடவடிக்கைகளினாலும், மருத்துவர்களின் கடுமையான முயற்சிகளினாலும் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைவதை அடுத்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மக்களின் நலனுக்காக பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இந்தியாவில் உருவான டெல்டா வகை வைரஸ்தான் இரண்டாம் அலையில் பெரும் பாதிப்புகளுக்குக் கரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். `இந்த வகை டெல்டா வைரஸ் அதிக வேகத்தில் பரவக்கூடியது. இதுவரை இந்திய மட்டுமில்லாது உலகளவில் 104 நாடுகளுக்கு இவ்வகை வைரஸ் பரவியுள்ளது என்றும், சமீபகாலமாக உலகளவில் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு டெல்டா வகை வைரஸ்தான் கரணம் என்றும், பல உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸாக இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் இருக்கும்' என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தளர்வுகள் வழங்கியதை அடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாகக் கடைகளுக்கும், வெளியிடங்களுக்கும் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காசிமேட்டிலும், தி-நகரிலும் கூடிய மக்கள் கூட்டம் இதற்கு ஒரு சிறு உதாரணம். சரியான தனிமனித இடைவெளியைப் பின்பற்றாது, முகக்கவசங்களை அணியாததும் இப்படி கூட்டம் கூட்டமாகச் சுற்றுவது குறைந்துள்ள கொரோனா பாதிப்பை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். `அளவுக்கு அதிகமான தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகிறது. கொரோனா தொற்று குறைந்துள்ளதே தவிர முடிவுக்கு வரவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், வழிபாட்டுத் தளங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் கடைப்பிடிப்பது கிடையாது. இரண்டாம் அலையில் தாக்கம் குறைந்துவரும் நிலையில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களே கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும். கட்டுப்பாடு நடவடிக்கைகளினால் மூன்றாம் அலையைத் தடுக்க முடியவில்லை என்றாலும் பெரும் பாதிப்பைக் குறைக்க முடியும்' என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது

டி.நகர் மக்கள் கூட்டம்

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா இரண்டாம் அலையில் தாக்கத்தில் பாதிப்பு 36,000-க்கும் அதிகமாகச் சென்ற தொற்று எண்ணிக்கை தற்போதைய நிலையில் 2,100-க்கும் கீழே குறைந்துள்ளது. இருந்த போதிலும் தஞ்சாவூர், கோவை, ஈரோடு, சேலம் போன்ற சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்த மாவட்டங்கள் மட்டுமில்லாது சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது. இரண்டாம் அலையின் தாக்கமே தமிழகத்தில் முடிவுக்கு வராத நிலையில் பல்வேறு தளர்வுகளை வழங்கியிருப்பது பாதிப்பை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் மூன்றாம் அலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா மூன்றாம் அலை தொடர்பாகத் தமிழக அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினேன். " ஒரு தொற்று நோய் பரவலைப் பொறுத்தவரைத் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதும் மீண்டும் குறைவதும் பிறகு அதிகரிப்பதும் உலகளவில் வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். மூன்றாவது அலை உருவாகாமல் இருக்க அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட அளவில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். இந்தியளவில் அதிகப்படியான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். தொற்றின் எண்ணிக்கை குறைந்தபோதிலும் அரசு பரிசோதனையின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை. ஒருவேளை, மூன்றாவது அலை வந்தாலும் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படாது, நிலைமையைச் சமாளிக்க அனைத்து வகையான மருத்துவ கட்டமைப்புகளும் தயார்நிலையில் உள்ளது'' என்றார்.

ராதாகிருஷ்ணன்

மேலும், ``பொதுமக்களின் நலனுக்காக அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. அதை மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்கள் அணியாது, சமூக இடைவெளிகளைப் பின்பற்றாது இருப்பதை நம்மால் காண முடிகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாது இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது. தற்போது மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள், விரைவில் தமிழகத்தில் ஐந்து கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மூன்றாவது அலை குறித்து மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை, அதே நேரத்தில் கவனக்குறைவாகவும் இருந்துவிடக்கூடாது" என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாகத் தொடர்ந்து பல கருத்துக்களைக் கூறிவரும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியிடம் பேசினேன். " தமிழகத்தில் இரண்டாம் அலையின் தாக்கம் முழுமையாகக் குறையாத நிலையில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு வழங்கியிருப்பது அறிவியல்பூர்வமான நடவடிக்கை கிடையாது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் நோய்ப் பாதிப்பு தன்மைக்கு ஏற்ப மட்டுமே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று குறைந்தளவு உள்ள மாவட்டங்களுக்கும், தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்குவது நிலைமையை மோசமடைய செய்யும். தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகளைச் செய்வது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், உருமாறிய கொரோனாவை கண்டறிய மரபியல் பரிசோதனைகளை அதிகரிப்பது மிக முக்கியம்" என்று கூறினார்.

மருத்துவர் புகழேந்தி

தொடர்ந்து பேசியவர், ``எந்தளவுக்கு விரைந்து நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துகிறோமோ, அந்த அளவு தொற்று பரவலை விரைந்து கட்டுப்படுத்த முடியும். பேருந்துகளிலும், பொது இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெரும்பாலும் எந்த நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகளையும் காண முடிவது கிடையாது. அங்கு அரசு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். கோவை போன்ற தடுப்பூசி அதிகம் எடுத்துக்கொள்ளும் மாவட்டங்களில்கூட தொற்று குறையாது இருக்கிறது. அங்கு டெல்டா அல்லது டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பரவல் உள்ளதா என்பதைக் கண்டறிய மரபியல் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். நோய் பாதிப்பு தன்மைகளுக்கு ஏற்ப மாவட்டங்களுக்குத் தளர்வுகளை வழங்க அரசு முன்வர வேண்டும்'' என்று கூறினார்.

Also Read: கொரோனா தடுப்புப் பணிக்காக 23,123 கோடி; - தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அரசு வழங்கியுள்ள தளர்வுகள் மக்களின் நன்மைக்காக மட்டுமே. எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றாது மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றக் கூடாது என அரசு அறிவுறுத்துகிறது. முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதும், உங்களின் வாய்ப்பு வரும்போது தடுப்பூசி எடுத்துக்கொள்வதும் மட்டுமே கொரோனாவை எதிர்கொள்ளும் ஆயுதம்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/corona-infection-count-is-increasing-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக